இரத்தினக்கல் ஆபரண தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய நிகழ்ச்சித் திட்டம்.... » Sri Lanka Muslim

இரத்தினக்கல் ஆபரண தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய நிகழ்ச்சித் திட்டம்….

mai6

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவிப்பு


கடந்த மூன்றரை வருட காலமாக அவ்வப்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தபோதும் இரத்தினக்கல் ஆபரண தொழிற்துறையில் இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரத்தினக்கல் ஆபரண தொழிற்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

இத்துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மிகவும் நெகிழ்வான கொள்கையொன்றை பின்பற்றுவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சட்டவிரோத சுரங்க அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றிவளைப்புகள் போலி இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை அடுத்த வாரத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

காணி சீர்திருத்த ஆணக்குழுவின் காணிகளில் சுரங்க அகழ்வு நடவடிக்கைகளுக்காக அனுமதிப் பத்திரங்களை வழங்குதல், வயல் காணிகளை சுரங்க அகழ்வுக்காக பயன்படுத்துவது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபம், இயந்திரம் மூலமான சுரங்க அகழ்வுக்கு அனுமதியளித்தல், சுரங்க அகழ்வின் பின்னர் சுரங்கங்களை மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, இரத்தினக்கல் சுரங்க அகழ்வு அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக செலவாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நிதி, பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல ஜயரட்ன, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.11.09

Web Design by The Design Lanka