இலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மாவனல்லை காட்சி அரங்கேறுமா ? » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மாவனல்லை காட்சி அரங்கேறுமா ?

IMG_0210

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdul Waji


இன்று அதிகார பீடத்தில் ஏற்பட்டிருக்கும் நீயா?நானா? போட்டி அவ்வளவு எளிதில் தீர்ந்து விடக்கூடிய ஒன்றாக தற்போதைக்கு விளங்கவில்லை.

பாராளுமன்றம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலையில், இன்று பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி வரை ஜனாதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தற்போதும் ரணில் விகாரமசிங்கவுக்கே பெரும்பான்மை இருக்கின்றது என்ற நிலையில் மஹிந்த தரப்பு தமக்கு தேவையான சாதாரண பெரும்பான்மையை (113) பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமுகமாகவே ஜனாதிபதியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

தற்போதைய நிலையில் மஹிந்த தரப்பிடம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 95. சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 18 உறுப்பினர்கள் தேவை.

ஐ.தே.க வின் உருப்பினர்களுள் 18 உறுப்பினர்களை தமது பக்கம் திருப்பி விடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆனாலும் அதற்காக மகிந்த குடும்பம் எந்த விலையையும் செலுத்தும்.

1. பணத்தையும் , அதிகாரத்தையும் கொடுத்து உறுப்பினர்களை வாங்குதல்.
2. பலாத்காரத்தின் மூலம் அடிபணிய வைத்தல்.

இதன் மூலம் 18 உறுப்பினர்களை திரட்டி விடலாம் என்பதும் மிகப்பெரும் சவாலாகும். ஏனெனில் ஐ.தே.க வுக்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலமான பின்புலம் உருவாகியுள்ள நிலையில் இது சாத்தியம் குறைவாகும்.

ஜே.வீ.பி – அசைய மாட்டார்கள்.
த.தே.கூ – யாருக்கும் ஆதரவு தர மாட்டார்கள்.
மனோ கணேசன் கட்சி – ஐ.தே.க ஆதரவு நிலைப்பாடு

அப்படியானால் அடுத்த திட்டம்….?

முஸ்லீம் கட்சிகளை வாங்குவது.

1. முஸ்லிம் காங்கிரஸ் – 7 உறுப்பினர்களைக் கொண்ட மு.கா ,தமது ஆதரவு ரணிலுக்குத்தான் என்று தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஏனெனில் இது ரவூப் ஹக்கீமின் அரசியல் இருப்பு தொடர்புபட்ட பிரச்சினையாகும். ரவூப் ஹக்கீம் தனது சொந்த மாவட்டத்தில் போட்டியிட்டு வெல்வதாயின் ஐ.தே.க வை தவிர வேறு எந்த கட்சியிலும் வெல்ல முடியாது. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், அவர் அரசியல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவினை எடுக்க மாட்டார்.

2. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்தக் கட்சியும் எதிர்வரும் காலங்களில் ஐ.தே.க வுடனான கூட்டின் மூலமே அதிகளவான உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ள நிலையில் அவர்களும் இன்று தமது ஆதரவினை ரணிலுக்கு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் மஹிந்த தரப்புக்கு உள்ள இறுதி அஸ்திரம்…?

ஒட்டு மொத்தமாக இந்த இரு கட்சிகளும் தம் பக்கம் சாய்ந்து விடுவதற்கான புற நிலை அழுத்தங்களை தோற்றுவிப்பது. அதற்கு சாத்தியமான ஒரே வழி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரம் .

இந்த உத்தியினை இரு தரப்புமே செய்து விட்டு பழியை ஒருவர் மீது ஒருவர் போடுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

சம்பிக்க ரணவக்கவைக் காட்டி மகிந்தவும், கோத்தபாயவின் கடந்த கால பின்னணிகளைக் காட்டி ரணிலும் பரஸ்பரம் குளிர்காயவும் கூடும்.

இந்த அஸ்திரத்தை மகிந்த நுணுக்கமாக செயற்படுத்த துவங்கினால் இரு கட்சிகளும் சந்தோசமாக மஹிந்தவிடம் செல்லக் கூடும். இந்த சந்தர்ப்ப சூழ்நிலை வெளியேற்றம் எதிர்கால ஐ.தே.க உடனான தேர்தல் கூட்டுக்கு தடையாகவும் அமையாது.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒரு அஸ்திரமாக பயன்படுத்துவதென்பது பொதுப் புத்தியில் ஒரு அசாதாரண எதிர்வு கூறலாக இருக்கலாம். ஆனால் இந்த யுக்தி கடந்த 2001ம் ஆண்டு அன்றைய சந்திரிக்காவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

அன்றைய ஆளும் சந்திரிக்காவின் அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்தார். ஆட்சி கவிழ்ப்புக்கான எல்லா திட்டங்களும், பேரம்பேசல்களும் முடிவுற்று இருந்தன.

மு.கா விலகினால் மறு நிமிடமே ஆட்சி கவிழும்.

இந்த ஆட்சி கவிழ்ப்பு பேரம் பேசல்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் அன்றைய மு.கா வின் இரண்டாம் நிலைத் தலைவர்களுள் ஒருவரே ஈடுபட்டிருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பினை திட்டம் தீட்டியவர்கள் இவரை வைத்தே முஸ்லிம் காங்கிரஸினை கையாண்டனர்.

எல்லாம் முடிவு செய்யப்பட்ட பின் அமைச்சரவையிலிருந்து இராஜினாமா செய்து விடுமாறு ரவூப் ஹக்கீமுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அழுத்தங்களை கொடுத்தனர். ரவூப் ஹக்கீம் பதவியை இராஜினாமா செய்வதை விரும்பவில்லை. ஓரிரு தினங்களில் மாவனல்லையில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்களின் சொத்துக்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

இந்தக் கலவரத்துக்கு மஹிபால ஹேரத் என்பவர்தான் காரணமென்றும், முஸ்லிம்களை பாதுகாக்க சந்திரிகாவின் அரசாங்கம் தவறி விட்டது என்றும் அறிக்கை விட்டார்.

ரவூப் ஹக்கீம் இராஜினாமா செய்யப் போவதாக சந்திரிக்காவின் காதுகளுக்கு பொய்யான தகவல் எத்தி வைக்கப்பட்டது.

மறுநாள் ரவூப் ஹக்கீம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ரவூப் ஹக்கீம் ஜாவத்தையில் அஷ்ரபின் கபுரடிக்கு முன்னால் கண்ணீருடன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனவே, எந்த தரப்பினராலும் முஸ்லிம்களின் தலை உருட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

(குறிப்பு: இலங்கையில் நடப்பது ஒன்றும் கனவான் அரசியல் கிடையாது.ஆகையால் நமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளையும்,அவர்களின் மனோ நிலைகளையும் திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாது. கடந்த கால அரசியல் போக்குகளின் அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டே இது எழுதப்படுகிறது)

Web Design by The Design Lanka