நான் விக்னேஸ்வரனோ கஜேந்திரகுமாரோ சுரேஷோ அல்ல- சுமந்திரனை சாடிய மனோ கணேசன் » Sri Lanka Muslim

நான் விக்னேஸ்வரனோ கஜேந்திரகுமாரோ சுரேஷோ அல்ல- சுமந்திரனை சாடிய மனோ கணேசன்

mano

Contributors
author image

Farook Sihan - Journalist

(video)

எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் மரங்கொத்தி பறவை வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் கதைக்க முயன்று மாட்டிக் கொள்கிறார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனும், கஜேந்திரகுமார் பொன்னபலத்துடனும், சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் பேசுவதுபோல் என்னுடனும் பேசிவிடலாம் என நினைக்கிறார். ஆனால் நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்ல.“இப்படி தெரிவித்தார் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்.

பல்வேறு நிகழ்ச்சிகளிற்காகவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோகணேசன், நேற்று (10) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மனோ கணேசனை பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் மனோ கணேசன்.

அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது- “தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் பகைமை பாராட்டி வருகின்றார். ஆயுதப் போராட்டங்களின் ஆரம்பங்களில் பகை முரண்பாட்டையும், நட்பு முரண்பாட்டையும் ஆயுத போராட்டங்களின் தலைவர்கள் சரியாக உணர்ந்து கொள்ள தவறியமையால் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள்.
அவ்வாறு பல கட்சிகள் இருக்கலாம் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

அவை பகை முரண்பாடாக அமைந்து விடக்கூடாது. அவை நட்பு முரண்பாடாக அமையவேண்டும். எப்படி ஆயுத போராட்ட இயக்கங்கள் ஒருவருக்கொருவர் பகை முரண்பாட்டை வளர்த்துக் கொண்டமையால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தையே அது பாதித்ததோ, அவ்வாறே இப்போது கட்சிகளுக்கிடையிலான பகை முரண்பாடும் இனத்தை பாதிக்கும். வரலாற்றில் இருந்து நாங்கள் தெளிவடைய வேண்டும்.

வரலாறு தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளவேண்டும். நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும், எனக்குதான் எல்லாம் தெரியும் என்ற மனோநிலையில் இருக்க கூடாது. நான் அனைவருக்கும் நண்பன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் மாதிரிக்கிராமம் ஒன்று கையளிக்கும் நிகழ்வில் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. சஜித் பிறேமதாஸ என்னுடைய நண்பன். நான் அமைச்சர் சபையில் வடகிழக்கு மக்களுக்கு வீட்டு திட்டங்கள் கொடுக்கப்படவேண்டும் என சண்டையிட்டவன். அதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிறேமதாஸ மாதிரி கிராமங்களை உருவாக்கி வருகின்றார்.

ஆனால் அவருடைய மாதிரி கிராம திட்டத்திற்கும் எனது வீட்டு திட்டங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீட்டு திட்டங்களை நாங்கள் அமைக்கவுள்ளோம். ஒவ்வொன்னும் 12 லட்சம் பெறுமதியான அரச நன்கொடையில் கட்டப்படவுள்ளன. மேலும் நான் நல்லிணக்க அமைச்சை பொறுப்பேற்று 2 மாதங்களே ஆகின்றது. ஆகவே இதற்கு முன்னர் இடம்பெற்ற தவறுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

மரங்கொத்தி பறவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனும், கஜேந்திரகுமார் பொன்னபலத்துடனும், சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் பேசுவதுபோல் என்னுடன் பேச எத்தனிக்க கூடாது. நான் மனோகணேசன்.

நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்ல. கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோதே நான் அநியாயங்களுக்கு எதிராக பேசியவன். நீங்கள் அரசுக்கு உள்ளே ஆளுங்கட்சி வெளியே எதிர்கட்சி, நான் அரசுக்கு உள்ளே எதிர்கட்சி வெளியேதான் ஆளுங்கட்சி என்பதை உணரவேண்டும். பகை முரண்பாட்டுடன் என்னை சந்திக்காதீர்கள். நல்லவேளை ஆயுதங்கள் இல்லை. இருந்திருந்தால் என்னை கொன்றிருப்பார்கள் போலும்.

மனோ கணேசன் வடக்கில் அரசியல் செய்யப் போகிறாரா என செய்தியாளர்களும் கேட்கிறார்கள். தெற்கிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும், ஜேவிபியும் வடக்கு கிழக்கிற்கு வந்து அரசியல் செய்யலாமெனில், மனோ கணேசன் வந்து செய்வதில் என்ன தவறு?

எங்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம். வடக்கு கிழக்கிலுள்ள ஏராளம் மக்கள் தமிழ் தேசிய கட்சிகளிற்கு வாக்களிக்காமல் வெளியில் உள்ளனர். அவர்களைத்தான் தென்னிலங்கை கட்சிகள் குறிவைக்கிறார்கள். நாங்கள் அவர்களை எமக்குள் எடுக்கிறோம். தமிழ் தேசிய அரசியலுக்குள் அவர்களையும் கொண்டு வருகிறோம். நாங்கள் இங்கு வருவதால், தமிழ் தேசிய அரசியல் பலப்படுமே தவிர, பலவீனப்படாது. எதிர்காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி, வடக்கு கிழக்கிலும் போட்டியிடலாம்“ என்று கூறினார்.

Web Design by The Design Lanka