“எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு » Sri Lanka Muslim

“எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

mai66

Contributors
author image

Presidential Media Division

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளுக்கும் அச்சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளுக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கான தளமொன்றை உருவாக்குவதை அடிப்படையாகக்கொண்ட “எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் அலரிமாளிகையில் ஆரம்பமானது.

இம்மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறும். பூகோள வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கம் செலுத்தும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு அளவிலான எண்ணெய் கப்பல்களும் மூன்றிலொரு பங்கு அளவிலான சரக்கு கப்பல்களும் பயணம் செய்கின்ற மிக முக்கியமான கடல் மார்க்கமாக அமைந்துள்ள இந்து சமுத்திரம் உலகின் தீர்க்கமான வர்த்தக மார்க்கங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் அதற்கு வெளியில் அமைந்துள்ள நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதிதிகள், நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றுவதுடன், இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிடம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருவது தொடர்பாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது முக்கியமானதாகும் என்பதுடன், இலங்கையை பிராந்திய வர்த்தக சேவைகள் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாற்றும் கொள்கை இம்மாநாட்டின் மூலம் மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொள்கை வகுப்பாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்குபற்றும் இம்மாநாடு பிரதமர் அலுவலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, லக்ஸ்மன் கதிர்காமர் நிலையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பூகோள சமுத்திர குற்றங்களை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் சமுத்திரம் தொடர்பான விசேட பிரதிநிதி தூதுவர் பீட்டர் தொம்சன் அவர்களும் இம்மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.10.11

Web Design by The Design Lanka