ஒலுவிலின் இன்றைய நிலைக்கு தீர்வு என்ன? » Sri Lanka Muslim

ஒலுவிலின் இன்றைய நிலைக்கு தீர்வு என்ன?

oluvil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை எல் எஸ் ஹமீட்


ஒலுவில் பிரச்சினை பூதாகாரமாக மாறியிருக்கிறது. மண் மூடியிருப்பதால் துறைமுகத்துள் வெளியில் இருக்கும் படகுகளை உள் கொண்டுசெல்ல முடியாது; உள்ளே மாட்டிய படகுகளை வெளியே கொண்டுவர முடியாது; என்ற நிலையில் மீனவர்கள் தத்தளிக்கிறார்கள். எனவே, மூடியிருக்கும் மண்ணை தோண்டியே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதார பிரச்சினை.

ஒலுவில் மக்களுக்கோ வாழையடி வாழையாக தாம் வாழ்ந்த மண், கடல் நீர் காவுகொள்ள தொடர்ந்தும் அனுமதிக்கமுடியுமா? என்கின்ற பிரச்சினை. இத்தோண்டப்பட்ட மண் அகற்றப்பட்டதும் கடல் தன்னைத்தானே சுதாகரிக்க அந்த ஏழை மக்களின் நிலைத்தை அரித்து தனக்கு இரையாக்கிவிடுகிறது.

இவ்வாறு கடலுக்கு பசியாற்ற தம்காணிகளை கன தடவை காணிக்கையாக்கி களைத்த மக்கள் ,இழந்த காணிகள் போதும்; இழப்பதற்கு இனியும் முடியாது; என கண்ணீர் வடிக்கிறார்கள்.

அடிப்படை வாழ்விடப் பிரச்சினை ஒருபுறம்; வயிற்றுப் பசி தீர்க்கும் வாழ்வாதார பிரச்சினை மறுபுறம். இரு தரப்பும் போராட்டம்.

மறைந்த தலைவர் நன்னோக்கில்தான் துறைமுகம் கொண்டுவந்தார். தலைவர் கேட்டபோது தாராளமாக நிலம் தந்துவிய தயாளமக்கள்தான் ஒலுவில் மக்கள். அந்த தயாள குணத்திற்கு பரிசா? அவர்கள் வாழ்விடங்களையே இழந்து வாழ வழியின்றி நிற்பது. இதற்கு தீர்வு என்ன?

ஒலுவில் மக்களுக்கோ தனது எஞ்சியிருக்கும் கரையோரத்தையும் கடலரிப்பைத் தடுப்பதற்கான கற்களை போட்டுவிட்டு தோண்டுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தோண்டப்பட இடத்தை மூடுவதற்காக கடல் நிந்தவூர் கரையைப் பதம்பார்க்கும். நிந்தவூரில் கல்லைப்போட்டால் காரைதீவுக்கரை காவுகொள்ளப்படும். இது தொடர் சங்கிலியாக நீளும் . மட்டுமல்ல, ஒரு தடவை தோண்டுவதால் இப்பிரச்சினை முடிந்துவிடாது. இது ஒரு தொடர்கதை.

தலைவரின் மறைவின்பின் துறைமுகம் கட்டியவர்கள் தவறுவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் திருத்தப்பட முடியாத தவறா?

கடலை மூடி காணி செய்து கண்கவர் நகரமைக்கும் நவீன யுகத்தில் தீர்வு இல்லாத திட்டத் தவறுகளா?

இந்தப்பிரச்சினை இன்று நேற்றுத் தோன்றவில்லையே! கலண்டர்கள் பல மாறியும் காட்சிகள் அவ்வாறே இருந்ததேன்? தேர்தல்கள் பல திரும்பியும் தீர்வின்றிப்போனதேன்?

தலைவர்கள் என்பவர்கள் அடிக்கடி அதிகாரிகளைக் கூட்டிவந்து படம் காட்டினார்கள். கடந்த இரண்டு நோன்புகளுக்கு சற்றுமுன்பதாக ஒரு அமைச்சர் துறைமுக அதிகாரிகளை அழைத்து வந்தார். அடுத்த அமைச்சர் தன் இணைப்புச் செயலாளரை அனுப்பிவைத்தார். அடுத்த சில நாட்கள் அதிகாரிகளை அழைத்துவந்தது யார்? என்று உரிமை கோருவதிலேயே கழிந்தது.

தற்போது நடந்ததென்ன?

மீண்டுமொருமுறை துறைமுக அமைச்சர் அழைத்துவரப்பட்டார்? இரு தரப்பினரும் தம் நிலைப்பாட்டை முன்வைத்தனர். முடிவு இல்லை. குழு அமைத்து தோண்டுவதா? இல்லையா? என முடிவைச் சொல்லுங்கள்; என பந்தை அந்த ஏழைகளின் கோட்டிற்குள் எறிந்துவிட்டு நிரந்தரத் தீர்வுகண்ட திருப்தியோடு திரும்பிவிட்டார்கள்.

அந்த ஏழைகள் என்ன முடிவினை எடுப்பார்கள்? தோண்டவேண்டுமென்றா? தோண்டக்கூடாதென்றா? விளைவு போராட்டம். இரு தரப்பும் வீதியில்.

செய்திருக்க வேண்டியதென்ன?
——————————————
பிரச்சினை தோன்றி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. வெளிநாட்டு நிபுணர்களையோ அல்லது தகுதியான உள்நாட்டு நிபுணர்களையோ எப்போதோ அழைத்துவந்து தீர்வு கேட்டிருக்க வேண்டும். தீர்வு இல்லாமல் இருந்திருக்காது. இருந்தால் அதனைச் வேண்டும். தீர்வே இல்லையெனில் இத்துறைமுகம் மூடப்பட்டு மீனவர்களுக்கு இன்னுமொரு பொருத்தமான இடத்தில் மீன்பிடித்துறைமுகமோ அல்லது படகுத்துறையோ கட்டியிருக்க வேண்டும். அதன்மூலம் ஒலுவிலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் . மீனவர்களும் பயன்பெற்றிருப்பர். இன்று தீர்வும் இல்லை. மாற்றுத் தீர்வும் இல்லை. I

தற்போது செய்யவேண்டியதென்ன?
———————————————
தற்போது செய்யவேண்டியது, ஒரு தற்காலிக அல்லது இடைக்காலத் தீர்வும் நிரந்தரத் தீர்வும் காணப்பட வேண்டும்.

இடைக்கால தீர்வு

இப்பொழுது ஓக்டோபர் மாதம். அடுத்துவரும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் கடல் கடும் சீற்றமாக இருக்கும் காலம். படகை கடலில் நங்கூரமிட முடியாது. துறைமுகமோ, படகுத்துறையோ தேவை. ஒன்றில் ஒலுவில் பாதிக்கப்படாத வகையில் தற்காலிகமாக தோண்டி படகுகளை பாதுகாக்க முடியுமா? என பார்க்க வேண்டும்.

முடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை தோண்டி படகுகளைக் கட்டமுடியுமா? எனப்பார்க்க வேண்டும்? அதுவும் முடியாவிட்டால் வேறு என்ன ஏற்பாடுகள் செய்யமுடியுமென ஆராயவேண்டும். இதை நிபுணர்களை அழைத்துவந்து அவசரமாக செய்யவேண்டும்.

நிரந்தரத் தீர்வு
——————-
வெளிநாட்டு நிபுணர்களையாவது அழைத்துவந்து ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா? என ஆராயவேண்டும். முடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை மீன்பிடித் துறைமுகமாக்க முடியாது; breakwater கட்டுவதில் பிரச்சினை இருக்கிறது; என தலைவரின் காலத்தில் செய்த feasibility study கூறுகின்றது. எனவே அதனை முழுமையான படகுத்துறையாக மாற்றவேண்டும்.

அதுவும் சாத்தியமில்லை; எனில் கல்முனையில் யுத்தகாலத்திற்குமுன் படகுகட்டிய ‘முனை’ எனும் இடமிருக்கிறது. அது சற்று அமைதியான கடல். அங்கு ஒரு மீனவ துறைமுகமோ, படகுத்துறையோ கட்டுவது தொடர்பாக ஆராயவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் எனது மக்கள். எனது பொறுப்பற்றதனத்தினால்தான் இன்று இந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இதனை எப்படியாவது தீர்க்கவேண்டும்; என்கின்ற உள்ளத்துடிப்பு இருக்கவேண்டும்.

Web Design by The Design Lanka