மாகாணசபை தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் » Sri Lanka Muslim

மாகாணசபை தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல்

23a13c681ee45d19acb9b179c1519acb_XL

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாகவே புதிய பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இன்று இடம்பெற்ற நாடாளவிய ரீதியில் ஐந்து இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்திய நாம் பயிர் செய்து நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் பலாமரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இது முன்னெடுக்கப்படுகிறது.

இங்கு தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்,

மாகாணசபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். பாராளுமன்றத்தை கலைக்கப்போவதாக சிலர் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை .மக்களை திசைதிருப்புவதற்காக சிலர் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது . ஜனாதிபதி அரசியல் ரீதியாக மேற்கொண்டுள்ள முடிவை நாட்டு மக்களில் 75 சதவீதமானோர் அங்கீகரித்துள்ளனர்.

அரசியல் யாப்பிற்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். எமது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை உண்டு. அதில் எந்தவித சந்தேசகமும் இல்லை நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசாங்கமே தற்பொழுது பதவிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

உழுந்து மிளகாய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை நாம் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம் .இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஏற்கனவே நாம் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். மாம்பழ வலயம் யாழ்ப்பாணத்திலும் , உழுந்து வலயம் வவுனியாவிலும் நாம் மேற்கொள்ள முன்னெடுத்துள்ளோம். நாட்டில் பிரதேசங்களுக்கு ஏற்றவாறான உற்பத்தி வலயங்களை நாம் முன்னெடுத்துவருகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

  அரச தகவல் திணைக்கள இணையதளம்

Web Design by The Design Lanka