மூத்த பத்திரிகையாளர் மக்கள் காதர் இன்று இயற்கை எய்தினார் » Sri Lanka Muslim

மூத்த பத்திரிகையாளர் மக்கள் காதர் இன்று இயற்கை எய்தினார்

WhatsApp Image 2018-06-10 at 9.26.45 AM

Contributors
author image

A.S.M. Javid

ஏ.எஸ்.எம்.ஜாவித், பாறுக் ஷிஹான்-


மக்கள் காதர் என்று அழைக்கப்படும் மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக கொண்ட மதார் முகைதீன் அப்துல் காதர் அவரது எழுபத்தாறாவது (76) வயதில் இன்று (10) அதிகாலை அவரது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளார்.

எழுத்தியல் நாயகன், மக்கள் காதர் இன மத சமூக வேறுபாடுகளைக் களைந்து ஊடகத்துறையிலும், பொதுத் துறையிலும் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றினார். குறிப்பாக யுத்தம் கடுமையாக இடம்பெற்ற இறுதி தருனத்தின் போது காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் அவர்களுக்கு உதவுவதில் இன, மத வேறுபாடின்றி அதீத கரிசனையுடன் பணியாற்றினார்.

மன்னாரைத் தளமாக கொண்டு இயங்கி வந்த தகவல் தொடர்பாடலுக்கான ஊடக வலைப்பின்னல் நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றினார். அதேவேளை மன்னாரில் இருந்து மாதம் இருமுறை வெளி வந்த காலச்சுவடுகள் பத்திரிகையின் இணை ஆசிரியராக பணியாற்றி பல்வேறு விடயங்களை வாசகர்கள் மத்தியில் எடுத்துச் சென்ற ஒரு சிறந்த மூத்த ஊடகவியலாளராக இவர் காணப்பட்டார்.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு. இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் மிகவும் நற்பாக இருந்து ஆயர் மற்றும் கத்தோலிக்க குருக்களின் மனித உரிமை பணிகளுக்கு பக்க பலமாக இருந்ததோடு ஆயர் மேதகு. இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பணிகளை பகிரங்க அரங்குகளில் துணிச்சலுடன் சிலாகித்து பேசிய ஒரு ஊடகவியலாளர் எனலாம்.

சுமார் ஐம்பது ஆண்டுகால ஊடகத்துறைப் பணிக்காக முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலக்கிய இரட்டையர்கள் என மன்னாரில் பரவலாக பேசப்படும் மக்கள் காதர் மற்றும் ஆசிரியர் கலைவாதி கலீல் இருவரில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் மக்கள் காதரின் இழப்பு ஊடகத்துறையிலும் ஒரு நிரப்ப முடியாத வெற்றிடமாகவே அமைந்துள்ளது.

தமிழ் கலை இலக்கிய வாதி ஆரிசியர் மர்ஹூம் வித்துவான் றஹ்மான் இவரின் மூத்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த இவரே இன்று காலமானாhர்.

Web Design by The Design Lanka