முறிந்த உறவு » Sri Lanka Muslim

முறிந்த உறவு

ø;

Contributors
author image

A.L.நிப்றாஸ்

பதினைந்து வருடங்களாக இணைந்து வாழ்ந்த கணவனும் மனைவியும் ஏதோ காரண காரியங்களுக்காகப் பிரிந்து செல்வது போல, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ,எல்.எம். அதாவுல்லாவுக்கும் அதன் பிரதித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையிலான உறவு முறிவடைந்திருக்கின்றது. ‘அரசியலில் எதுவும் நடக்கலாம்’ என்கின்ற யதார்த்தத்தை மக்களால் இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாதுபோன ஒரு தருணமாக உதுமாலெப்பையின் இராஜினமாச் செய்தி அமைந்திருந்தது.

தேசிய காங்கிரஸின் ஸ்தாப உறுப்பினர்களுள் ஒருவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ‘தேசிய காங்கிரஸில் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்வதாக’ அறிவித்துள்ளார். அவர் மட்டுமன்றி அவரைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சட்டத்தரணி பஹீஜ் உட்பட மேலும் பலரும் கட்சியை விட்டு வெளியேறவுள்ளதாக நம்பமாக தெரிகின்றது. எனவே இது ஒரு சாதாரண பிளவல்ல.

அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் இடையிலான அரசியல் உறவு என்பது இப்படியான ஒரு முட்டுச்சந்துக்குள் வந்து நிற்கும் என்றும், வேறு வழியின்றி பிரிந்து செல்ல நேரிடும் என்றும் அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். பெரும் உட்கட்சிப் பூசல்களை எதிர்கொண்டிராத தே.கா. கட்சி இப்பேர்ப்பட்ட ஒரு உள்ளக முரண்பாட்டை சந்திக்கும் என்று மக்களும் எதிர்பார்த்திருக்கவில்லைதான்.

இவ்வாறிருக்க, உதுமாலெப்பை பதவிகளையே இராஜினாமாச் செய்துள்ள போதிலும் கட்சியில் தொடர்ந்தும் இருப்பார் என்று கூறுவதன் மூலம், ஆறுதல் பட்டுக் கொள்ளலாமே தவிர, பதவிகளை துறந்து விட்டு சாதாரண ஒரு உறுப்பினராக உதுமாலெப்பை நெடுங்காலத்திற்கு நீடிப்பார் எனக் கருத முடியாது. அரசியலில் இருந்து ஓய்வுபெற நினைத்தால் ஒரு பெயரளவிலான உறுப்பினராக அவர் கட்சியில் நீடிக்கலாம். ஆனால் வேறு முஸ்லிம் கட்சியுடனும் சேரும் முடிவை அவர் எடுத்தால் அந்தக் கணமே தே.கா.கட்சியில் இருந்து முற்றாக விலகிக் கொள்வார். அல்லது அதற்கு முன்னமே அதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு விடுவார்.

தொடர் அனுபவங்கள்
கட்சித் தலைவருடன் முரண்படுவதும் கட்சியை விட்டு தனியாகவோ, கூட்டத்தோடு வெளியாவதும் எல்லாக் கட்சிகளிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது ஸ்லிம் அரசியலுக்கோ அல்லது தே.கா. தலைவர் அதாவுல்லாவுக்கோ கூட இது ஒரு புது அனுபவமல்ல.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் காலத்தில் மு.கா.வில. இரு வகையான பிளவுகள் இடம்பெற்றன. இதில் அநேகர் வெளியேற்றப்பட்டனர். ஓரிருவர் வெளியேறியதாக சொல்லப்பட்டது. அந்த வரிசையில் மு.கா.வின் ஸ்தாபக தவிசாளராகவும் அஷ்ரஃ;புக்கு சரிசமமான் ஆளுமையாகவும் நோக்கப்பட்ட எம்.எச்.சேகு இஸ்ஸதீன் 90களின் ஆரம்பத்தில் தனது தாய்வீட்டை விட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு மு.கா.வில் இருந்து புகாருத்தீன் ஹாஜியார், சுஹைர் எம்.பி., அபூபக்கர் எம்.பி., இல்யாஸ் எம்.பி. ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்;. 2000ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல்லா வெளியேறும் நிலை உருவானது. அதனைத் தொடர்ந்து 2002ஆம் இப்போது தேசிய காங்கிரஸ் தலைவராக இருக்கின்ற அதாவுல்லா, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் மற்றும் இன்று பிரிந்துள்ள உதுமாலெப்பை உள்ளடங்கலாக மேலும் பலரையும் அழைத்துக் கொண்டு மு.கா.வை விட்டு வெளியேறி றவூப் ஹக்கீமுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.
அதன்பின்னர் குமாரி குரே விவகாரத்திற்குப் பிறகு 2004ஆம் றிசாட் பதியுதீன், அமீர்அலி, நஜீப் என ஒரு பட்டாளம் வெளியேறி வந்தது. அதற்குப் பிறகு மு.கா.வில் இருந்து ஹசன்அலி, பசீர் சேகுதாவூத் அணியும் அவர்களைத் தொடர்ந்து ஜவாத் போன்றோரும் வெளியேறினர்.

மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சிலர் வெளியேறிச் சென்றிருக்கின்றனர் அல்லது தலைவர் றிசாட் பதியுதீனுடன் முரண்பட்டிருக்கின்றனர். இதில் மிக முக்கியமான பிளவு கட்சியின் செயலாளராக பதவி வகித்த வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சுபைர் ஆகியோர் தலைவருடனான உறவை முறித்துக் கொண்டது எனலாம்.

அதாவுல்லாவின் கட்சி
2001ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பலருடன் வெளியேறிய ஏ.எல்.எம்.அதாவுல்லா கிழக்கு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். அதாவது 2003ஆம் ஆண்டு பெப்ரவரியில் அஷ்ரப் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். பின்னர் இதனது பெயர் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என மாற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து இப்போதிருக்கின்ற தேசிய காங்கிரஸ் என்ற பெயராக மாறியது.

அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டவர்களில் பலர் பின்னாளில் வெளியேறிச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் மறைந்த பிரதியமைச்சர் அன்வர் இஸ்மாயிலுக்குப் பிறகு அதாவுல்லாவுக்கு மிகவும் தோள்கொடுத்து விசுவாசமாக இருந்த ஒரு அரசியல் துணையாக எம்.எஸ்.உதுமாலெப்பையை குறிப்பிட முடியும். அவருக்கு 13 வருடங்களாக தேசிய அமைப்பாளர் பதவியும் அரசியல் அதிகாரங்களும் வழங்கப்பட்டமைக்கு அதுவும் முக்கிய காரணமாகும்.

அதாவுல்லா செய்த சேவைகள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. மறைந்த தலைவர் அஷ்ரபுக்குப் பிறகு கிழக்கு அரசியலில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் அபிவிருத்தி அரசியலில் சோபித்த அளவுக்கு வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் சோபிக்கவில்லை. அவரது சேவைகளே தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் பிரதான முதலீடாக இருந்தது.

மஹிந்தவுடன் ஒட்டி உறவாடிய காலத்தில் இனவாதம் போன்ற விடயங்களில் மக்கள் விரும்பாத நிலைப்பாடுகளை தே.கா. தலைவர் எடுத்திருந்தாலும் விடுதலைப் புலிகள், வடக்கு-கிழக்கு பிரிப்பு, தீர்வுத்திட்டம் போன்ற விவகாரங்களில் விடாப்பிடியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இது அதாவுல்லாவினதும் கட்சியினதும வெற்றிக்கு அடித்தளமிட்டது.

2015ஆம் ஆண்டு அதாவுல்லா சந்தித்த தோல்வி அவர் தன்னை மீள்வாசிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனால் அவரது இறுக்கமான கொள்கைப் பற்றுறுதி காரணமாக அரசியல் அதிகாரம் இல்லாதபோதும் மக்கள் ஆதரவை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுத்தது என்று சொல்லாம். மேற்குறிப்பிட்ட எல்லாக் காலத்திலும் அதாவுல்லாவோடு பயணித்த உதுமாலெப்பையுடனான உறவே, இப்போது முறிந்திருக்கின்றது.

அதாவுல்லாவும் ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்தவரே என்பது மட்டுமன்றி அவரது கட்சியிலும் இருந்து இதற்கு முன்னர் பலர் பிரிந்து சென்றிருக்கின்றனர். குறிப்பாக, முன்னாள் எம்.பி அஸீஸ், துல்ஷான், அமீர்தீன், தவம், சிராஸ் எனப் பலர் அதாவுல்லாவின் கூட்டியிலிருந்து கூடுவிட்டுப் பாய்ந்திருக்கின்றார்கள்.ஆனால் அதையெல்லாம் அதாவுல்லா பெரிதாக அலட்டிக் கொண்டவரல்ல. அந்தத் தொடரிலேயே இன்று உதுமாலெப்பை போன்றோர் வெளியேறுகின்றனர்;. ஆனாலும் முன்சொன்ன பிரிவுகளை விட இந்த வெளியேற்றம் சற்று பாரமானது. ஏனெனில் உதுமாலெப்பை கொஞ்சம் கனதியான அரசியல்வாதி என்பதை அதாவுல்லாவே ஒதுமுறை என்னிடம் சொல்லியிருக்கின்றார்.

உதுமாலெப்பையின் பிளவால் தேசிய காங்கிரஸ் விழுந்து விடும் என்றோ அதாவுல்லா தோற்றுவிடுவார் என்றோ யாரும் மனக்கணக்குப் போடத் தேவையில்லை. ஆனால், இந்த பிரிவு மிகவும் கனதியானது மட்டுமன்றி நடந்திருக்கவே கூடாத ஒன்றுமாகும். உண்மையில், வேறு கட்சிகளில் இருக்கின்ற யாரையேனும் அதாவுல்லா தே.கா. பக்கம் இழுத்தெடுத்தாலும் உதுமாலெப்பை அளவுக்கு மக்கள்சார் அரசியல் செய்யக்கூடிய, நம்பிக்கையான, வேலைகாரனான அரசியல்வாதி கிடைப்பது கடினமாகும்.
உயர்த்திய தலைவர்

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, கட்சியின் அமைப்பாளரான எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு ஒரு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தி அவருக்கும் அவரது ஊருக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கி உயர்த்தி விட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனை பலமுறை உதுமாலெப்பையே எம்மிடம் சொல்லியிருக்கின்றார். அதேபோல், தேசிய காங்கிரஸின் வளர்;ச்சியில் உதுமாலெப்பையின் வகிபாகமும் பங்களிப்பும் அளப்பரியது என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது. அந்தளவுக்கு இறுக்கமான உறவு அவர்களுக்கிடையில் இருந்தது.

அரசியல் அதிகாரமற்று இருந்த உதுமாலெப்பைக்கும் அவரது ஊருக்கும் அதாவுல்லா கேட்காமலேயே இருமுறை மாகாண சபை உறுப்புரிமை மற்றும் மாகாண அமைச்சைப் பெற்றுக் கொடுத்தார். அக்கரைப்பற்று மக்கள் அதற்காக வாக்களித்தனர். இருவரும் சேர்ந்து பல சேவைகளைச் செய்தனர். கிழக்கு முழுவதும் உதுமாலெப்பைக்கு அடையாளம் ஒன்று கிடைப்பதற்கு தே.கா. தலைமை முழுமுதற் காரணமாகியது.

அதாவுல்லாவின் கொள்கை, கோட்பாடுகளுக்குப் புறம்பாக மேற்சொன்ன காரணத்திற்காகவே இதுவரை காலமும் உதுமாலெப்பை கட்சி மாறாமல் இருந்தார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல தடவை வேறு கட்சிக்கு தாவுவது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்த போது, ‘அதாவுல்லாதான் எனக்கு முகவரி தந்தவர். அவருக்கு நன்றி மறந்தவனாக ஆகிவிடக் கூடாது’ என்று வெளிப்படையாவே சொன்னார்.

உதுமாலெப்பையின் பாணி
மறுபுறத்தில், எம்.எஸ்.உதுமாலெப்பையின் அரசியலும் அதாவுல்லாவின் பாணியிலானதே என்றபோதும், சற்று வித்தியாசமானது. அவர் நல்ல மக்கள் தொடர்பை (பி.ஆர்.) உருவாக்கியிருந்தார். இது தேசிய காங்கிரஸிற்கு பலம் சேர்த்தது. முஸ்;லிம் காங்கிரஸின் கோட்டை எனக் கருதப்படும் அட்டாளைச்சேனையில் மு.கா.வில் அரசியல் செய்;வது இலகுவானது என்று சிறுபிள்ளைகூட அறிந்திருக்க, அதாவுல்லாவின் பெயர் ஓங்குவதற்கும் தேசிய காங்கிரஸின் வாக்காளர் தளம் அதிகரிப்பதற்கும் உதுமாலெப்பை உழைத்தமை, அவர் தலைவர் மீது வைத்திருந்த விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு கடந்த ஒன்றரை தசாப்தங்களாக பரஸ்பரம் உறுதுணையாகவும் விசுவாசமாகவும் இருந்த அதாவுல்லாவையும் உதுமாலெப்பையையும் காலம் இன்று பிரித்திரிக்கின்றது. இந்தப் பிரிவு இப்போதுதான் நிகழ்கின்ற போதும் இருவருக்கும் இடையிலான ‘புகைச்சல்’ அல்லது கருத்து வேற்றுமை கடந்த 3 வருடங்களாகவே இருந்து வருகின்றது என்பதை உள்ளரங்கம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

கருத்து முரண்பாடுகள்
2015 தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்க தயாராகிய போது தேசிய காங்கிரஸ் தலைவர் மஹிந்தவுக்கு நன்றிக்கடன் செய்ய வேண்டுமென எடுத்த நிலைப்பாட்டை உதுமாலெப்பை முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அதாவுல்லா தோல்வியடைந்த பின்னர் உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் வேறு கட்சிக்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்தனர். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைவதற்கான முயற்சியையும் ஒரு தரப்பு மேற்கொண்டது. ஆனால் உதுமாலெப்பை தலைவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் மனநிலையில் இருந்தார் என்பதுடன், அதாவுல்லா ஊருக்கு வந்து பகிரங்க பொதுக்கூட்டம் நடத்தியதும் மனவருத்தம் எல்லாம் சரியாகி விட்டது எனலாம்.

தற்போது கோட்பாட்டு ரீதியாக தோல்வி கண்டுவரும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்ப உருவாக்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் காலப் பொருத்தம் கருதி அதில் தேசிய காங்கிரஸூம் இணைந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை உதுமாலெப்பை கொண்டிருந்தார். ஆனால் கூட்டமைப்பு என்பது தம்மை சிக்க வைப்பதற்கான சதி என்றும் றிசாட் பதியுதீனுடன் சேரவே முடியாது என்றும் கருதிய தே.கா. தலைவர் கூட்டமைப்பிற்கு சிவப்புக் கொடி காட்டினார்.

இதில் மகிழ்;ச்சியடைந்திராத உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அதாவுல்லா பயன்படுத்த முனைப்புக்காட்டாததையிட்டு மேலும் மனமுடைந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதேவேளை கடந்தவாரம் இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் உதுமாலெப்பை வகித்துவந்த தேசிய அமைப்பாளர் பதவி அவரிடமிருந்து மீறப் பெறப்பட்டு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ஏற்கனவே தலைவருக்கும் உதுமாலெப்பைக்கும் பகைமூட்டி விடும் கைங்கரியங்களை பேஸ்புக் போராளிகள் இரு தரப்பிலும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக கட்சிக்குள் இருந்தே விமர்சிக்கப்படுவது குறித்த தனது மனக்கிடக்கையை, அக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டத்தில் போட்டுடைத்தார் உதுமாலெப்பை. இந்நிலையிலேயே பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ‘அதாவுல்லாவுக்கு அடுத்த தலைமை உதுமாலெப்பை என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே பிரதித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாக’ அதாவுல்லா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அப்படியென்றால் அது உண்மையிலேயே நன்றிக்குரியது.

ஆனால், காரியமாற்ற முடியாத உப்புக்குச் சப்பான பதவியை வழங்குவதற்கே பிரதித் தலைவராக தான் நியமிக்கப்பட்டிருக்கின்றேன் என்பதையும் இது தனக்கு விழுந்துள்ள வெட்டு என்றும் உதுமாலெப்பை கருதுவதாக தெரிகின்றது. அப்படியாயின்;, இதுவே இராஜினாமாச் செய்யும் முடிவுக்கு உடனடிக் காரணமாகும்.

பரஸ்பர குற்றச்சாட்டு
தே.கா. தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் கருத்தை அறிந்து கொள்ள முயற்சித்த போதும் அது பயனிளிக்கவில்லை. ஆனாலும் அதாவுல்லா தரப்பில் உள்ள உதுமாலெப்பை மீதான ‘அவதானிப்புகள்’ நாம் அறியாதவை அல்ல. அதாவது தனது நிலைப்பாடுகளுக்கு மாற்றமான கொள்கைகளின்பால் உதுமாலெப்பை ஈர்க்கப்பட்டிருக்கின்றார் என்று தலைவர் கருதுகின்றார். மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக நம்புகின்றார். மாற்றுக் கட்சியில் இணைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டு விட்டார் என்றும் அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தமக்கு எதிர்காலத்தில் ஆபத்தைக் கொண்டு வரலாம் என்று கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கப் பார்க்கின்றார் எனலாம். இங்கு சொல்லப்படாத வேறு அதாவுல்லாவின் ஓரிரு வியூகங்களும் உள்ளன.

மறுபுறத்தில், உதுமாலெப்பை தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதாவுல்லா தனது பிள்ளைகளை முன்னிறுத்திய குடும்ப அரசியலை செய்கின்றார் என்றும், அதற்காக நம்பிக்கைக்குரிய கட்சிக்காரர்களையே ஓரம்கட்டும் தோரணையில் நடாத்துகின்றார் என்றும் கூறுகின்றனர். கட்சியின் அரசியல் போக்கை மீள்பரிசீலனை செய்யாமல் தனது ‘சௌகரிய வலயத்திற்குள’; மட்டும் இருக்கவே பிரயத்தனப்படுகின்றார் என்றொல்லாம் சொல்கின்றனர்.

தனது இந்த நகர்வால் உதுமாலெப்பைக்கு ஏதாவது ஒரு செய்தியை மறைமுகமாகச் சொல்ல அதாவுல்லா முயற்சித்திருப்பாராயின், அதற்கான பதில் நடவடிக்கையை அவர் மேற்கொள்வார் என்பதையும் தலைவர் ஊகிக்காமல் இருந்திருக்கமாட்டார். ஆனால் அவர் இவ்வாறு இராஜினாமாச் செய்வார் என்பதை அதாவுல்லா எதிர்பார்த்திருக்கவில்லை.

எதுஎப்படியோ கடைசிக் கட்டத்தில் உதுமாலெப்பையை சமரசப்படுத்துவதற்கு தே.கா. தலைவர் அதாவுல்லா முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். ஆனால், தற்கொலைக் குண்டுதாரிகள் கடைசிக் கட்டத்தில் தொடர்புகளை துண்டித்துக் கொள்வார்களாம். அதுபோலவே, முடிவெடுத்த பிறகு தொலைபேசிவழி தொடர்புகளை உதுமாலெப்பை துண்டித்துக் கொண்டார். மேலும் தாமதிக்காது இராஜினமாக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இழுத்தெடுக்க முயற்சி
உதுமாலெப்பையின் உறவு முறிவதால் தேசிய காங்கிரஸ் பெரிய சரிவைச் சந்தித்துவிடும் என்று மேலோட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், உதுமாலெப்பையின் இராஜினாமா என்பது தேசிய காங்கிரஸில் முன்னொருபோதும் இல்லாத அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறைக்க முடியாது. இன்னும் பலர் வெளியேறினால் நிலைமை மோசமடையலாம்.

இவ்வாறு வெளியேறியுள்ள உதுமாலெப்பையை தம்பக்கம் இழுத்தெடுப்பதற்கு (நீண்டகாலமாக முயற்சித்து வருகின்ற) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. ஆனால் அவர் எந்தக் கட்சியின் வலைக்குள்ளும் இதுவரை வசமாக சிக்கவில்லை என்று நம்பமாக தெரிகின்றது.

இதேவேளை. சில காலத்திற்கு முன் சற்று ஸ்தம்பிதமாகியிருந்த தே.கா. கட்சி நாலாபுறம் வளர்ச்சியடையத் தொடங்கிய வேளையிலேயே இது நடந்திருக்கின்றது. எனவே 3 தசாப்தங்களுக்கும் மேலான அரசியல் அனுபவங்களைக் கொண்ட தே.கா. கட்சியின் தலைவர் அதாவுல்லா தனது அரசியலின் இலக்கு சரியாக இருப்பினும், பயணிக்கும் வழியும் வியூகமும் சரிதானா என்பதை மீண்டும் ஒருமுறை மீள்வாசிப்புச் செய்வது நல்லது. அதேபோல் இன்னும் தே.கா. உறுப்பினராகவே இருக்கின்ற உதுமாலெப்பை, தனது அடுத்த நகர்வு குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

திருமண உறவு முறிந்த பிறகு ஆளுக்காள் காரணங்கள் சொல்லி என்ன பயன்? வசைபாடல்களாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 23.09.2018)

Web Design by The Design Lanka