வன வளத்தை பாதுகாப்பதற்கு சகல அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

வன வளத்தை பாதுகாப்பதற்கு சகல அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

President-Maithripala-Sirisena-1_850x460_acf_cropped

Contributors
author image

Presidential Media Division

வன வளத்தை பாதுகாப்பதற்கு சகல அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதிநாட்டின் வன அடர்த்தியை அதிகரித்து தேசிய அபிவிருத்தி இலக்கை நோக்கி பயணிப்பதற்கு சகல அரசாங்க அதிகாரிகளும் தங்களது பொறுப்புகளை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் வட்டார வன அலுவலகங்களுக்கான உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வும் இன்று (12) முற்பகல் பத்தரமுல்ல, அபேகம வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

வன வளத்தையும் சுற்றாடலையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் உறுதி மொழிகளை பேணி நடப்பதற்கும் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பதற்கும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை உரிய இலக்குகளை நோக்கி கொண்டு செல்வதற்கு இன்று நியமனம் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர் என தான் நம்புவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மிகவும் குறைந்த மட்டத்தில் சுமார் 2 வீதமேயுள்ள கம்பஹா மாவட்டத்தின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றின் அவசியம் பற்றியும் விளக்கினார்.

நல்லாட்சி அரசாங்க எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் போதும் பதவியொன்றிற்கு நியமனம் வழங்குகின்றபோதும் பாரபட்சமின்றி அதனை மேற்கொள்ளுமாறு தான் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

30 – 32 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகவுள்ள அரசாங்க சேவையின் வினைத்திறனை மேம்படுத்தி நாட்டின் எதிர்காலத்திற்கான சவால்களை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

வட்டார வன அதிகாரிகள், வன பரம்பல் அதிகாரிகள் மற்றும் வன கள உதவியாளர்கள் என வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 310 க்கும் மேற்பட்ட நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றில் சில நியமனக் கடிதங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் வட்டார வன அலுவலகங்களுக்கான உற்பத்தித்திறன் விருதுகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சாந்த விஜேரத்ன, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் அநுர சதுருசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-10-12

Web Design by The Design Lanka