சொந்த இடமின்றி நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே வாழுகின்றனர் » Sri Lanka Muslim

சொந்த இடமின்றி நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே வாழுகின்றனர்

download (3)

Contributors
author image

A.S.M. Javid

வடமாகாணத்தலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டு இம்மாதத்துடன் சுமார் 28 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றாலும் இன்று வரை இந்த மக்களில் எழுபது சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த இடமின்றி நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே வாழுகின்றனர்.

இவர்களுக்கான மீள் குடியேற்றமோ அல்லது வீடமைப்புத் திட்டங்களோ காணல் நீராகவே இருக்கின்றது. எந்தவொரு அரசாங்கமும் வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் உறுதியானதும், ஆக்கபூர்வமானதுமான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டை அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த மக்களின் மீள் குடியேற்றமும் வடமாகாணத்தில் அரசியல் வாதிகளாலும், ஒருசில அரச அதிகாரிகளாலும் திட்டமிட்ட வகையில் தொடராக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

இம்மக்கள் சார்பாக ஒருசில நபர்களதும், அமைப்புக்களதும் குரல்களைத் தவிர இந்த நாட்டின் வேறு எந்த அமைப்புக்களோ அல்லது முஸ்லிம் அமைப்புக்களோ குரல் கொடுப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டை மான்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும், சமுக சேவையாளருமான சுலைமான் தாஜூதீன் கவலை தெரிவிக்கின்றார்.

இம்மாதத்துடன் 28 வருடங்கள் பூர்த்தியாகும் இந்த மக்களின் அவல நிலையை இலங்கை அரசிற்கும், சர்வதேசத்திற்கும் கோடிட்டுக் காட்டும் வகையில் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை இம்மக்களின் பக்கம் இம்முறையாவது கவனஞ் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் விடப்படுகின்றன. இந்த வகையில் இம்மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 26ஆம் திகதியை விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் துக்கதினமாக அறிவித்து குறித்த தின ஜூம்ஆப் பிரசங்கத்தில் இந்த மக்களின் அவல நிலை ஒழியவும், அவர்களுக்கான மீள் குடியேற்றம் உரியவாறு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுலைமான் தாஜூதீன் வடமாகாண விரட்டப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

எனவே அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை இது விடயத்தில் அதீத கவனஞ் செலுத்தி அவலப்பட்டுக் கொண்டும், துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்ற வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள் என்ற வாசகத்துடன் இலங்கையில் உள்ள சகல மஸ்ஜிதுகளிலும் ஓதப்படும் குத்பாப் பிரசங்கங்களில் இந்த மக்களின் விடயங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

Web Design by The Design Lanka