எத்தனை சிறைகளில் அடைத்தாலும் எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது » Sri Lanka Muslim

எத்தனை சிறைகளில் அடைத்தாலும் எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது

johnston1

Contributors
author image

ஊடகப்பிரிவு

joint opposition tamil media uni


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸடன் பெர்னாண்டோவின் கைது விவகாரம் ஒரு அரசியல் பழிவாங்கள் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நலம் விசாரிக்க கேகாலை சிறைச்சாலைக்கு சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது நிதி முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் முதலில் அவருக்கு எதிராக 5.3 மில்லியன் நிதி மோசடி செய்துள்ளார் என குறிப்பிட்டனர்.பின்னர் அது 3.8 மில்லியனாக குறைந்தது பின்னர் அதிலும் சுமார் 1.3 மில்லியனாக குறைந்துள்ளது.தற்போது வழக்கு விசாரணைகளில் சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் தெளிவாகியுள்ளது.

மேலும் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனை சிறையில் அடைப்பது தொடர்பில் நீதி மோசடி பிரிவினர் உரையாடியதாக கூறப்படும் ஒலிப்பதிவுகள் சமூக வலைகளில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் நாம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.குறித்த ஒலிப்பதிவில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸடன் ஏன் சிறைப்படுத்தப்பட்டார் என்பதற்கு தெளிவான ஆதாரம் உள்ளது.

கூட்டு எதிரணி உறுப்பினர்களுக்காக மாத்திரம் நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்த நாட்டு நீதிமன்றங்களில் சில அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஓரிரு மணித்தியாளங்களில் பிணை கிடைக்கிறது.

மத்திய வங்கியை கொள்ளையிட்ட பிரதானிகள் இன்று சுதந்திரமாக உள்ளபோது கூட்டு எதிரணி முக்கியஸ்தர்களுக்கு எதிராக மாத்திரம் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைக்கிறார்கள்.

எத்தனை சிறைகளில் அடைத்தாலும் எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka