நீதிக்கு புறம்பாக நடக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிராக போராடத் தயார்”-JVP » Sri Lanka Muslim

நீதிக்கு புறம்பாக நடக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிராக போராடத் தயார்”-JVP

anurakumara

Contributors
author image

Editorial Team

இந்த அரசியல் சூழ்ச்சியை தோற்கடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து யோசனைகளுக்கும் ஆதரவாக வாக்களிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் தலைவர், மைத்திரி – மஹிந்த தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றில் மோசடியாக தாக்கல்செய்யத் திட்டமிட்டுள்ள வரவு செலவு அறிக்கையை தோற்கடிப்பதற்காக வாக்களிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி எடுக்கவுள்ள தீர்மானத்தை அறிவித்திருக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் 26-ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகள் பாரிய அரசியல் சூழ்ச்சியாகும். அந்த அரசியல் சூழ்ச்சியை வெற்றிபெறச் செய்யவே நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.வெள்ளிக்கிழமை இரவு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியும் நாடாளுமன்ற அமர்வு முடிந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இந்த சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டும்.

5ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச கூறினார். பின்னர் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமென ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டது. 7ஆம் திகதி சபையில் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர் மாநாடு நடத்தப்பட்டதில் 7ஆம் திகதி சபை கூடுமென ஜனாதிபதி தனக்கு கூறியதாக சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.இந்த நிலையில் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமென நேற்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

சபையில் பெரும்பான்மையை திரட்டுவதற்காக கறுப்புப் பணமாற்றம், கொடுக்கல் வாங்கலை செய்துகொள்வதற்காகவே இந்த கால தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

கறுப்பு பணத்தின் ஊடாக அரசாங்கத்தை கைப்பற்றலாம் என்ற சமிக்ஞையை மைத்திரிபாலவும் மஹிந்தவும் நாட்டிற்கு தெரிவித்துள்ளனர்.எனவே இந்த அரசியல் சூழ்ச்சியை தோற்கடிக்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் பயன்படுத்த ஆயத்தமாக இருக்கின்றோம்.

நாடாளுமன்றம் கூடும்போது அரியாசன உரையை ஜனாதிபதி நடத்தினால் அதனையும் தோற்கடிக்க ஆயத்தமாகுவோம். அதற்கான வாக்கெடுப்பை நடத்தக் கோருவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.அதேபோல இந்த நியமனங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று கூறும் யோசனை சபையில் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம்.

இதனை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். நாடாளுமன்றில், வீதியில் நாடெங்கிலும் நீதியைப் பெறுவதற்கான போராட்டங்களை நடத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka