2015 இல் இருந்து இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தலையீடுகளை மேற்குலகம் நேரடியாகச் செய்யத் தொடங்கியது » Sri Lanka Muslim

2015 இல் இருந்து இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தலையீடுகளை மேற்குலகம் நேரடியாகச் செய்யத் தொடங்கியது

baseer

Contributors
author image

S.Ashraff Khan

புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக 2015 இல் இருந்து இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தலையீடுகளை மேற்குலகம் நேரடியாகச் செய்யத் தொடங்கியது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்
தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் கள நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட நெடுங்காலமாக, இலங்கையில் மக்களால் சுதந்திரமாகத் தெரிவு செய்யப்படும் ஆட்சியாளர்களை சர்வதேச அதிகார மையங்கள் தமக்கு வசதியாகப் பயன்படுத்தி வந்தன.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நேட்டோவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை வார்ஷோவும் கையாண்டு வந்ததை வரலாறு குறித்து வைத்துள்ளது.

புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக 2015 இல் இருந்து இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தலையீடுகளை மேற்குலகம் நேரடியாகச் செய்யத் தொடங்கியது.

2018 ஒக்டோபர் 26 இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக ஆசிய மற்றும் ஐரோப்பிய அதிகார மையம் செய்துள்ளது.இவ்வதிகார மையம் ரஷ்யா,சீனா, துருக்கி, ஈரான்,பாக்கிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.

இலங்கையின் அரசமைப்புக்கு எதிராக ஒக்டோபர் 26 இல் நடந்த ஜனநாயக எதிர்ப் புரட்சி ரஷ்ய அனுவத்தை அடியொற்றிதாகும்.

இப்புரட்சிக்கான ஒத்திகை 2018 இன் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. இப்புரட்சிக்கான இலங்கை நாயகனாக கலாநிதி தயான் ஜயதிலக செயற்பட்டார். இவர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடியொற்றி வேகமாகச் செயற்படலானார். ஆங்கிலத்தில் பல ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதினார்.மஹிந்த ராஜபக்‌ஷவின் தீவிர ஆதரவாளரான இவரது பிந்திய கட்டுரைகள் விஷேடமாக கோட்டபாயவை ஜனாதிபதி வேட்பாளராவதற்கு எதிராக எழுதப்பட்டிருந்தன.

தயான், ரஷ்யாவில் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்து வந்தது. ஆயினும்; ஜனாதிபதி மைத்திரி பெரும் போராட்டத்தின் மத்தியில் தயானை ரஷ்யத் தூதுவராக நியமித்தார். தயான், இந்நியமனத்துக்கான ஆசீர்வாதத்தை மஹிந்தவிடமும் பெற்றுக்கொண்டார்.

தயான் நியமனம் பெற்ற அன்றே இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான ஆசிய- ஐரோப்பிய வியூகம் வெற்றி பெற்றுவிட்டது.

ஆரம்பத்தில் எவ்விதத் தகவல் ஒழுகுதலும் இல்லாததால் மேற்குலகு இருளில் மூழ்கியிருந்தது.இந்த வெற்றியின் பின்தான் 2015 ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற மேற்குலக சக்திகள் இன்று செய்வதறியாது திணறியபடி வேகமாக இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்தியா, அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடம் எரிபொருளை கொள்முதல் செய்வதற்கும்,ரஷ்யாவுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதற்கும் எடுத்திருக்கும் திடமான முடிவும் மஹிந்தவை மோடி சந்தித்த நிகழ்வும் இந்தியா இலங்கை விடயத்தில் நடு நிலை பேணுவதினூடாக எதிர் காலத்தில் தனது நீண்ட மூக்கை தனது நலன் கருதி நுழைப்பதற்கு தயாராகிவிட்டது என்பதைத் தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் KGB மற்றும் சீனாவின் MSS புலனாய்வு நிறுவனங்கள் இலங்கை விடயத்தில் இந்தியாவின் RAW வின் இரகசியங்களைக் கசிய விடாது அமைதிகாக்கும் உத்தியினால்; அமெரிக்காவின் CIA வை மிஞ்சிவிட்டன. இதனாலேயே அண்மைய ஆட்சி மாற்றம் சாத்தியமாயிற்று.

இவ்விடத்தில், அமெரிக்காவில் ட்ரம்பை அதிபராகக் கொண்டு வருவதில் ரஷ்யாவின் கே.ஜீ. பி அமெரிக்காவிலேயே வெற்றி பெற்றிருந்ததை நினைவுகூறுவதன் மூலம் ரஷ்யாவின் இவ்வமைப்புக்கு இலங்கை எம்மாத்திரம் என்பதை உணரமுடியும்.

இலங்கையில் தமிழ்த் தேசியக் கட்சிகளில் உள்ள வேளாள உயர்சாதி வலதுசாரிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பாக இயங்குவதையும், இடதுசாரிகள் மறுபக்கமாக இயங்குவதையும் காணக்கிடைக்கிறது.

அண்மையில் முன்நாள் பிரதமர் ரணிலை ஆறுதல் கூறி அவசரப்படுத்தும் நோக்கிலும் முக்கிய செய்தி ஒன்றை நேரில் பகிர்வதற்காகவும் இஸ்ரேல் தூதுவர் அவரைச் சந்தித்திருந்தார்.

புதிய சூழமைவை எதிர்கொள்வதற்காகத் தமிழ் தேசிய சக்திகள் இரண்டாகப் பிரிந்து நின்று தமது மக்களினதும் தமதும் நலன்களைப் பேணும் உத்தியைக் கையாளுகின்றன. ஆனால் இதற்கு மாறாக முக்கிய இரண்டு முஸ்லிம் கட்சிகளும் பழைய குரோதங்களை ஒத்திப் போட்டுவிட்டு, சமூக நலனைப் புறந்தள்ளி; தமது தனி நலனை மட்டும் முன்நிறுத்தி தற்காலிகமாக கை கோர்த்து உலவுவதை காண்கிறோம்.

மேற்குலக நுண்ணாய்வினர் தமிழ்த் தேசியத் தலைவர்களை இலங்கையில்
வைத்தே இரகசியம் கசியாமல் கையாளலாம். ஆனால்; முஸ்லிம் அரசியல் தலைவர்களை அப்படிக் கையாள முடியாது என்று கருதுகின்றனர். இதனால்தான் முஸ்லிம் தலைவர்களையும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சஊதிக்கு அழைத்துள்ளனர். அங்கு நமது கட்சிகள் அமெரிக்கா சார்பாக சஊதியால் கையாளப்படுவார்கள்.

இலங்கையின் இன்றைய அரசியலரங்கம் மக்களுக்கான புதிய பயிலரங்கமாகும்.

எனவே தான் இனி அரசியல்வாதிகளின் தலைகளையல்ல அவர்களின் மூளைகளை எண்ணிக் கணக்கெடுப்போம்!

Web Design by The Design Lanka