பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி - Sri Lanka Muslim

பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி

Contributors
author image

S.Ashraff Khan

(நேர்காணல் – எஸ்.அஷ்ரப்கான்)


கேள்வி – தர்ஹா நகர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்களிப்பு எவ்வாறுள்ளது?

பதில் –
நான் இன்று நேற்றல்ல எப்போது அரசியலில் கால் பதித்தேனோ அன்றிலிருந்து எனது பிறந்த ஊருக்கு பல்வேறு வழிகளிலும் சேவைப் பங்களிப்பை செய்து வருகிறேன். வீதிகள் அபிவிருத்தி, வடிகான்கள் அமைத்தல், பிரதேச நீர்ப்பிரச்சினை, வாழ்வாதார உதவிகள் வழங்குதல், கல்வி, சுகாதாரம் என்று பல்வேறு அபிவிருத்தியிலும் நான் பங்கு கொண்டு என்னால் முடியுமான சேவைகளை செய்து வருகிறேன்.

ஆனால் எமது பிரதேச உட்கட்டுமான அபிவிருத்தி செயற்றிட்டத்தினை அமுல்படுத்துவதற்கு பல்வேறு சவால்கள் உண்டு. அதனையும் தாண்டி நாம் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.

கேள்வி –
அபிவிருத்தியில் சவால்கள் உண்டு என நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்?

பதில் –
தர்ஹா நகர் பிரதேசத்தை மட்டுமல்லாது பேருவளை பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் போதிய வருமானமின்மை, வளங்கள் இல்லாமை, ஆளணிப் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது பிரதேச சபை முகம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் சேரும் குப்பைகளை அகற்றுகின்ற பணியையும் சிறப்பாக செய்வதற்கு கடும் சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம். 7 நாட்களும் எமது சிற்றூழியர்கள் வேலை செய்கிறார்கள். என்றாலும் இதற்கான ஆளணியும், உபகரண தேவையும், மெசின்களும் எமது பணிக்கு கடும் சவாலாக உள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கேள்வி –
எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் எண்ணமுண்டா?

பதில் –
இதற்கு பதிலை என் மீது அன்பு கொண்டுள்ள ஆதரவாளர்கள் நண்பர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எமது வட்டார பிரதேச மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே மக்கள் என்ன தீர்மானம் எடுப்பார்களோ அதற்கு நான் கட்டுப்படுவேன். தேர்தலில் களமிறங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டால் நான் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு மக்களுக்காக களமிறங்க நான் தயாராக உள்ளேன்.

கேள்வி –
பெருந்தேசிய பலம் வாய்ந்த கட்சிகளின் அரசியல்வாதிகள் இங்குள்ளபோது உங்களது அரசியல் செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்காதா?

பதில் –
நிச்சயமாக இல்லை. மக்கள் சேவை ஒன்றே எனது தேவையாக கருதி நான் செயற்பட்டு வருகின்றேன். அதனால் நான் அதிகாரத்தில் இல்லாத வேளையிலும் கூட மக்கள் தனது தேவைகளை நிறைவு செய்வதற்கு என்னை நாடி வருகின்ற போது அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பேன். இதனால் நான் என்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறேன். பிரதேச மக்களின் ஆதரவு எனக்கு தொடர்ந்தும் உள்ளது. இதனால் நான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் இருக்கின்றேன். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட மக்களின் விருப்பப்படியே நான் தேர்தலில் குதித்து 1801 வாக்குகளை பெற்று வெற்றியும் பெற்றேன். மக்கள் என் பக்கம் இருக்கின்றபோது நான் ஏன் தயங்க வேண்டும். எனவே தான் எனக்கு பெரும்பாண்மை கட்சிகளினால் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. எனது நேர்த்தியான பாதையில் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கிறது.

கேள்வி –
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக உமது பிரதேசத்தில் செய்த அபிவிருத்திகள் என்ன?

பதில் –
நான் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, இன்னும் ஒரு மாதத்திற்குள் மீரிப்பன்ன 2 கிலோ மீற்றர் வீதியை கார்பட் வீதியாக மாற்றியமைக்க உள்ளோம். அதுபோன்று அதிகார கொட, குருந்துவத்த பிரதேசங்களில் உள்ள வீதி, வடிகான், பாலர் பாடசாலைகள், முஸ்லிம் பாலிஹா வித்தியாலயம், வைத்தியசாலை போன்றவற்றுக் கான அபிவிருத்திகள் மற்றும் பிரதேச மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் என எமது சேவை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கு எமது கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் சுமார் 20 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கித் தருகிறார்.
அது போன்று பிரதேசத்தின் ஆளுந்தரப்பு பிரதான அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களின் உதவியுடனும் எமது பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அது போன்று மசூர் மாவத்தை வீதி அபிவிருத்திக்கு பிரதேச செயலக நிதி சுமார் 15 இலட்சம் ஒதுக்கப்பட்டு தார் வீதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் தர்ஹா நகர் ஜெம் வீதி, ஸாஹிறா கல்லூரி வீதி, லோட்டஸ் வீதி ஆகியன மு.கா. தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களால் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி –
பேருவளை பிரதேச அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம் சிங்கள உறவு எவ்வாறு உள்ளது?

பதில் –
இங்கு காலாகாலமாக இரு இன மக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சில விசமிகளால் ஏற்பட்ட இனவாத தீ எமது அரசியல்வாதிகளாலும் சமூக முற்போக்குவாதிகளாலும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எமது முயற்சிகள் இரு இனத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும்.

கேள்வி –
நல்லாட்சியிலும் தற்போது மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாக கூறப்படுகிறதே இது பற்றி உமது கருத்தென்ன?

பதில் –
சிறுபான்மைகள் நாங்கள் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எமது இருப்பையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதில் கருத்தாக இருக்க வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் சிறுபாண்மைகளின்
ஆதரவில்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எந்த அரசாங்கம் வத்தாலும் நாட்டின் இந்த நிலைமை தொடராமல் இருப்பது கடினமே. அதற்குள் எமது மக்களின் நலனை நாம் பெற்றுக் கொண்டால் அதுவே பெரும் வெற்றிதான். எமது கட்சியும் கட்சித் தலைமையும் எமது பிரதேச மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுத்து வருகிறது. புத்தி சாதுரியமாகச் சிந்தித்து எமது மக்கள் உரிமைகளை பெறுவதற்கும், மாற்று இன சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team