யாரையும் நம்பாதே! » Sri Lanka Muslim

யாரையும் நம்பாதே!

Internet Crime

Contributors
author image

Mujeeb Ibrahim

ஒருத்தர்ட privacy என்றால் என்ன?

தன்னைப்பற்றி இன்னொருவர் அறிந்து விடக்கூடாதென்று கருதுகின்ற அனைத்தும் ஒருவருடைய privacy தான்.

ஒருவரது privacy இனை திருட்டுத்தனமாக அறிய முற்படுவது, பலவந்தமாக பெறுவது, ஏமாற்றி அறிவது அனைத்தும் குற்றமாகும்.

ஒரு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டுமென்றால் முழுப்பெயர் தொடக்கம், முகவரி அடங்கலாக, தொலைபேசி எண், அடையாள அட்டை இலக்கம் என பல தகவல்களை வழங்கிவிடுகிறோம்.

சிலவேளை இந்த படிவங்களில் மனைவி/ கணவன்மார்களின் தகவல்களையும் கொடுக்கவேண்டியிருக்கிறது.

யாரும் இந்த தகவல்களை விரும்பிக்கொடுப்பதில்லை. கொடுத்தேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்த சூழல் அதனைச்செய்ய வைக்கிறது.

இந்த data க்களை வைத்து என்னவெல்லலாம் செய்யலாம், எவ்வாறான சுத்துமாத்துகள் நடக்கின்றன, உங்கள் வங்கிக்கணக்கிலிருந்தே உங்களை அறியாமல் பணத்தை இன்னொருவர் திருடுவதற்கும், உங்களது பெயரில் வேறு யாரோ வங்கி கடன் பெற்றுக்கொள்வதற்கும் எப்படி வாய்ப்புகள் உண்டாகின்றன என்றெல்லாம் ‘இரும்புத்திரை ‘ திரைப்படம் தெளிவாக பேசியது.

Information is a wealth என்று சொல்வதை போல இந்தக்காலத்தில் data is an art என்ற நிலை உருவாகியிருக்கிறது.

யாராவது அறிமுகமில்லாத ஒருவர் ( stranger) வீதியில் கண்டு திடீரென உங்களது முகவரி என்னவென்று கேட்டால், நீங்கள் சொல்லத்தயங்குவீர்கள். உள்ளூர ஒரு சந்தேகம் கலந்த பயம் வரும்.

தெரியாத இலக்கமொன்றிலிருத்து வருகிற தொலை பேசி அழைப்பொன்று உங்களது அடையாள அட்டை இலக்கத்தை கேட்டால், கொடுக்க மனம் வராது. பயம்கலந்த கேள்வி எழும்.

ஆனால் அங்கர் பால் பைக்கற்றினுள் ஒரு படிவம் இருந்து, நிரப்பி அனுப்பினால் ரெண்டு கிலோ தங்கம் பரிசு விழும் வாய்ப்பு என்றொரு விளம்பரத்தை பார்த்தால் உங்களது data எல்லாவற்றையும் ரெண்டு நிமிடத்தில் அந்த படிவத்தில் கொட்டி விடுவீர்கள்.

இது தந்திரமாக உங்களது privacy தகர்க்கப்படும் ஒரு சந்தர்ப்பமாகும்.

அனேகமான இடங்களில் இந்த raffle draw இருக்கிறது. ஒரு exhibition hall அல்லது fashion mall எதுவாக இருந்தாலும் ஒரு பெட்டி , படிவம், பேனா என உங்களது தகவல்களை கொள்ளையடிக்க காத்திருக்கின்றன.

தெரியாத அறிமுகமில்லாத ஒருத்தர் கேட்கும் போது கொடுக்க அஞ்சுகிற உங்களது private data க்கள் அனைத்தையும் இன்னுமோர் அறிமுகமில்லாத இடத்தில் ‘இலவசமாக’ ‘ஏதாவது கிடைக்கும்’ என்ற நப்பாசையில் கொடுத்து விடுகிறீர்கள்.

சரி உங்களுக்கு அந்த raffle draw இல் ஒரு BMW காரோ, அல்லது ஹெலிகொப்டர் டுவரோ கிடைத்தால் பரவாயில்லை!

ஒன்றுமில்லாமல் எத்தனை இடங்களில் உங்களது தகவல்கள் தந்திரமாக வாங்கப்பட்டிருக்கின்றன என்று என்றாவது யோசித்ததுண்டா?

மேலைத்தேய நாடுகளில், பல்தேசியக்கம்பனிகளில் வழங்கப்படும் படிவங்களில் அவை தாள்களில் அல்லது இணைய வெளிகளில் எந்த வடிவத்தில் இருந்தாலும் data protection act இற்கு கீழே உங்களது தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி வழங்கியிருப்பார்கள்.

அதேவேளை இதேபோன்ற பெரும்பெரும் நிறுவனங்களில் இந்த data க்கள் திருட்டுப்போனதாகவும் கேள்விப்படுகிறோம்.

யார் திருடினார்கள்? ஏன் திருடுகின்றார்கள்?

பேஸ்புக் நிறுவனத்தில் உள்ள நமது data திருட்டுப்போனால் நமக்கென்ன நஷ்டம் வரப்போகிறது? கோடிக்கணக்கில் பணத்தையா இழக்கப்போகிறோம்?

‘இதெல்லாம் டொலர் கூடினால் நமக்கென்ன பாதிப்பு?’ போன்ற மனவோட்டத்தின் வெளிப்பாடுகள்தான்!

பாதிப்பு இருக்கிறது.

Data திருடப்படுதல் என்பது பெருஞ்செல்வாக்கு பெற்றவர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு மாத்திரம் இழப்புகளை தரக்கூடியதல்ல.

மாறாக ஒரு பிச்சைக்காரனுக்கும் அதனால் எதிர்மறையான பாதிப்பு இருக்கிறது.

எதிர்காலத்தில் அவனது தகவல்களை பயன்படுத்தி யாரோ ஒரு கிரிமினல் பாரிய குற்றமொன்றை செய்யலாம்.

ஈற்றில் ஒரு நாள் மெக்ஸிகோவில் நடந்த போதைக்கோஷ்டியின் குற்றமொன்றிற்காய் இலங்கையில் இருந்த ஏழைக்குடும்பத்து பையன் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலையும் வரலாம்.

Data திருட்டு, pirated privacy என்பன ஆபத்தானவை.

உதாரணத்திற்கு இங்கே கொழும்பு போன்ற பெரு நகரங்களில் பெருஞ்செல்வந்தர்கள் பெரும்பாலும் அதிசொகுசு மாடி மனைகளில்தான் வாழ்கிறார்கள்.

தனி வீடுகளை விட இந்த அபார்ட்மென்ட் வாழ்க்கை பாதுகாப்பானது என அவர்கள் நினைக்கிறார்கள்.

தங்களது இருப்பிடத்தை இலகுவாக expose பண்ணிக்கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லை. வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் முகவரிகள் கூட வேறு இடங்களாக இருக்கும்.

மேலைத்தேய நாடுகளில் ஒருவரது travel card கொண்டிருக்கும் data அவரை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப்போட வல்லது.

அரசும், பொலிசும் குற்றமொன்று நிகழ்கிற போது இந்த travel card ஐ வைத்தே ஆளை பிடித்து விடுவார்கள்.

இலங்கையில் ஒருவரது அடையாள அட்டை இலக்கமும், முகவரியும் அதி முக்கிய sensitive information ஆக கருதப்படுகின்றன.

அவற்றை பாதுகாப்பதும் அவசியந்தவிர்ந்த ஏனைய இடங்களில்,
சந்தர்ப்பங்களில் அவற்றை வெளிப்படுத்தாது பாதுகாப்பதும் நமது பொறுப்பாகும்.

இந்த privacy திருடப்படாமல், ஏமாற்றுதல் மூலம் இழக்கப்படாமல், அச்சுறுத்தல் மூலம் அபகரிக்கப்படாமல் இருப்பதற்கு நாமே பொறுப்பாளிகள்.

அவ்வாறு இழக்கப்படும் நமது privacy அல்லது நம்மைப்பற்றிய data ஒரு நாள் நமக்கு முன்னே ஆபத்தின் வடிவத்தில் வந்து நிற்கும்.

அதனை தொலைந்து போய் கண்டெடுத்த அடையாள அட்டையை போல சந்தோசத்தோடு மீண்டும் பைக்கற்றுக்குள் எடுத்து வைத்துக்கொள்ள முடியாது.

மாறாக அந்த இழப்பிற்கு வேறு யாராவது பெரும் விலை பேசக்கூடும்!

அது பணமாக, மானமாக, கற்பாக, சில போது உயிராக கூட இருக்கக்கூடும்.

Web Design by The Design Lanka