வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் பலி » Sri Lanka Muslim

வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் பலி

201810192308477776_1_train-5._L_styvpf

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

சண்டிகர்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே வெள்ளிக்கிழமை இரவு ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமிர்தசரஸ் நகர துணை மாஜிஸ்திரேட் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அசம்பாவிதத்துக்கு தசரா விழா குழுவினரின் அஜாக்கிரதையே காரணம் என கூறப்படுகிறது. அந்த பகுதியை கடந்துபோகும் போது ரெயிலின் வேகத்தை குறைக்குமாறு அவர்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது, ரெயில் வரும் நேரம் தொடர்பாக அங்கு குழுமி இருந்த மக்களிடம் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்திருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.

இந்த விழாவை காங்கிரஸ் கட்சியினர்தான் நடத்தினார்கள். நவ்ஜோத் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மக்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தும்கூட அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். எனவே, இந்த விபத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என இன்னொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப்பில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை பஞ்சாப்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பஞ்சாப் ரெயில் விபத்து பற்றி அறிந்தவுடன், அவர் தனது அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, இந்தியா விரைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘பஞ்சாப் ரெயில் விபத்தை கேள்விப்பட்டு, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? : இந்தநிலையில் இந்த ரயில் விபத்து நடந்தது எப்படி என்று தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா விழாவில் ராவண உருவபொம்மை வதத்தின் போது பட்டாசுகள் வெடித்து அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் போது அந்த வழியாக வந்த ரயில் மோதியது. ரயில்வே கேட் மூடியிருந்ததால் அந்த வழியாக வந்த ரயிலும் நிற்காமல் மக்கள் மீது மோதிவிட்டு சென்றது.

ரெயில்வே அளித்துள்ள தகவலின்படி, : தசரா விழாவில் ராவண உருவபொம்மை வதத்தின் போது பட்டாசுகள் வெடித்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து மூடியிருந்த ரயில்வே கேட்டை நோக்கி சென்றதால் விபத்து ஏற்பட்டது. 27-வது ரயில்வே கேட் வழியாக புறநகர் ரயில் எண் 74943 சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. ரயில்வே கேட் மூடியிருந்ததாக ரயில்வே நிர்வாகம் கூறும் நிலையில் கேட் திறந்திருந்தாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka