சீஷெல்ஸ் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்றமையினால் கைது செய்யப்பட்ட சகல மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் – ஜனாதிபதி » Sri Lanka Muslim

சீஷெல்ஸ் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்றமையினால் கைது செய்யப்பட்ட சகல மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் – ஜனாதிபதி

maith

Contributors
author image

Presidential Media Division

சீஷெல்ஸ் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக சீஷெல்ஸ் நாட்டின் கடல் எல்லையில் மீன்பிடிக்கச் சென்றமையினால் கைதுசெய்யப்பட்ட சகல இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

அக்கலந்துரையாடலின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டுக்கு இணங்க மேற்குறிப்பிட்ட அனைத்து மீனவர்களும் இன்று மதியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக நேற்று (10) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “மிரிதிய வருண – 2018” விருது வழங்கும் விழாவின்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மீன்பிடித் துறையும் மீனவ சமூகமும் நாட்டிற்கு வலுசேர்க்கும் சக்தியாக இருக்கின்றனர் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவர்களை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புக்களும் குறைவின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

மீன்பிடித் துறை மற்றும் மீனவ சமூகத்தின் நலனுக்காக கடந்த அரசாங்கங்களை விட பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மீனவ சமூகத்திற்காக நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை மேலும் பலப்படுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கிராமிய மீன்பிடி அமைப்புகளால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட மனுவொன்றும் இதன்போது கையளிக்கப்பட்டதுடன், நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் விடுவதை அதிகரித்தல், மீன்பிடி உபகரணங்களை பெற்றுகொள்ளல், நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்காக அரச காணிகளை பெற்றுக்கொள்ளல், நீர் நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக அதிகாரிகளை நியமித்தல், மீன்பிடித் துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மீன்பிடித் துறையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு இவ்வருட வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிக நிதியை ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.

நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாராட்டுவதற்காக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக பல்வேறு துறைகளின் கீழ் விசேட தொழில் நிபுணத்துவத்தையும் தொழில்சார் அபிவிருத்தியையும் வெளிக்காட்டிய நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.

மீனவ மக்களுக்கான மீன்பிடி படகுகளையும் வலைகளையும் வழங்குவதற்கான உரிமைப்பத்திரமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

மீனவ சமூகத்தினரால் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பிரதியமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட மக்கள் பிரநிதிகளும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நுவன் பிரசன்ன மதவன்ஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான மீனவ மக்களும் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-10-10

Web Design by The Design Lanka