ஜனாதிபதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திப்பு… » Sri Lanka Muslim

ஜனாதிபதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திப்பு…

sammanthar

Contributors
author image

ஊடகப்பிரிவு

ஜனாதிபதி அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களையும் அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி அவர்களுடன் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையில் தமிழ் மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து தாம் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்களினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியதுடன், அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களிலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இரு தரப்பினரும் ஒத்துழைப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை சுமுகமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிகளினதும் உடன்பாட்டுடன் எதிர்காலத்தில் ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைப்பை வழங்கும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-11-07

Web Design by The Design Lanka