தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறித்து விஜேதாச ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறித்து விஜேதாச ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி

vijaya

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroffali Fareed


உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ என்பவர் இலங்கையில் இரண்டு பட்டங்களைப் பெற்ற ஒரே புத்திஜீவியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு கல்விமானாகும். ஆனாலும் அவரது செயற்பாடுகள் ஒருபோதும் அறிவாளிகளின் செயற்பாடுகளை ஒத்திருப்பதில்லை. அடிமுட்டாள்களும் கலாநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நம் நாட்டில் கலாநிதியொருவர் முட்டாள்தனமாக நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ என்பவர் தன்னை நேர்மையின் சின்னமாகவும், உண்மையின் சிகரமாகவும் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கும் ஒருவராவார். ஆனால் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதானது நகைப்புக்குரிய விடயமாகும்.

விஜேதாச ராஜபக்‌ஷ ஒருகாலத்தில் நீதி அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். அக்காலப் பகுதியில் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடைய சகலரினதும் வழக்குகள் காரணமின்றி தாமதப்படுத்தப்பட்டன. பாரியளவான மோசடி, ஊழல்களுடன் தொடர்புடைய நபர்கள் வழக்குகளை விட்டும் விடுவிக்கப்படும் நிலை காணப்பட்டது. கடைசியில் அரசாங்கம் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து கௌரவமாக விலகிக் கொள்ள வலியுறுத்திய போதிலும் அவரோ தனது பதவியில் தொடர்ந்தும் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு கேவலமான முறைகளில் முயற்சித்திருந்தார். கல்விமான்களுக்குப் பொருந்தாத வகையில் அதிகார மோகம் கொண்டிருந்தார். கடைசியில் ஜனாதிபதி தலையிட்டு அவரது அமைச்சைப் பறித்தெடுத்திருந்தார்.

அமைச்சுப் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் ”இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை வகிப்பது கேவலத்திற்குரியது” என்றவாறாக இந்தப் பழம் புளிக்கும் என்று நரியைப் போன்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அமைச்சுப் பதவியை கேவலப்படுத்தினார். அரசாங்கத்தின் அமைச்சுப் பதவி வகிப்பது அவரைப் பொறுத்தமட்டில் கேவலமாக இருந்தபோதிலும் அவரது புத்திரன் பாதுகாப்பு அமைச்சில் ஒருங்கிணைப்பு செயலாளராக தொடர்ந்தும் நீடித்தார்.

அதே போன்று விஜேதாச ராஜபக்‌ஷ நீதியமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அக்காலப்பகுதியில் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புபட்டிருந்த சந்தேகநபர்களான ஞானசார தேரர் மற்றும் அம்பிடியே சுமண தேரர் ஆகியோரை சந்தித்து அவர்களை நியாயப்படுத்தி கருத்துக்களை வௌியிட்டிருந்தார். அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை தொடர்பாக நம்பிக்கையீனம் ஏற்படவில்லை என்று எவரேனும் வாதிடுவார்களாக இருந்தால் அவர்கள் அடிமுட்டாள்களாக இருக்கலாமே தவிர கடுகளவேனும் அறிவைக் கொண்டவர்களாக இருக்க முடியாது.

பின்வந்த நாட்களில் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷவின் இல்லத்தில் ஔிந்து கொண்டிருப்பதாகவே நாடு முழுவதும் ஒரு வதந்தி பரவியிருந்தது.

அவண்ட் கார்ட் வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த வேளையில் அந்நிறுவனத்தின் தலைவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் சரத் பொன்சேகா நேரடியாகவே கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனாலும் அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரை தான் தனிப்பட்ட முறையில் அறியேன் என்று கலாநிதி விஜேதாச தெரிவித்த மறுப்புரைக்கு பதிலாக ஊடகங்கள் அவர் தன் குடும்பத்தாருடன் அவண்ட் கார்ட் நிறுவன அனுசரணையில் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா தொடர்பான புகைப்படங்களை பிரசுரித்து அவரது நேர்மையை கேள்விக்குட்படுத்தியிருந்தது.

இவ்வாறான விடயங்களை எடுத்து நோக்கும் போது கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ என்பவர் நேர்மையின் சிகரமாவோ, உண்மையின் சின்னமாகவோ தொடர்ந்தும் அடையாளப்படுத்த எந்த வகையிலும் தகுதியற்றவர் என்பதை வலியுறுத்தியாக வேண்டும். அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் அதே நிலைப்பாட்டில் வைத்தே நோக்க வேண்டும்.

அதே போன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியொன்றை வகிப்பது கேவலத்திற்குரிய செயலாக வர்ணித்த அதே விஜேதாச ராஜபக்‌ஷ அதே அரசாங்கத்தில் தற்போது உயர்கல்வி அமைச்சுப் பதவியை வகித்துக் கொண்டிருக்கின்றார். ஒருகாலத்தில் கசப்பாக இருந்தது தற்போது இனிக்கின்றதாம். ஐயோ.. கைசேதமே..இதைவிட நகைச்சுவை உலகில் எங்கேனும் உண்டா?

இவ்வாறான நேர்மையான அமைச்சர் கடந்த 07ம் திகதி நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாபியாவொன்று செயற்படுவதாகவும், பரீட்சைகளில் சித்தியடைய வைப்பதற்கு மாணவிகளிடம் விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறான நிலைமையொன்று காணப்படுவதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் இதுவரை எந்தவொரு கட்டத்திலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அதே போன்று அவ்வாறான சம்பவமொன்று குறித்து இதுவரை எந்தவொரு பொலிஸ் முறைப்பாடோ, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடோ அல்லது நீதிமன்றமொன்றில் வழக்குப் பதியப்படவோ இல்லை.

ஆனாலும் முன்னைய உபவேந்தர்களில் ஒருவரான கலாநிதியொருவர் பல்கலைக்கழக நிதியைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அதுதவிர குறிப்பிடத்தக்க சம்பவங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் இதுவரை பதிவாகவில்லை.

இதற்கிடையே கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷவின் வசமுள்ள உயர்கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் கற்கைப் பீடத்தின் பீடாதிபதி பிரதீப் நிஷாந்த வீரசிங்கவுக்கு எதிராக பாலியல் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளதை விஜேதாச அறிய மாட்டாரா? அவருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? மிகவும் தெளிவான சாட்சியங்களுடன் பிரதீப் வீரசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணைகளை நடத்தாமல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக சாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ஒருவர் நாட்டின் உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் சாபமோ என்ற நியாயமான சந்தேகம் ஒன்று எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதே போன்று குறித்த ஊடகவியல் கற்கை நிலையமான ஹொரணை ஶ்ரீபாலி மண்டபத்தின் பிரதானி கலாநிதி பிரதீப் வீரசிங்க மேற்கொண்டுள்ள பாலியல் துஷ்பிரயோகங்களை மறைப்பதற்கு தற்போதைக்கு பாரிய அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவாகாத விடயங்கள் குறித்து மை பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர், சாட்சியங்களோடு பதிவாகியுள்ளு இந்த சம்பவம் குறித்து இதுவரை எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கப்பட்டதோடு பல்கலைக்கழக வளாகத்தினுள் பயங்கரவாத அமைப்பான எல்.டி.டி.ஈ.அமைப்பிற்கு நினைவுத்தூபி நிர்மாணிப்பதற்கான மாபியா செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அது தொடர்பான மௌனம் காத்துக் கொண்டு காதுகளையும் கண்களையும் மூடிக் கொண்டிருக்கும் அமைச்சர், அவ்வாறான எந்தவொரு சம்பவமும் நடைபெறாத தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான ஆதாரங்கள் தொடர்பில் சாட்சியங்களுடன் விளக்கமளிக்க வேண்டும் என்று சவால் விடுகின்றேன்.

மறுபுறத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை விமர்சித்து அவ்வாறானதோர் வார்த்தையை வௌியிட்டால் டயஸ்போராக்களின் நிதியுதவிகளை ஒருசிலர் இழக்க நேரிடும் என்பதையும் நான் அறிவேன்.

இலங்கை நாட்டினுள் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரையொன்றை மேற்கொள்வதற்காக டயஸ்போராக்களின் நிதியுதவியில் செயற்படும் ஒருசில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் தரத்திலான கருத்தொன்றை வௌியிட முன்னர் அது குறித்த சரியாக ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்வது கலாநிதிப் பட்டமொன்றை வகிக்கும் ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டிய விடயமாகும்.

ஏனெனில் அடிமுட்டாள்கள் கலாநிதிப் பட்டமொன்றை வகிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற வகையில் அந்தப் பட்டமொன்றை வகிப்பவர்கள் எப்போதும் புத்திக்கூர்மையுடன் செயற்படவேண்டும். அவ்வாறான நிலையில் தான் அந்தப்பட்டத்துக்குரிய கௌரவம் கிட்டும்.

எனவே போலியான குற்றச்சாட்டொன்றை முன்வைக்க முன்னர் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்து, சாட்சியங்கள் மற்றும் விடயங்களை தௌிவாக உறுதிப்படுத்திய பின்னரே குற்றச்சாட்டொன்றை முன்வைக்க வேண்டும் என்ற சட்டத்தின் வழிகாட்டலையாவது சரிவர கடைப்பிடிக்குமாறு தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் செனட் சபை உறுப்பினருமான கலாநிதி Riyas Sulaima Lebbe அவர்களின் சவால் குறித்தும் இவ்விடத்தில் நான் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

Web Design by The Design Lanka