சகோதரர் அஹமத் தீதாத் எழுதிய "What was the Sign of Jonah" என்ற நூலின் தமிழாக்கம் » Sri Lanka Muslim

சகோதரர் அஹமத் தீதாத் எழுதிய “What was the Sign of Jonah” என்ற நூலின் தமிழாக்கம்

9781471632686_p0_v1_s550x406

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சகோதரர் அஹமத் தீதாத் எழுதிய “What was the Sign of Jonah” என்ற நூலில் தமிழ் பேசும் கிறிஸ்த்தவர்களுக்கு பதில் அளிக்க கூடிய பகுதியினை தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

Source: What was the sign of Jonah?
Author: Sheikh Ahmed Deedat
தமிழில்: முஹம்மது நிப்றாஸ்


யோனாவின் அடையாளம்

பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ நண்பர்கள் இயேசுநாதரையே  “கிறிஸ்த்து” என்று நம்புகிறார்கள். மேலும், யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட “மேசியா” இயேசுதான் என்று மிக ஆணித்தரமாக நம்புவதோடு தங்கள் நம்பிக்கைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னறிவிப்புக்களை தாங்களும் யூதர்களும் வேதமாக கருதும் பழைய ஏற்பாட்டில் இருந்து சமர்ப்பிக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் 1000 முன்னறிவிப்புக்களையும் ஒரு கணம் வைத்து விட்டு, இயேசுவால் மிகத்தெளிவாக யூதர்களை நோக்கி கூறப்பட்ட ஒரே ஒரு முன்னறிவிப்பையும், அதை இயேசு முழுமைப்படுத்தினாரா என்பதையும் இங்கு ஆய்வு செய்வோம்.

புனித லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்; பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.(லூக்கா 2:21).

அன்னை மரியாளுக்கு கர்பத்திலே குழந்தை உருவாகும் முன்னரே அந்த குழந்தைக்கு “இயேசு” என்று பெயரிட்டதாக மேலுள்ள வசனம் கூறுகிறது. எனவே “கிறிஸ்த்து” என்பது இயேசுநாதருக்கு வழங்கப்பட்ட பெயர் அல்ல. என்றாலும், யோவான் ஸ்நானன் முன்னிலையில் தான் ஞானஸ்நானம் பெற்ற சந்தர்ப்பத்திலேயே தன்னை கிறிஸ்த்து என்று பிரகடனப்படுத்தினார் இயேசு. எனவே “கிறிஸ்த்து” என்பது அவருடைய பதவியைத்தான் குறிக்கும்.

சரி, இயேசு தன்னைக்குறித்து “நான் தான் கிறிஸ்த்து” என்று சொன்ன வார்த்தைகளை அன்றைக்கு வாழ்ந்த யூதர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிலேயிருந்த அறிஞர்களும், பண்டிதர்களும் தாமாக முன்வந்து இயேசுவிடம் தங்களுக்கு ஓர் ஆதாரத்தை அல்லது அடையாளத்தை சமர்ப்பிக்குமாறு வேண்டினார்கள்.

அடையாளம் வேண்டி நின்ற யூதர்கள்
பரிசேயரிலும், யூதர்களிலும் கற்றறிந்தவர்களில் சிலர் இயேசுவை நோக்கி வந்து;  போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள் (மத்தேயு 12:38).
உண்மையில் அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு வகையான “மந்திரச் செயல்”, அல்லது “சாகசம்”, அல்லது “வித்தை” போன்றதையே; உதாரணமாக, தலைப்பாகையில் இருந்து முயலை வெளிவரச் செய்தல், நீரில் நடத்தல், அந்தரத்தில் பறப்பது, அல்லது தீ மிதிப்பது போன்ற கைசாதூரியங்களை கூறலாம். இந்த மாதிரியான ஒரு அடையாளத்தையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். இயேசுவை அவர்கள் ஒரு சூனியக்காரர், அல்லது  எமாற்றுவித்தைக்காரர் என்று பிழையாக புரிந்து கொண்டார்கள் போல.

ஒரே ஒரு அடையாளம் மட்டுமே
யூதர்களின் கேள்விக்கு இயேசு ஒரு வகையான கோபத்தோடும், எரிச்சலோடும் பதிலளிக்கிறார் (நியாயமான கோபம் என்றே சொல்ல வேண்டும்);

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள், ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.  (மத்தேயு 12:39).

தன்னுடைய வருகையினை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரே ஒரு அடையாளமாக இங்கு இயேசுநாதர் சொல்வது “தீர்க்கதரிசி யோனாவின் அடையாளத்தை போன்றதாகும்” என்பதே. மேலும், ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது; அதாவது, தன்னுடைய வாழ்க்கையில் இறை அருளால் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக்காண்பித்த இயேசு அவற்றை எல்லாம் சொல்லாமல் எதிர்காலத்தில் தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நடக்க இருக்கும் ஒரு நிகழ்வை சொல்வது மிகவும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

மரித்தவர்களுக்கு உயிரளித்தது, நோயாளர்களை குணப்படுத்தியது, மற்றும் குறைந்த அளவு உணவுப்பொருட்கள் மூலம் அநேகம்பேருக்கு உணவளித்தது போன்றவற்றை இங்கு கூறாமல், அல்லது செய்து காண்பிக்காமல்”யோனாவின் அடையாளத்தை” அறுதியாக கூறுவது இந்த முன்னறிவிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

சரி, நமது அருமை கிறிஸ்தவ நண்பர்களை பார்த்து; இயேசு தன் வாழ்க்கையில் கூறிய மிக முக்கியமான இந்த முன்னறிவிப்பை நிறைவேற்றினாரா? என்று கேட்டால், கேட்ட மாத்திரத்தில் “ஆம்” என்ற பதிலை நம்பிக்கையோடு முழங்குவார்கள். என்றாலும், பைபிளில் உள்ள கட்டளைகளில் தங்களுக்கு கஷ்ட்டமானதை விட்டுவிடுவது கிறிஸ்த்தவ நண்பர்களின் வழக்கமாயிற்று. இருந்தபோதிலும், நாம் ஞாபகப்படுத்த தயங்கமாட்டோம். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:21)

யோனாவின் அடையாளம்
யோனா தீர்க்கதரிசியின் அடையாளம் என்றால் என்னவென்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், பழைய ஏற்பாட்டில் உள்ள “யோனா” என்ற ஆகமத்தை நாங்கள் ஆய்வுக்கு எடுக்க வேண்டும். யோனாவை நினிவே என்ற நகருக்குச் செல்லுமாறும், அங்குள்ள மக்களை மனந்திரும்ப அழைக்குமாறும் கர்த்தர் கட்டளையிட்டார்.

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.(யோனா 1:1-2).

எனினும், நினிவேவுக்குச் செல்வதை விரும்பாத யோனா “தர்ஷீசு” எனும் இடத்திற்குச் செல்வதற்காக ஒரு கப்பலில் ஏறினார், கர்த்தரின் கட்டளையினை விட்டும் தூரமாகி தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். கடலிலே மிகப் பெரும் புயல் உருவானது, “தேவனின் கட்டளைகளுக்கு மாறு செய்பவர் யாரும் கப்பலில் பயணம் செய்வதால்தான் இந்த புயல் உருவாக்கியிருக்கிறது ” என்பது அவருடன் கப்பலில் பயணம் செய்த சக பிரயாணிகளின் நம்பிக்கை. அவர்கள் அந்த நேரத்தில் தங்களுக்கிடையில் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப் போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
(யோனா 1:7)

பொதுவாக பார்த்தால் இது ஒரு மூடநம்பிக்கையாக தெரிந்தாலும், யோனாவின் விடயத்தில் இது உண்மையாகவே இருந்தது. என்றாலும், யோனாவே தாமாக முன்வந்து, தன்னுடைய குற்றத்தின் காரணமாகவே இவ்வாறு புயல் உருவானது என்று கூறினார். நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும். என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
(யோனா 1:12)

உயிருடனா அல்லது மரணித்தா?
எந்த ஒரு சுயநலமும் அற்றவராக தாமாகவே முன்வந்து தன்னை கடலில் எறியுமாறு கூறிய யோனாவை, கடலுக்குள் எறியும் முன் யாரும் கழுத்தை நெரிக்கவோ அல்லது ஈட்டியால் குத்தவோ அல்லது கை கால்களை முறிக்கவோ அல்லது எந்த வகையிலும் கட்டாயப்படுத்தவோ வேண்டிய தேவை இருக்கவில்லை. அவராக முன்வந்து “நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுங்கள்” என்று கூறுகிறார்.

இப்போது நாம் முன்வைக்கும் முதல் கேள்வி என்னவென்றால், யோனா கடலில் எறியப்படும்போது உயிருடன் இருந்தாரா? அல்லது மரணித்திருந்தாரா? “உயிரோடுதான் இருந்தார்” என்பதே அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களினதும் பதிலாக அமையும்.

பிறகு புயல் அடங்குகிறது. கடலில் எறியப்பட்ட யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்குகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நமது இரண்டாவது கேள்வியைக் கேட்பது பொருத்தமாக இருக்கும். அதாவது, மீன் யோனாவை விழுங்கிய சந்தர்ப்பத்தில் யோனா உயிருடன் இருந்தாரா இல்லையா? மீண்டும் நமது அருமை கிறிஸ்தவ நண்பர்கள் “உயிரோடுதான் இருந்தார்” என்று சந்தேகமில்லாமல் கூறுவார்கள்.

இன்னும் மீனுடைய வைற்றுக்குள் இருக்கும்போது “யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி” (யோனா 2:1) பிரார்த்தனை செய்திருக்கிறார், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இங்கு நமது மூன்றாவது கேள்வி எழுகிறது, மீனுடைய வயிற்றில் இருக்கும்போது யோனா உயிருடன் இருந்தாரா அல்லது மரணித்திருந்தாரா? “உயிரோடுதான் இருந்தார்” என்பது அனைவரினதும் பதில். ஏனென்றால், மரணம் வரைத்தான் ஒருவருக்கு பாவமன்னிப்புக்கான காலக்கெடு, உயிரோடு இருக்கும்போதுதான் அழுவதும், மன்னிப்பு கேட்பதும். எனவே மீனுடைய வயிற்றுக்குள் யோனா “உயிரோடுதான் இருந்தார்” என்பது உறுதியாகிறது.

மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் மீனின் வயிற்றில் இருந்த சந்தர்ப்பத்தில் யோனா உயிரோடுதான் இருந்தார், அடுத்த நாள் மீன் அவரை கரையோரத்தில் வெளியே கக்கியது. (பார்க்க; யோனா 2:10). அப்போதும் அவர் “உயிரோடுதான் இருந்தார்.”

இதுவரை யோனாவின் அடையாளம் என்னவென்பதை தெளிவாக பார்த்தோம். அடுத்து இதே யோனாவின் அடையாளத்தை முன்னிறுத்தி இயேசு “தானும் அதைப்போல ஒரு அடையாளத்தை நிகழ்த்துவேன்”என்று கூறிய முன்னறிவிப்பை எடுத்துக் கொள்வோம்.

“யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்”
(மத்தேயு 12:40).

(இங்கு தமிழ் மொழி பெயர்ப்புகளில் வேறுபாடு உள்ளது;
பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படும் தமிழ் மொழிபெயர்ப்பிலே “இரவும் பகலும் மூன்றுநாள்” என்று உள்ளது.  திருவிவிலியம் என்று அழைக்கப்படும் கத்தோலிக்க பைபிளில் “மூன்று பகலும் மூன்று இரவும்” என்று ஆங்கில மொழி பெயர்ப்பை சரியாக தழுவி இருக்கிறது. தமிழ் பைபிள்கள் எல்லாம் ஆங்கில பைபிள்களின் மொழிபெயர்ப்பாக உள்ளதால், “மூன்று பகலும் மூன்று இரவும்” என்பதே சரியான மொழிபெயர்ப்பு ஆகும்.)

“யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல” என்று யோனாவையும் தன்னையும் ஒப்பிட்டு தானும் அவ்வாறே இருப்பேன் என்கிறார் இயேசுநாதர். இரண்டு மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒப்பீடு செய்ய வேண்டுமென்றால் முதலில் இருவரும் உயிரோடு இருக்க வேண்டும். ஏனென்றால், இவருடைய வாழ்நாளில் நடந்த விடயமாற்றே. சரி யோனா மீனின் வயிற்றில் எவ்வாறு இருந்தார்? உயிருடன் இருந்தாரா அல்லது மரணித்திருந்தாரா? “உயிரோடுதான் இருந்தார்” என்பது பல கோணங்களில் ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட உண்மை. கிறிஸ்த்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. அவ்வாறென்றால், இயேசு???

கிறிஸ்த்துவைப் பொய்யாக்கும் கிறிஸ்த்தவர்கள்
மீனுடைய வயிற்றில் யோனா உயிரோடு இருந்திருந்தால், இயேசுவும் தன்னுடைய கல்லறையில் உயிரோடுதான் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் “யோனாவைப்போல” என்ற வார்த்தையினை இயேசு உண்மைப்படுத்தியதாக அமையும். ஆனாலும், பாவமீட்சிக்கு (?) இயேசுவின் சிலுவைப்பலிதான் அடிப்படையாக அமைவதால், இயேசு “மரணித்தார்” என்று சிந்தனையை இழந்து கூறுவார்கள் நமதருமை கிறிஸ்தவ சகோதரர்கள்.
இயேசுவின் முன்னறிவிப்போ “யோனாவைப்போல” என்பது, கிறிஸ்த்தவ சகோதரர்களின் நிலையோ “யோனாவுக்கு முரணானது” என்பது. “யோனாவைப்போல” என்ற இயேசுவின் முன்னறிவிப்பு பொய்யாக்கப்பட்டுள்ளது.

யோனா உயிரோடு இருந்தார், இயேசுவோ மரித்திருந்தார் – தெளிவான முரண்பாடு. இந்த முரண்பாட்டு நிலையினை நாங்கள் ஏற்றுக்கொண்டால், இயேசுவை மறுத்துக்கொண்டிருந்த அன்றைய யூதர்களையும், இன்றைய யூதர்களையும் நாம் எந்த வகையில் விமர்சிக்க முடியும்?

“நான்தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கிறிஸ்த்து” என்பதை நிரூபிக்க இயேசு முன்வைத்த ஒரே ஒரு அடையாளம் “யோனாவின் அடையாளத்தை போன்ற ஒரு அடையாளமே” ஆகும். இல்லை இல்லை இயேசு மரணித்தார் என்றே நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதன் மூலம் கிறிஸ்தவர்களே இயேசுவை பொய்ப்பிக்கிறார்கள். இப்போது கூறுங்கள், யூதர்களை குறை கூறுவது எந்த வகையில் நியாயம்?

(குறிப்பு: யோனா உயிரோடு இருந்ததைப்போல இயேசுவும் உயிரோடுதான் இருந்தார் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். இயேசுவின் வார்த்தைகளை உண்மைப்படுத்துகிறோம்.)

அன்பார்ந்த கிறிஸ்த்தவ நண்பர்களே,

இஸ்ரவேல் மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட “கிறிஸ்த்து” நான்தான் என்பதை நிருபிப்பதற்காக யூதர்களை நோக்கி இயேசுவால் கூறப்பட்ட ஒரே ஒரு முக்கியமான அடையாளம்/ஆதாரம் இந்த முன்னறிவிப்பாகும். இயேசுவைக் கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், உண்மையாளராகவும் ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் அவர் சொல்லிய வார்த்தையினை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதேன்?

மீனுடைய வயிற்றில் யோனா உயிரோடு இருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, அதேபோல நானும் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) உயிரோடு இருப்பேன் என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளை மறுப்பது மிகப்பெரும் அநியாயம் ஆகும்.

இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் தான் உங்கள் அடிப்படைக் கொள்கை என்பதற்காக நம் உயிரிலும் மேலான இயேசுவின் முன்னறிவிப்பை பொய்யாக்க வேண்டாம்.

யோனாவின் அடையாளம் என்பது யோனா தீர்க்கதரிசி மீனின் வயிற்றில் உயிரோடு இருந்த அற்புத நிகழ்வாகும். அதேபோல, இயேசுவும் மூன்று பகல், மூன்று இரவுகள் உயிரோடு இருந்து மிகப்பெரும் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இதனை ஏற்றுக்கொண்டால், இயேசுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, யூதர்கள் அமைத்த கட்டுக்கதையே “இயேசுவின் மரணம்” எனும் கோட்பாடு. அந்த முயற்சியில் யூதர்கள் மிகப்பெரும் வெற்றி கண்டுள்ளார்கள்.

யூதர்களின் கட்டுக்கதைகளை நம்பாமல், இயேசுவின் வார்த்தைகளையும் போதனைகளையும் நம்பும் நன்மக்களாக கர்த்தர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.

9781471632686_p0_v1_s550x406

Web Design by The Design Lanka