சத்தியாக்கிரகம் விஷ்வரூபமாகி பேரணியாக மாவட்ட செயலகத்தை மக்கள் முற்றுகை: மகஜர் கையளிப்பு. » Sri Lanka Muslim

சத்தியாக்கிரகம் விஷ்வரூபமாகி பேரணியாக மாவட்ட செயலகத்தை மக்கள் முற்றுகை: மகஜர் கையளிப்பு.

protest

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(இஹ்ஸான் பைரூஸ்)


புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக விஸ்வரூபமெடுத்தது. இதுவரை புத்தளம் காணாதளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒன்று கூடியிருந்தனர்.

புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக புத்தளத்தில் கடந்த 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 வது நாளான நேற்று வெள்ளிக்கிழமை,போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றன. புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழுவுடன் இணைந்து க்ளீன் புத்தளம் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் இனம், மதம் பாராது ஆக்ரோஷமான எதிர்ப்பு பதாகைகளுடன் சந்ததி காக்கும் இந்த சரித்திர போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

அருவக்காளு, சேரக்குளிய பிரதேசத்தில் கொழும்பின் குப்பை கூளத்தைக் கொண்டு வந்து தட்டும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு எதிரான பொது மக்களின் சுழற்சி முறையிலான சத்தியாகிறக போராட்டம் 14 வது நாளான நேற்று புத்தளம் நகரினை ஸ்தம்பிதம் அடைய செய்தது. இதன் காரணமாக புத்தளத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புத்தளம் நகரம் எங்கும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கில் நேற்று சகல ஜும்ஆ பள்ளிகளிலும் ஜூம்ஆத் தொழுகை பகல் 12.40 க்கு நிறைவடைந்தது.

புத்தளம், கல்பிட்டி, பாலாவி, நாகவில்லு, எழுவன்குளம், கரைத்தீவு, சேறாக்குழி, மதுரங்குளி, கடையாமோட்டை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்து மக்கள் வெள்ளம் புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு திரண்டிருந்தனர். விளையாட்டு கழகங்கள், சமூக சேவை அமைப்புக்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், இந்து சமூகத்தினர், வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மகளிர் அமைப்புக்கள் என பலரும் இந்த பேரணியில் இணைந்திருந்தனர்.

தங்கள் குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பாக பதாதைகளை ஏந்தி வரப்பட்டதோடு அந்தந்த பதாதைகளை பின்தொடர்ந்து அதனை சார்ந்தவர்கள் குழுவாக, வேண்டாம் வேண்டாம், குப்பை வேண்டாம் என ஒருமித்து குரல் எழுப்பியவாறு இந்தப் பெரணியினைப் பின்தொடர்ந்தனர். குறிப்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய வண்ணம் கலந்து கொண்டிருந்தது முக்கிய அம்சமாகும்.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்தது. புத்தளம் மாவட்ட சர்வ மத செயற்குழுவினால் நான்கு பக்கங்களில் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று புத்தளம் மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புத்தளம் கொழும்பு முகத்திடலில் வழமை போன்று 14 வது நாளாக சத்தியா்கியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

Web Design by The Design Lanka