ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்கள் » Sri Lanka Muslim

ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்கள்

550fd-rajini101

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fouzer Mahroof


“நெருக்கடிகள் நிறைந்த ஒரு சூழலிலே ஓர் அறிவுஜீவியின் சமூகப் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜனி திராணகம எடுத்துக்காட்டாக அமைகிறார். ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது, விடுதலைக்காக முன்வைக்கப்படும் சிந்தனைகளையும், மார்க்கங்களையும் பற்றி எவரும் கேள்வி கேட்பது இல்லை. எவை எல்லாம் எம்முன் தீர்வுகளாக எழுச்சி பெற்று நிற்கின்றனவோ, அவற்றினை மாத்திரம் முன்னிறுத்தி, அவை காட்டுகின்ற பாதையினையே பின்பற்றி, விடுதலையினைத் தேடுவது எமது பழக்கமாக இருக்கிறது. இங்கு புத்தாக்கச் சிந்தனைக்கும், அரசியல் அறத்துக்கும் அதிக இடம் இல்லை. எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி, மற்றையவர்களைப் பற்றி எல்லாம் நாம் சிந்திப்பதில்லை. எமது விடுதலைக்காக நாம் முன்வைக்கும் கருத்துக்கள், கோட்பாடுகள், எமது விடுதலைப் பாதை என்பன, எம்மத்தியில் வாழும், எம்மைச் சுற்றி வாழும் மற்றைய சமூகங்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றி நாம் ஆராய்வதில்லை. இவ்வாறான ஒரு சூழலிலே ஓர் ஆய்வாளனின் பணி என்ன என்ற கேள்வி எழுகிறது.

எம்முன் எழுச்சி பெற்று நிற்கின்ற, எமது அரசியல் எதிர்காலம் குறித்து முடிந்த முடிபாக தெரிகின்ற தீர்வுகளை மாத்திரம் ஒரு ஆய்வாளர் வலியுறுத்த வேண்டும் என்ற கருத்து அபத்தமானது. நெருக்கடியான தருணங்கள் எம்மிடம் இருந்து புதிய சிந்தனைகளையே கோருகின்றன. இந்தத் தருணங்களிலே, ஆய்வாளனின் கடமை, சமூகத்திலே பிரபலமாக இருக்கின்ற அல்லது செல்வாக்குப் பெற்று இருக்கின்ற கருத்துக்கள் எந்த அளவுக்கு நியாயத் தன்மை கொண்டுள்ளன என்பது பற்றி ஆராய்ந்து, அவ்வாறான கருத்துக்களுக்கு அறம் சார்ந்த, நீதி சார்ந்த பதில்களை முன்வைப்பதாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம் ஆய்வாளர் சமூகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்கிறார் என்பது அல்ல; மாறாக, சமூகம் தன்னைத் தனது கூட்டுச் சுயநல மனப்பான்மையில் இருந்து விடுவித்து, சமூகத்திலுள்ள எல்லோரும் அறிவுஜீவுகள் என்ற நிலையில் இருந்து சிந்திக்கவும், செயற்படவும், விடுதலையினைத் தேடவும் ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும்.

இவ்வாறான ஒரு சிந்தனையினைத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்தவாறு மேற்கொண்ட ஒரு புத்திஜீவியே ராஜனி திராணகம. முறிந்த பனை தமிழ் சமூகத்தின் மீது கொண்டுள்ள கரிசனை இவ்வாறான பரந்துபட்ட ஒரு மனிதநேயத் தளத்திலிருந்தே எழுகின்றது. இந்தக் கரிசனையே மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களாகிய ராஜன் ஹூலையும், கோபாலசிங்கம் சிறீதரனையும், ராஜனியின் மறைவின் பின்னர் 20 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து போரின் போது இலங்கையிலே இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பக்கச்சார்பற்ற முறையில் வெளிக்கொண்டு வருவதற்குத் தூண்டியது.”
-Mahendran Thiruvarangan
————————————————————————-
”அந்தக் கோழைகள் பின்பக்கமாக நின்று கொண்டு அவரது பெயர் சொல்லி அழைத்தனர். அவர் சைக்கிளில் இருந்தபடியே திரும்பி அவர்களைப் பார்த்தார். அவரை ஒரு துப்பாக்கி கொலைவெறியோடு குறி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு மருத்துவராக, இயக்க ஆதரவாளராக காயம்பட்ட இயக்க உறுப்பினர்களிற்கு சிகிச்சை அளித்தவரை நோக்கி அவர்கள் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தார்கள். தனது வெற்றுக்கைகளினால் நெற்றியை மறைக்க முயன்றவரை அந்த மிருகங்கள் எதுவிதமான சலனமும் இன்றி கொன்றனர். போராட்டம் என்றால் கொலை செய்வது தான் என்பதை இயக்கத்தின் முதலாவது விதியாக வைத்திருப்பவர்களிற்கு ஒரு நிராதரவான பெண்ணை கொல்கிறோம் என்ற தயக்கம் ஏன் வரப்போகிறது.

ராஜினி தனது நண்பர் ஒருவருக்கு எழுதினார். “என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமுகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு மகனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்”. அவர் எழுதியபடி தான் நடந்தது. அவர் எழுதியதற்காகத் தான் கொன்றார்கள். உண்மையை எழுதியதற்காக கொன்றார்கள். அவர்களிற்கு உண்மைகள், விமர்சனங்கள் எப்பொழுதுமே பிடிப்பதில்லை என்பதனால் அவரைக் கொன்றார்கள். அவர் சூடுபட்டு கீழே விழுந்த பின்பும் பின்னந்தலையில் மறுபடி இருமுறை சுட்டார்கள். அவரும், அவரது விமர்சனங்களும் மறுபடி எழுந்து விடக்கூடாது என்பதற்காக மறுபடி அந்த பெண்ணை சுட்டார்கள்.

இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க புறப்பட்ட எமது சமுதாயம், அந்நிகழ்வுப்போக்கில் முழுச்சமுதாயத்தின் ஆத்ம சக்தியையும் வலுவிழக்கச் செய்யும் உள்ளார்ந்த பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு திணறியது. துப்பாக்கிகளின் முன் மெளனிகளாக்கப்பட்ட மக்கள் கூட்டம் விடுதலை, போராட்டம், தியாகி, துரோகி என்னும் வெற்றுச்சொற்களின் மந்திரத்தில் கட்டுண்டு கிடக்கிறது. இக்காலகட்டத்தில் தான் மக்கள் மனம் திறந்து உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மைகளைத் தேடும் உந்துதலிற்கான இடைவெளியினை உருவாக்கும் சிறிய முயற்சியாகவே “முறிந்த பனை” என்னும் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற ஆசிரியர்களின் முன்னுரைக்கு ஏற்ப தமிழ்மக்களின் துயரங்களையும், அவைகளிற்கு காரணமானவர்களையும் ராஜினியும், அவரது சக ஆசிரியர்களும் பதிவு செய்தனர்”.

Web Design by The Design Lanka