கடந்த இரண்டு மாத நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி பாராட்டு » Sri Lanka Muslim

கடந்த இரண்டு மாத நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி பாராட்டு

maith

Contributors
author image

Presidential Media Division

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடியது


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடியது.

நீண்ட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினால் பின்னடைவுக்குள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்தி அம்மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாத காலமாக இச்செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகவும் மும்முரமாக செயற்பட்டு வருவதுடன், அந்த நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதையிட்டு ஜனாதிபதி அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பலமாக எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்த விசேட ஜனாதிபதி செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தி வருவதுடன், மேலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாகவும் திட்டமிட்டு வருகின்றது. முன்னுரிமை அடிப்படையிலான தேவைகள் குறித்து கண்டறிந்து அத்துறைகள் மற்றும் தனிப்பட்ட குழுக்களை இலக்காகக்கொண்டு புதிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் அதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உடனடி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மாகாணங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து இங்கு மாகாண ஆளுநர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

இம்மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தல், கைத்தொழில் துறையினை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த அரசாங்க காணிகளில் 79.01 சதவீதமும் தனியாருக்கு சொந்தமான காணிகளில் 90.02 சதவீதமான காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகளுக்கு மேலதிகமாக நடேஷ்வரா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சமய ஸ்தலங்கள் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பல வீதிகளும் இதில் உள்ளடங்குகின்றது.

மடு புண்ணிய பூமியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாண நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் ஆனையிறவு உப்பளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் விசேட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்த அபிவிருத்தி திட்டங்களின் மூலம் இந்த இரண்டு மாகாணங்களிலும் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை துரிதமாக முன்னேற்ற முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.11.08

Web Design by The Design Lanka