வேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை » Sri Lanka Muslim

வேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை

party

Contributors
author image

S.M.M.பஷீர் 

“சீசர் என்னை நேசித்ததால் , தேம்பி அழுகிறேன் ;
அவர் அதிஷ்டமானவர் என்பதால் , அதில் நான் களிப்படைகிறேன் ;
அவர் வீரமிகுந்தவர் என்பதால் , நான் அவருக்கு மரியாதை செய்கிறேன் ; ஆனால் அவர் பேராவலுடையவர் என்பதால் அவரைக் கொன்றேன் ;

அவரின் அன்பிற்கு கண்ணீருண்டு;அதிஷ்டத்துக்கு களிப்புண்டு; வீரத்துக்கு மரியாதை உண்டு ;அவரின் பேராவலுக்கு சாவு உண்டு ”
(மார்கஸ் புரூட்டஸ் – ஜுலிய சீசர் அங்கம் மூன்று : காட்சி இரண்டு)


இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான அரசியல் வரலாற்றில் இப்படியும் நடக்குமா என்று இலங்கை மக்களை ஒரு புறத்தில் அதிர்ச்சியிலும் மறுபுறத்தில் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய சம்பவங்கள் பல அவற்றில் எல்லாம் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் , இன்றுவரை அரசியலில் சமூக , இன சிந்தனைத் தளங்களில் , காரண காரிய விளைவுகளுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவை. பரந்தளவில் செல்வாக்கு செலுத்துபவை.

அவற்றில் ஒன்று இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து , சிங்கள மொழியை அரசகரும மொழியாக்க வாக்குறுதி அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ,பௌத்த சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய சுதந்திரக் கட்சியின் முதல் பிரதமர் எஸ். டப்ளியு .ஆர்.டி பண்டாரநாயகாவை , அவரின் வீட்டில் வைத்து , தல்டுவ சோமராம தேரோ எனப்படும் ஒரு பௌத்த பிக்கு 1959 இல் சுட்டுக் கொன்றது.

அடுத்தது , ஜே வீ பீ யின் தலைவரை உலப்பனையில் வைத்து விசேட பொலிசார் கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்து , விசாரணையின் பின் அவரைக் கொன்று , இரவோடு இரவாக பொரல்லையில் உள்ள கனத்த மயானத்தில் எரித்தது (1989).

எல்லாவற்றையும் விட நடக்கவே நடக்காது என்று பலர் நினைத்திருந்த பிரபாகரனின் முள்ளிவாய்க்கால் முடிவு.

வரலாறுகளை மீட்டுவதில் மிக கிட்டிய நிகழ்வுகள் நினைவுகளில் பசுமையானவை !

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனா , இறுதி நேரத்தில் நல்லாட்சி ஞானம் பெற்ற “மைத்ரீயாக” மாற்றம் பெற்றது. (இப்பொழுது அவர் மாற்றம் பெறவில்லை என்ற ஐயம் கருக் கொள்கிறது) ஜுலிய சீசரைக் கொன்ற அவரின் அரசவை நண்பன் புரூட்டஸ் போன்று மைத்ரி மாறி அல்லது மாற்றப்பட்டு மகிந்தவை ஜனாதிபதி பதவில் இருந்து இல்லாமல் ஆக்கியது. ( மகிந்தவை ஆட்சித் தலைமையில் இருந்து அகற்றியது.)

சிறிசேனாவின் குணவியல்பு (கரக்டர் ) ஏதோ ஒரு விதத்தில் காவிய புரூட்டசின் குனவியல்பை ஒத்திருக்கிறது. அவர் (புரூட்டஸ்) தனது உயர் குனங்களுக்காவும் புகழுக்காகவும் பெருமை கொண்டவர். ஆனால் அவர் எப்பொழுதும் நடைமுறைக்குரியவரல்ல , பெரும்பாலும் வெகுளித்தன்மை கொண்டவர். (He is proud of his reputation for honor and nobleness, but he is not always practical, and is often naive.) .

ஆனால் ஜுலிய சீசரை கொன்றவர்களில் புரூட்டஸ் தன்னைக் கொல்லத் துணிந்தான் என்பதுதான் ஜுலிய சீசரை ஆச்சரியப்பட வைத்தது. ஜுலிய சீசர் போல் ” யு டூ புரூட்டஸ்” ( நீயுமா புரூட்டஸ்) என்று மைத்ரீயைப் பார்த்து ஆச்சரியத்தில் ஈனக் குரல் எழுப்பியயவர் மஹிந்த;, மைத்ரீயால் ஜனவரியில் தேர்தலில் “ஒழிக்கப்பட்டவர்”. இராமலிங்க அடிகளார் கவிதை வரிகளில் சொல்வதானால் ” கத்தியின்றி ரத்தமின்றி” மஹிந்த அகற்றப்பட்டார்.

மஹிந்த மீண்டும் எழுச்சி பெறுவார் என்பது தேர்தலின் பின்னர் உடனடியாக தென்படவில்லை . ரோமாபுரியில் சீசரின் சதிக் கொலையின் ( இறப்பின்) பின்னர் யார் பதவி ஏற்பது என்ற குழப்பம் நிலவியது போல எதுவும் இலங்கையில் நிகழவில்லை. உலகில் எங்குமில்லாத ஆட்சி உடனடியாக தயார் நிலையில் வைக்கப்பட்டு நிறுவப்பட்டது. சிறுபான்மை எதிரணியினரிலிருந்து அரசத் தலைவர் (பிரதமர் ) நியமிக்கப்பட்டார்.

பதவியில் இருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் , மொஹான் பீரிஸ் பதவி இறக்கப்பட்டார் , மீளவும் பதவி நீக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சிராணி பண்டாரநாயகா உயர் நீதிமன்ற நீதிபதியாக சடங்குக்கு பதவி ஏற்று . மறுகணமே இராஜினாமா செய்து கொண்டார். பொன்சேகா குடியுரிமையை மீளப் பெற்றார், பீல்ட் மார்ஷல் ஆக நியமிக்கப்பட்டார்.

அவரின் பெயரில் வீதி பெயரிடப்பட்டது. பீல்ட் மார்ஷல் ஒருவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருக்க முடியும் தனது நாடாளுமன்றத்தில் பறிபோன பதவிக்கு வழக்காட முடியும் , மீண்டும் தேர்தல் நடவடிக்கைகளில் அந்தப் பதவியில் இருந்து கொண்டே ஈடுபட முடியும் என்பதெல்லாம் உலகில் எங்கும் நடைபெறாத சம்பவங்கள். இன்றைய எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பதா அல் – சிசி கூட தனது பீல்ட் மார்ஷல் பதவியை இராஜினா செய்து விட்டே தேர்தலில் இறங்கினார். அதுதான் உலக நடை முறை.

தங்களுக்கென ஒரு பொம்மையை செய்தோம் என்பதோ போல் எதிரணியில் இருந்து சிறிசேனாவிற்கு ஆதரவு அளித்த சகல கட்சிகளினதும் , சிவில் சமூக அமைப்புக்களினதும் , சந்திரிக்காவினதும் , வெளிநாடுகளின் (குறிப்பாக ஒரு அயல் நாடு உட்பட மூன்று நாடுகளின் ) எதிர்ப்பையும் மீறி , மஹிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் ஒரு தேர்தல் போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார். அதிலும் அவரை பிரதம மந்திரி வேட்பாளராக ஆக்க சுதந்திரக் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த சக்திகள் தமது தந்திரோபாய நகர்வுகள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

எதிரணியினரின் அரசியல் வியூகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பாவிக்கப்பட்ட ஜனாதிபதி சிறிசேனா , தனது அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்களைக் கூட்டி , இறுதியில் மகிந்தவுக்கும் சுதந்திரக் கட்சியில் போட்டியிடவும் அங்கீகாரம் அளித்துள்ளார். எதிரணியினர் -மஹிந்த எதிப்பாளர்கள்- தாங்கள் மகிந்தவை அகற்ற வேலிக்கு வைத்த முள்ளில் தாங்களே சிக்கிக் கொண்டதை இப்பொழுது உணர்கிறார்கள். மைத்ரீயோ ஒருவேளை புரூட்டசைப் போல கழிவிரக்கம் கொண்டுள்ளாரா ?

Web Design by The Design Lanka