யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களுக்கு நட்டஈடு » Sri Lanka Muslim

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களுக்கு நட்டஈடு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற நட்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் உள்ள மூன்று பள்ளிவாசல்களுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நட்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கமைய புனர்வாழ்வு அதிகாரசபையால் காத்தான்குடி ஹிழுறிய்யா பள்ளிவாசல், காத்தான்குடி குலபா – இர் ராஷிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நட்டஈடும், காத்தான்குடி பெரிய மௌலானா பள்ளிவாசலுக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பள்ளிவாசல்களுக்கும் நட்டஈட்டு தொகைக்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில்  சனிக்கிழமை (01) நடைபெற்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்து அவற்றை அபிவிருத்தி செய்ய பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தார்.

இதற்கமைய காத்தான்குடி – 2 ஹிழுரிய்யா பள்ளிவாசலுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததுடன் நேற்று இரண்டாம் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் நட்டஈட்டு தொகைக்கான காசோலை பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் காலிதீனிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், காத்தான்குடி – 3 குலபா – இர் ராஷிதீன் பள்ளிவாசலுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாய் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் நட்டஈட்டு தொகைக்கான காசோலை பள்ளிவாசல் செயலாளர் மாஹிர் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஊடாக இவ்விரு பள்ளிவாசல்களுக்குமான நட்டஈட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, காத்தான்குடி பெரிய மௌலானா பள்ளிவாசலுக்கு நட்டஈடாக மூன்று இலட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈட்டு தொகைக்கான காசோலை பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.பி.அக்பரிடம் கையளிக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஷா மேற்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka