இலங்கை தேசத்தின் இசைக்குரலாக ஒலித்த மொஹிதீன் பெய்க். » Sri Lanka Muslim

இலங்கை தேசத்தின் இசைக்குரலாக ஒலித்த மொஹிதீன் பெய்க்.

a113_5

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முபிஸால் அபூபக்கர், முதுநிலை விரிவுரையாளர்,
மெய்யியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.


இலங்கையின் வளர்ச்சிக்கும், அதன் கலாசார, பண்பாட்டுக் கட்டமைப்பிற்கும் இந்நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றனர்.

அந்த வகையில் இலங்கை தேசத்தின் புகழையும் அதன் கலாசாரமான பௌத்த தர்மத்தையும் அதன் பெருமையையும் உலகறியச் செய்த ஒரு சில விஷேடமானவர்களுள் மொஹிதீன் பெய்க் மிக முக்கியமானவராகும். பெயக்கின் குரல் இந்நாட்டின் தேசிய கலை, கலாசார மரபுகளை உலகம் எங்கும் கொண்டு செல்வதில் பெரிதும் பங்காற்றி இருந்தது இசை உலகில் ‘மாஸ்டர்’ என எல்லாக் கலைஞர்களாலும் அழைக்கப்படும் அவர் இந்நாட்டின் இசையையும் அதன் பெருமையையும் சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்தின் பின்னரும் இன்றைய தலைமுறை வரை பாடி அதன் பெருமையை வடிவமைத்தவர். அந்த வகையில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூரவும் அவரது பிறப்பின் நூற்றாண்டு அண்மித்து வரும் நிலையில் அதனை கொண்டாடும் முகமாகவுமே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

பிறப்பும் வருகையும்
மொஹிதீன் பெய்க் பிறப்பால் ஓர் இந்தியர். இவர் தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது மூதாதையினர் ஹைதரபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயதிலேயே பாடசாலையிலும் கிராம நிகழ்வுகளிலும் பாடிய இவர் ‘பெய்க்’ என்ற குடும்பப் பொயரைக் கொண்டவராகும். ‘பெய்க்’ என்பது பாரசீகத்தில் அரசன் என்ற அர்த்தத்தைக் கொண்டதாகும். இவரது தந்தை கரிம் பெய்க் அக்கால பிரித்தானிய பொலிஸில் சேலத்தில் கடமை புரிந்தார். இவரது தாயார் மற்றும் அவர்களது குடும்பப் பின்னணி என்பன மரபு ரீதியான இஸ்லாமியப் பக்திமிக்க குடும்பப் பின்னணியைக் கொண்டதாகும். இக்குடும்பத்தில் 1919ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி மொகிடின் பெய்க் பிறந்தார்.

பிரித்தானிய கால இலங்கைப் பொலிஸில் பெய்க்கின் சிறிய தந்தையான ஹலால்டீன் என்பவர் கிராண்ட்பாஸ் பகுதியிலும் பெய்க்கின் மூத்த சகோதரரான அப்துல் அலீஸ் பெய்க் என்பவர் ஆமர் பொலிஸிலும் கடமை புரிந்தனர். அவ்வேளையில் அஸீஸ் பெய்க்கின் அகால மரணத்தைத் தொடர்ந்ததே முஹிதீன் பெய்க 1932ல் இலங்கை வந்தார்.

தனது சகோதரனின் மரணச் சடங்குகளை குப்பியாவத்தை மையவாடியில் நிறைவேற்றிய பின்னர் தனது சகோதரன் மரணித்த நாட்டிலேயே தானும் மரணிக்க வேண்டும் எனவும் நாட்டிற்காக சேவை புரிய வேண்டும் எனவும் எண்ணி மொஹதீன் பெய்க் அவர்களும் பொலிஸ்ப் படையில் இணைந்ததுடன் இலங்கையில் தனது பணிகளை ஆற்றினார்.

கலைத்துறைப் பிரவேசம்:-
மொஹிதீன் பெய்க் அவர்கள் சேலத்தில் தான் வாழ்நத காலத்திலேயே அக்கால பண்டிதர்களிடம் தனது இசைத்துறைக்கான வழிகாட்டுதல்களை பெற்றிருந்த அனுபவத்துடன் இலங்கையில் ஆரம்ப காலங்களில் உர்து மொழியிலான பாடல்களைப் பாடினார். பின்னர் சிங்களப் பாடல்களைப் பாட இவரை அழைத்த போது கே.கே.ராஜலட்சுமி என்பவருடன் இணைந்து தனது முதலாவது சிங்களப் பாடலைப் பாடினார். இப்பாடல் சிங்கள மக்களிடையே மிகவும் பிரபலமானதாக மாறியது. ‘கருணா, முகுதே’ என ஆரம்பிக்கும் அப்பாடல் இவருக்கு சிறந்த இடத்தையும் இவரது குரல் வளத்திற்கான அங்கீகாரத்தையும் வழங்கியது.

அதன் பின்னர் தனக்கு கிடைத்த கச்சேரி வாய்ப்புக்களுக்காகவும், இசைத்துறையில் முழுநேரத் தொழிலாகவும் கொள்ள விரும்பி தனது பொலிஸ் தொழிலை கைவிட்டார். பின்னர் அக்காலத்தில் மருதானை பொலிஸில் கடமை புரிந்த சார்ஜன்ட் சரீப் அவர்களின் மகளான சஹீனா பெய்க் என்பவரை திருமணம் செய்ததுடன் தனது முழுநேரத் தொழிலாக பாடலையும் இசையையுமே கொண்டிருந்தார்.

இத்திருமணத்தில் இவருக்கு ஐந்து ஆண்குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். அதில் இஷ்ஹாக் பெய்க், இஸ்லாஸ் பெய்க், முனினா பெய்க் ஆகிய மூவரும் இன்னும் பாடகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களப் பாடல் துறையில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட மொஹிதீன் பெய்க் அவர்கள் தன்னிடம் இயல்பாகவே இருந்த ஹிந்தி மற்றும் உர்து மொழியிலான கஸல் பாடல் பாடும் முறையை சிங்கள இசைத்துறையில் உட்புகுத்தினார். உண்மையில் தன்னிடம் காணப்பட்ட இஸ்லாமிய இசை உணர்வு மற்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய இசைத்துறை சார் அனுபவங்களை சிங்கள மரபிற்குள் கொண்டு சேர்த்து சிங்கள இசைத் துறையில் ஓர் புதிய மரபினை உருவாக்கிய பெருமை மொஹிதீன் பெய்கையே சாரும். இதற்காக அவர் அக்கால இந்தியாவின் இசைத்துறை வல்லுனர்களான பேராசிரியர் அகமத் பக்ஸ், ஷேய்க் அமீர், ஷேய்க் பரீட் போன்றவர்களிடம் முறையான கஸல், உர்து மொழி மற்றும் இந்தி மொழியிலான இசைப்பயிற்சியினைக் கற்று இருந்தார்.

இதன் மூலம் தான் கற்ற இசை மரபுகளை சிங்கள இசையுடன் இணைத்துப் பாடுவதில் இலங்கையில் பணிபுரிந்த ஒரு சிலரில் கவுஸ் மாஸ்டர் மிக முக்கியமானவர். முஹம்மத் கவுஸ் மாஸ்டர் 1930 களில் இருந்து சிங்கள இசை மரபில் கலந்திருந்தார். மாஸ்டர் ஹவுஸ் என அழைக்கப்பட்ட இவரும் தென் இந்தியாவில் பிறந்தவர். இவரது வழிகாட்டலும், ஆலோசனைகளும் மொஹிதீன் பெய்க்கின் இலங்கை இசைத்துறை நிலைத்திருப்பிற்கான ஆரம்பகால வழிகாட்டல்களாக அமைந்திருந்ததோடு முஹம்மது கவுஸ் மாஸ்டர் ஆரம்பித்து வைத்த சிங்கள இசைத்துறைக்கான முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பை மாஸ்டர் பெய்க் முன்கொண்டு சென்றார்.

சிங்கள இசையும், முஸ்லிம் மரபும்
பேராசிரியர் அனஸ் அவர்களின் கருத்துப்படி நவீன சிங்கள இசையும் அதன் வளர்ச்சியும் முஸ்லிம் இசைக்கலைஞர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டது என்பதாகும். இந்த வகையில் 19ம் நூற்றாண்டிலிருந்து சிங்கள இசை உலகை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த செவ்வியில் இசை மற்றும் மெல்லிசை இரண்டும் ஹிந்துஸ்தானி மரபிற்குரியதாகும். 14ம் நூற்றாண்டிலிருந்து ஆங்காங்கே தலைகாட்டிய கர்நாடக இசையும் கிராமிய இசையும் என்பதைத் தவிர குறிப்பிடத்தக்க இசைமரபும் சிங்களவர்களுக்கு இருக்கவில்லை. இன்றும் சிங்கள இசை மரபில் கிராண்பாஸ் கவுஸ் மாஸ்டர், சோனகத்தெரு இஸ்மாயில் ராவுத்தார், கொள்ளுப்பிட்டி அப்துல் அஸீஸ் போன்றோர் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பது பேராசிரியர் அனஸ் அவர்களது கருத்து.

கவுஸ் மாஸ்டரின் இசைத்துறைக்கான இனங்காணல் மொஹிதீன் பெய்க்கை மட்டுமல்ல அக்காலப் பாடகியும் நடிகையுமான ருக்மணிதேவி, பண்டிட் அமரதேவ போன்றோரையும் சிங்கள இசைத்துறையில் வளர்த்துவிட்டது எனலாம். இந்த வழிமுறையினைப் பின்பற்றியவராகவே மாஸ்டர் மொஹிதீன் பெய்க் சிங்கள சினிமா மற்றும் இசைத்துறைக்குள் தனது பிரவேசத்தை மேற்கொண்டு பங்களிப்பு வழங்கினார்.

சினிமாத்துறை ஆர்வம்
இலங்கையின் சிங்கள தயாரிப்பாளரின் முதல் படமான ‘அசோகமாலா’ (1947) படம் சிங்கள மொழியில் வெளிவந்த இரண்டாவது படமாகும்.
இது றுனு அல்போர்ட் பெரெரா (பண்டிட் அமரதேவ) வினால் இயக்கப்பட்டு அதற்கு அமரதேவவுடன் மொஹிதீன் பெய்க் இணைந்து நடித்தார். இதற்கான இசை கவுஸ் மாஸ்ட்டரினால் வடிவமைக்கப்பட அதற்கான திரைக்கதை வசனங்களை சாந்தகுமார் எழுதி இருந்தார். இப் படத்திற்கான பாடல்கள் சிலவற்றை மொஹிதீன் பெய்க பாடி இருந்தார்.

ஆலயே மாகே, நயனவனி சுடோ, சுதுவ ஜயசிறி போன்ற பாடல்கள் மொஹிதீன் பெய்க்கினால் பாடப்பட்டன. இப் படம் 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி வெளியிடப்பட்டது. இது பற்றி பண்டித் அமரதேவ பின்வருமாறு கூறுகிறார் :-
இந்தியாவின் கோயம்பத்தூர் நகர சென்றல் ஸ்ரூடியோவில் இடம்பெற்ற அநேகமான படப்பிடிப்பிற்கு மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் மிகவும் சிறப்பை வழங்கி இருந்தன என்றார்.

இன்னும் இப் படம் கொழும்பு றீகல் திரையரங்கில் திரையரங்கில் வெளியிடப்பட்ட போது மொஹிதீன் பெய்க்கின் பாடல்களும், அப் படத்தில் அவரது சிறிய பாத்திரமும் சிங்கள மக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்த வகையில் இலங்கையில் சிங்களவரால் தயாரிக்கப்பட்ட முதல் படத்திற்கான இசையையும், பாடலையும் பாடிப் பெருமை சேர்த்த பணி கவுஸ் மாஸ்ட்டரையும், மொஹிதீன் பெய்க்கையுமே சாரும்.

மொஹிதீன் பெய்க் தனது பாடல்களை சினிமாவோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. கலாசார இசை நிகழ்வுகளிலும், கச்சேரிகளிலும் ஏனைய பாடகர்களோடு இணைந்து பாடினார். அந்த வகையில் தென்னிந்திய பாடகர்களான ராஜலட்சுமி, விக்கி, ஜமுனாராணி, சுசிலா போன்றவர்களுடனும் இணைந்து பாடினார். அதே போல் சிங்கள சினிமாவில் றுக்மணிதேவியுடன் பாடிய நாட்கள் தன் வாழ்வில் மறக்க முடியாதவை என தனது பேட்டிகளில் மொஹிதீன் பெய்க் குறிப்பிட்டு வந்துள்ளார். இதன்படி கோகிலா, அன்ன சுடோ (1953), பெம்மல் மல, பெம்சிகின லொஜி மாயா (1955) போன்ற பல படங்;களிலும், முகுத விஷ்வாசய, ஐராங்கணி, மதபேதய போன்ற படங்களிலும் தெய்வலோகய, சண்டாளி இசை அரங்குகளிலும் றுக்மணி தேவியுடன் பெய்க் இணைந்து பாடி இருந்தார். றுக்மணிதேவி அக் கால சிங்கள திரை உலகில் நடிக்க, பாடல் பாட, நடனமாடத் தெரிந்த மிகச் சிறந்த ஒருவராக மதிக்கப்பட்டதோடு அவரோடு இணைந்து பாடுவதோ, நடிப்பதோ மிக அதிஷ்டமான காரியமாகவே நோக்கப்பட்டது. அந்த வாய்ப்பை மொஹிதீன் பெய்க் தனது திறமையினால் பெற்றுக் கொண்டிருந்தார்.

அதே போல கெல்கெந்த (1953) என்ற ஸ்டான்லி பெரேரா நடித்த படத்தில் தான் பாடிய பாடல்களின் தனக்கு மிகவும் முக்கிய வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதில் றுக்மணிதேவி, டீயுறு ஜெயமன்ன, போன்றோரும் நடித்து இருந்தனர். இவ்வாறான சினிமாக்களையும,; பெய்க்கின் பாடல்களையும் பொது மக்கள் மாதக் கணக்கில் எதிர்பார்த்தவர்களாக ரசித்து காத்திருந்தனர்.

இன்னும் சுஜாதா (1953) திரைப்படத்தில் மொஹிதீன் பெய்க் பாடிய ‘மாயவன் மேலோகே, பிரேம கங்கே மற்றும் நாரிலதா புஷ்;ப’ என்ற பாடல்களில் நாரிலதா புஷ்;ப மிகச் சிறந்த பாராட்டை பெற்று தந்தது. இப் படத்தினை கே.குணரத்தினம் என்பவர் தயாரித்து இருந்தார். இதற்கான இசையை ஆனந்த சமரக்கோன் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் 1955ம் ஆண்டு வெளியான ‘செடசுழங்’ என்ற படத்தில் இந்திய பாடல் அரசி என அழைக்கப்பட்ட லதா மங்கேஸ்கர் இரு பாடல்களை பாடி இருந்தார். அதில் ‘இதிரியடயமு’ என்ற பாடலில் மொஹிதீன் பெய்க்குடன் அவர் இணைந்து பாடினார். இந்த வகையில் இந்திய பிரபல பாடகியான லதா மங்கேஷ;கருடன் பாடிய ஒரேயொரு இலங்கை பாடகர் என்ற பெருமையை இன்று வரை மொஹிதீன் பெய்க் தக்க வைத்துள்ளார். இது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். இப்பாடலில் இலங்கையின் புகழும் அதன் ஒற்றுமையும் தொடர்பான விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இது பற்றி பேராசிரியர் சுனில் ஆரிய ரத்ன குறிப்பிடும் போது : சிங்கள சினிமா சிக்கல்களை எதிர் கொண்ட வேளைகளில் அதற்கு தனது பாடல்களினால் உயிரூட்டியவரே மொஹிதீன் பெய்க் எனக் குறிப்பிடுகின்றார். அது மட்டுமல்ல படத்தில் நடிக்கும் எந்த வகையான சூழலுக்கும் நடிகருக்கும் ஏற்ற வகையில் பாடக் கூடிய – கனதியான குரலும் ஆழமும் சரளமாக உச்சரிக்கும் பண்பும் மொஹிதீன் பெய்க்கின் பாடல்களில் இருந்தன.

இன்னும் அவரது ஜனரகப் பாடல்களான மொகடத்த காசி பாக, கொயா, கொயா, என்ற பாடல் அக்கால சிங்கள இளைஞர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றதாக இருந்தது. அதனை உச்சரிக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அதே போல் ஹிந்தி திரைப்படமான ‘மிஸ்மேரி’ என்ற திரைப்படத்தில் பாடினார். இன்னும் மினிகா மெயலோப என்ற பாடல் மக்களின் இன ஒற்றுமையையும் மனிதர்களிடையேயான பிணைப்பையும் அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.

மொஹிதீன் பெய்க்கின் பக்திப்பாடல்கள்.
மொஹிதீன் பெய்க் அவர்கள் இலங்கை வரலாற்றில் பௌத்த பக்திப் பாடல்களைப் பாடிய சிறந்த பாடகர்களில் முதன்மையானவராகும். இது பற்றி அவர் குறிப்பிடும் போது எனது தாய் மொழிக்கு அப்பால் இந்நாட்டிற்காக பாடக்கூடிய பாடல்கள் பெரும்பாலும் புத்தரது தர்மத்தையும் போதனைகளையும் கூறுபவனவாகவே உள்ளன. அந்த வகையில் அதனோடு தொடர்புடைய அர்தமுடைய வசனங்களை நான் கற்றுக் கொண்டேன். அதனூடாக இந்நாட்டின் மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதுவே என்னால் இந்நாட்டிற்கு வழங்கக் கூடிய அதியுச்ச சேவை என உணர்ந்த வேளையில் தான் ‘சுந்தர சிறிலி மனகாரி’ என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆதன் வரிகள் என்னைக் கவர்ந்தன. அதன் பின்னர் புத்தரின் போதனைகள் அடங்கிய பாடல்களைப் பாடுவதன் மூலம் மனித உள்ளங்களை அன்பின் வழியில் மாற்ற முடியும் என நம்பினேன். அதன் பின்னரே அதிகமான பௌத்த பக்திப் பாடல்களைப் பாடுவதற்கு தாம் விரும்பியதாகக் குறிப்பிடுகின்றார்.

இவர் பாடிய இஸ்லாமிய பக்திப் பாடல்களில் ‘இறையோனின் சுடரான நபி நாதரே இணையேதுமில்லாத மஹ்மூதரே’ என்ற பாடல் இலங்கை மற்றும் இந்தியாவிலும் முஸ்லிம்களிடையே பிரபலாமான இஸ்லாமிய பக்திப் பாடலாகக் கருதப்படுகின்றது.
சாதனைகள்

2500வது புத்த ஜெயந்தியை சிறப்பிக்கும் முகமாக தாய்லாந்து அரசு அங்குலி மாலா என்ற ஹிந்தி திரைப்படத்தை தயாரித்தது அதனை இந்திய தயாரிப்பாளராக விஜய்பாட் இயக்கி இருந்தார். இதற்கான இசையை அனில் விஸ்வாஸ் வழங்கி இருந்தார். இந்தப் படத்தில் வந்த ‘புத்தம், சரணம், கச்சாமி’ என்ற பாடலை ‘மண்ணாடே’ (1919 – 2013) பாடி இருந்தார். இந்தப் படத்திற்கான சிங்கள மொழி பெயர்ப்பு அக்கால திரைப்படக் கூட்டுத்தாபனத் தவைவர் மு.குணரத்தினம் என்பவரால் முன்வைக்கப்பட்ட போது அதில் மண்ணாடே பாடிய ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பாடலை சிங்கள மொழியில் பாடுவதற்கான வாய்ப்பு மொஹிதீன் பெய்க்கிற்கே வழங்கப்பட்டது. அவர் அதனை இந்தியாவிற்கு சென்று சிறப்பாகச் செய்ததோடு மண்ணாடேயின் வாழ்த்தினையும் பெற்றிருந்தார். இப் பாடல் இலங்கை வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்றதாக மாறியது.

2500 வது புத்த ஜெயந்தி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட போது 1956ல் அக்கால பிரதமராக ளு.று.சு.னு பண்டார நாயக்க இருந்தார். அந்த நிகழ்வில் அப்பாடல் பாடப்பட்டதனால் மிக மகிழ்ச்சி அடைந்த அந்த சபையும், பிரதமரும் இலங்கையின் முதற்தர அந்தஸ்துடைய குடிமகன் என்ற கௌரவத்தை வழங்கி மொஹிதீன் பெய்க் அவர்களை இலங்கைப் பிரஜையாக்குவதில் இலங்கை தேசம் பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டார். அதே போல் பெய்க் பாடிய ‘சுவல மட சீதல சுலங்க’ என்ற பாடலும் அன்றில் இருந்து இன்று வரை இலங்கையில் மட்டுமல்ல, நாடு கடந்த சிங்கள பௌத்தர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. எங்கு பௌத்தர்களால் வெசாக், பொசன், தன்சல, தானய போன்ற எது இடம்பெற்றாலும் இப்பாடல்கள் ஊடாக மொஹிதீன் பெய்க்கின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இது பற்றி பேராசிரியர் பொல்லன்வில் விமல ரத்தின தேரர் குறிப்பிடும் போது :-

சிங்களப் பாடகர்கள் பாடுவதை விடச் சிறப்பாகப் பாடி இந் நாட்டிற்கும் புத்த சமயத்திற்கும் அதனைப் பின்பற்றுவோருக்கும் மொஹிதீன் பெய்க் பாரிய பணி புரிதவர் இன்னும் அவர் ஒரு இஸ்லாமிய பக்தர் ஆனாலும் பௌத்த சமயத்திற்கும் அதன் பக்திக்கும் அவரது பாடல்கள் மிகவும் போசணை தந்துள்ளது. இந்த வகையில் ஏனைய சிங்களப் பாடகர்களை விட அவரை நாம் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து நோக்குகின்றோம். இன்னும் அவர் இந் நாட்டின் பொதுக் கலாசாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் மிகவும் கண்ணியம் வழங்கிய ஒருவராகும் என்பது மிகவும் தெளிவானது.

அதே போல் 1976ம் ஆண்டு உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட அணி சேரா நாடுகளின் மாநாட்டிலும் வரவேற்புக் கீதத்தைப் பாடும் பாக்கியம் மொஹிதீன் பெய்க்கிற்கே வழங்கப்பட்டது. அதில் அவர் உர்து மொழியிலான பாடலைப் பாடினார். மாநாட்டில் கலந்து கொண்ட எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் லிபிய பிரதமர் கேர்னல் கடாபி போன்றோரின் உச்ச மட்ட பாராட்டு மொஹிதீன் பெய்க்கிற்கு கிடைத்தது. அதே போல் இந்திய பாடகரான முகமட் ரஃபி இலங்கை வந்தபோது காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் பெய்க் இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம் என வாழ்த்தி இருந்தார். பெய்க் இந்தியாவில் இருந்திருந்தால் தன்னால் இந்தியாவில் உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது எனவும் மக்கள் பெய்க்கையே விரும்பி இருப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1987ம் ஆண்டு பாகிஸ்த்தான் பிரதமர் சியாவுல் ஹக் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட போது அந்நிகழ்வில் பெய்க் பாடினார். அதில் முஹம்மது நபி அவர்களை புகழ்ந்து உர்து மொழியில் பாடினார். அந் நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பிரதமர மொகிதீன் பெய்க்கை தனது குடும்பத்துடன் வந்து பாகிஸ்தானில் வசிக்கும்படி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை பெய்க் விரும்பவில்லை. அந்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ பெய்க் விரும்பி இருந்தாலும் தன்னால் அனுப்பி வைத்திருக்க முடியாது, ஏனெனில் அவரை இந் நாட்டில் விரும்பும் பல இலட்சம் இலங்கை மக்களுக்கு நான் என்ன பதில் கூறுவது? என கேள்வி எழுப்பி இருந்தார். எனது உடலில் ஓடுவது நாட்டின் இரத்தம். நான் அதைவிட்டு விட்டுவர முடியாது என பெய்க் உணர்வு பூர்வமாகத் தெரிவித்தார்.

மொஹிதீன் பெய்க் தனது பாடல்களை மிகவும் நேசித்தார். மட்டுமல்ல அவற்றின் ஊடாகஇந்நாட்டின் தேசிய மரபுகளையும் சிறப்புக்களையும் உலகறியச் செய்தார். அவர் பாடலைத் தொழிலாக மட்டும் செய்யவில்லை மாறாக ஒரு சேவையாகக் கருதினார். அதற்காக பல சம்பவங்களைக் குறிப்பிட முடியும். அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது

‘இன்னும் 500 வருடங்கள் சென்றாலும் எனது பெயரை இந்த இலங்கையில் இருந்து அகற்றமுடியாது. அவ்வாறு அகற்றுவதாயின்; இந்நாட்டில் இருந்து புத்த மதமும் அதன் கலாசாரமும் இல்லாமலாக்கப்பட்டால் மட்டுமே எனது பெயரையும் அகற்றமுடியும். அந்தளவுதான் இந்த நாட்டின் பௌத்த இசைக் கலாசாரத்திற்கு பங்களித்து இருப்பதாக அவர் நம்பினார்.’

நாடு கடந்த இலங்கையர்கள் வாழும் பல நாடுகளில் மொஹிதீன் பெய்க் சென்று பாடினார். சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பாடல்களின் மூலம் புகழ் சேர்த்தவர்களில் அவர் முக்கியமானவர்.

இதுவரைக்கும் சினிமாக்களில் 400 களுக்கும் மேற்பட்ட பாடங்களையும் மொத்தமாக தன் வாழ்நாட்களில் 8000 திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மொஹிதீன் பெய்க்கு இசைத்துறையில் 1967 ஆம் ஆண்டு ‘அல்லாப்பு கெதர’ என்ற பாடத்தில் ‘எயர் சலல இகிலி’ என்ற பாடலுக்கான சிறந்த சரசவி விருதையும், 1977 ஆம் ஆண்டு அதிக பாடல்களைப் பாடிய பாடகருக்கான விருதையும், 1983ம் ஆண்டு மற்றும் 1987ம் ஆண்டு கலாகுறி விருதையும் பெற்று இருந்தார்.

தனிப்பட்ட வாழ்வு
மொஹிதீன் பெய்க் சிறந்த இஸ்லாமிய சமயப் பற்றுள்ளவராக காணப்பட்டார். அவர் தனது பாடல்களில் பௌத்தத்தின் சிறப்புக்களைப் பாடிய அதேவேளை தனது ஐந்து வேளைத் தொழுகைக்காக மருதானை ஸாஹிரா பள்ளி வாசலுக்கு செல்பவராக இருந்தார். அதிகாலை 4 மணிக்கே எழுந்து அல்குர் ஆனை ஓதுவதை அவர் வழக்கமாகக் கொண்டு இருந்தார். புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றி இருந்ததோடு அவர் மது, போதை என்பவற்றில் இருந்து பூரணமாகத் தவிர்த்து இருந்ததுடன் சிறப்பான மற்றும் உத்யோக பூர்வ நிகழ்வுகளில் தன்னை ஓர் முஸ்லீமாக அடையாளப்படுத்துவதற்காக அவர் தொப்பி அணியும் சிறந்த பழக்கத்தையும் கொண்டிருந்தார்.

மட்டுமல்ல மொஹிதீன் பெய்க் நாடறிந்த பாடகராக இருந்தபோதிலும் அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த கொழும்பு மருதாணை வீடு ஒன்றரை பேர்ச்சர்ஸ் அளவுள்ளதாகவே இருந்தது. அது சிறிது நாட்களில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அவ்வாறான சூழலில் இருந்து கொண்டே அவர் இந்த நாட்டிற்கான தனது சேவையை வழங்கி இருந்தார்.

அவரது இறுதிக் காலங்களில் வறுமையினால் பாதிக்கப்பட்ட அவர் இந்நாட்டிற்கு தான் செய்த சேவைக்காக எதனையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இது ஒரு தேசத்திற்கான எனது பணி. அதனை இந்நாட்டின் இறுதிச் சிங்கள மனிதன் இருக்கும்வரை மறக்க மாட்டார்கள் என நம்பினார்.

தான் ஒரு முஸ்லிமாக இருந்து நாட்டிற்கும், பௌத்த சமயத்திற்கும் பாரிய பணியை தனது குரலின் மூலம் 50 ற்கு மேற்பட்ட வருடங்கள் இசைத்துறையில் இருந்து கொண்டு பங்காற்றிய மொஹிதீன் பெய்க் அவர்கள் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி தனது 72வது வயதில் கண்சத்திர சிகிச்சையின் போது இறந்தார்.
இந்நாட்டின் தேசிய புகழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மொஹிதீன் பெய்க் அவர்களை சிங்கள மக்களும், பௌத்த சமயத்தவர்களும் இன்றும் கண்ணியத்துடன் மதிக்கின்றனர். ஒரு முஸ்லிம் இந்த நாட்டின் பொது கலாசாரத்திற்கு ஆற்ற வேண்டிய பணியின் முக்கிய உதாரணமாக மொஹிதீன் பெய்க் திகழ்ந்தார். சிங்கள் சினிமாவிற்கு ‘பண்டிட் அமர தேவ’ ஆற்றிய பணிக்கு நிகரான பணியை மொஹிதீன் பெய்க் பாடல்கள் ஊடாக வழங்கி இருந்தார். சிங்கள கலை அரங்கில் தன் திறமையினையும் தூர நோக்கினையும் கொண்டு பணி புரிந்த மாஸ்டர் என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட மொஹிதீன் பெய்க் ஆற்றிய பணி இலங்கை முஸ்லிம்களுக்கான பெருமையாகவே கருதப்படுகிறது.

சிறுபான்மை இனத்தவர் ஒருவர் அரசியல் தலைவராக புத்திஜீவியாக இருந்து இந் நாட்டில் அடையும் புகழை விட அவரது குரல் இனமத பேதம் இன்றி எல்லா வீடுகளிலும் வைபவங்களிலும் ஒலித்தது. சிங்கள கிராமங்களிலும் நிகழ்வுகளிலும் இன்றும் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது இன்னும் பௌத்தம் வாழும் காலம் எல்லாம் மொஹிதீன் பெய்கின் நினைவுகள் இந் நாட்டில் நிலைத்திருக்கும்.

Web Design by The Design Lanka