சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா » Sri Lanka Muslim

சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா

doller

Contributors
author image

BBC

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காகியுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை அதிகரித்திருப்பதாக சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ஆனால், உண்மையிலேயே ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது நைஜீரியா அரசு.

நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா கொள்ளையடித்த பணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

300 மில்லியன் டாலரை சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், இதனை மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க உள்ளது.

1990களில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும்.

அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே இது வழிவகுக்கும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

நைஜீரியாவின் 36 மாநிலங்களில், 19 மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இப்பணம் வழங்கப்பட உள்ளது.

அபாஷா 1993 முதல் 1998 வரை ஆட்சியில் இருந்தபோது, கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு பகுதி, முதலில் லக்சம்பர்க் நாட்டில் சேமிக்கப்பட்டது.

மாரடைப்பினால் ஜூன் 8-ம் தேதி 1998-ல் இறக்கும் முன்பு வரை நைஜீரியாவை இரும்புக்கரம் கொண்டு அவர் ஆண்டு வந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க உள்ளதாக 2015 தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் முஹமது புஹாரி அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

கடந்த 10 வருடங்களில், 1 பில்லியன் டாலரை நைஜீரியாவிடம் சுவிட்சர்லாந்து திரும்ப அளித்துள்ளதாக நம்பப்படுகிறது

நைஜீரியாவுக்கு பணத்தை திரும்ப அனுப்புவதில், கடுமையான நிபந்தனைகள் இருக்கும் என நைஜீரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்து அதிகாரிகளில் ஒருவரான ராபர்டோ பால்சரேட்டி கடந்த வருடம் பிபிசியிடம் தெரிவித்தார்.

நைஜீரியாவில் பணம் வழங்குதல், எழை குடும்பங்களுக்கு உதவும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

உலக வங்கியின் மேற்பார்வையில், ஜூலை மாதம் முதல் சிறு சிறு தொகையாக தவணை முறையில் பணம் வழங்கப்பட உள்ளது. இதில் உலக வங்கி தொடர் தணிக்கையையும் நடத்தும்.

”முதல் தவணைக்கு சரியாகக் கணக்கு காட்டவில்லை என்றால், அடுத்தடுத்த தவணைகள் நிறுத்தப்படும். பணம் மீண்டும் திருடப்படுவதை இது தடுக்கும்” என பால்சரேட்டி கூறுகிறார்.

Web Design by The Design Lanka