உள்ளக அதிகாரப்போட்டி ஒட்டு மொத்த பெண் மாணவிகளின் கற்பின் மீதான அவதூறுத் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது! » Sri Lanka Muslim

உள்ளக அதிகாரப்போட்டி ஒட்டு மொத்த பெண் மாணவிகளின் கற்பின் மீதான அவதூறுத் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது!

oluvi9

Contributors
author image

Mujeeb Ibrahim

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளக அதிகாரப்போட்டி ஒட்டு மொத்த பெண்மாணவிகளின் கற்பின் மீதான அவதூறுத்தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக VC இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் தருணம் பார்த்து உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ வெளியிட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பான கருத்துகளில் பெண்மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் சித்தியடைகிறார்கள் என்று கூறியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதற்கு சான்றாக பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விரிவுரையாளர் ஒருவரின் பெயரையும் பாராளுமன்றத்தில் அவர் கூறினார்!
பாலியல் லஞ்சம் கோருதல் என்பது இதுவரை இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாத்திரம் இடம்பெற்றதைப்போலதான் விஜயதாசவின் சந்தர்ப்பவாத தாக்குதல் அமைந்திருக்கிறது.

பாலியல் லஞ்சம் என்பது பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதில் தொடங்கி பாராளுமன்ற விவகாரங்கள் வரையிலும் பலநூறு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியிருக்கின்றன!

லஞ்சம் என்பது எந்த வடிவில் இருந்தாலும் பெறுவது எவ்வாறு குற்றமோ அதே போல கொடுப்பதும் குற்றமாகும்!

பல்கலைக்கழகங்களை பொறுத்த வரையில் பாலியல் லஞ்சத்தை எதிர்பார்க்கும் சபலிஸ்டுகள் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறார்கள்!

ஆனாலும் இவ்வாறான கயவர்களின் வலையில் வீழ்ந்தவர்கள் மிக்க்குறைவே!

இந்தியாவில் அண்மையில் அகப்பட்ட பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் சம்பவம் இதற்கு சான்றாகும்!
கற்பொழுக்கமுள்ள எந்த பெண்பிள்ளையும் இந்த வலையில் அகப்படாது.

மாறாக இந்த படுபாதக எண்ணம் கொண்ட கயவர்களை தோலுரிக்கும் வேலைகளில் இவ்வாறான ஒழுக்கமுள்ள மாணவிகள் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் அதிகாரப்போட்டியில் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக இயங்கும் ஒரு குழு வழங்கிய சில தகவல்களை அடிப்படையாக வைத்து VC இஸ்மாயிலின் ஊழல் குற்றச்சாட்டுகளை பேசுகிற சந்தடிச்சாட்டில் ஒட்டு மொத்த பெண் மாணவ சமூகத்தையும் சங்கடத்திற்கும் மனவேதனைக்கும் உள்ளாக்க வல்ல நச்சுக்கருத்தொன்றையும் பாராளுமன்றத்தில் விஜயதாஸ துப்பியுள்ளார்!

இதற்குப்பின்னால் இருக்கிற அரசியலும், விஜயதாசவின் கபடப்புத்தியும் தெளிவாக விளங்குகின்ற அதேவேளை இதற்கெதிரான கண்டனங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு கண்டிக்கப்பட வேண்டும்.

அதி முக்கியமாக தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் ஒரு நாள் விரிவுரைகளை புறக்கணித்து வீதிக்கு இறங்கி விஜயதாசவின் நச்சுக்கருத்துகளுக்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அங்கிருந்துதான் ஒரு அர்த்தமுள்ள போராட்டத்தின் ஆரம்பம் தேவைப்படுகிறது.

Web Design by The Design Lanka