கை உயர்த்த உள்ள உறுப்பினர்களுக்காக » Sri Lanka Muslim

கை உயர்த்த உள்ள உறுப்பினர்களுக்காக

36501635_10214458452109641_1555116394121527296_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 Alif Sabri


அதிகாரப் பரவலாக்கல் அலகுபற்றிக் குறிப்பிடும் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் தலைமையிலான குழு முன்வைத்த பிரேரனைகள் மிகத் தெளிவாக பின்வருமாறு அமைகின்றன.

அ) அதிகாரப்பரவலாக்கல் அலகு என்பது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிலைமைகளை கருத்திற்கொண்டு அங்கு வாழும் வேறுபட்ட இனமக்களின் உரிமைகளைப் பேணுவதாக அமைதல் வேண்டும்.

ஆ) தமிழ் மக்கள் வதியும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு பிரத்தியேகமான அலகு, அவர்கள் குடியிருக்கும் மாவட்டங்களான யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படல் வேண்டும்.

இ) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கி நிலத் தொடர்பற்ற அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம் அலகு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

இணைப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ள விடயங்களின் தெளிவான விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.
1. தற்போதைய அம்பாறை மாவட்டத்தில்
முன்னைய நான்கு பிரிவு வருமான அதிகாரிகள் பகுதியாகிய பாணமைப்பாற்று, அக்கரைப்பற்று, கரைவாகுபற்று, நிந்தவூர்பற்று ஆகிய பிரிவுகளையும் வேகம்பற்று தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் (கல்ஓயா ஆற்றுக்கு தெற்கு ) உள்ளடங்கியதாக ஒரு தனியான முஸ்லிம் பெரும்பான்மை நிருவாக மாவட்டம் உள்ளடக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 920 சதுர மைல்களாகும்.

மேலே (1) யில் சொல்லப்பட்ட புதிய நிருவாக மாவட்டத்தில் இனரீதியிலான பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள், இனங்களின் குடிசனத் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் பங்கிடக்கூடியவாறு உருவாக்கப்படல் வேண்டும்.

2. மட்டக்களப்பு மாவட்டத்தில்
24 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் உள்ள விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப்படி பங்கிடத்தக்கதாக முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 346 சதுர மைல்களாகும்.

3. திருகோணமலை மாவட்டத்தில்
29 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி பகுதிகளில் உள்ள விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப்படி பங்கிடப்பட்டு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 414 சதுர மைல்களாகும்.

4. மன்னர் மாவட்டத்தில்
27 வீதம் முஸ்லிம் சனத்தொகையை கொண்ட மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி, முதலி பகுதிகளிலும் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப்படி பங்கிடப்பட்டு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 278 சதுர மைல்களாகும்.

5. பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகளில் மீதமாயுள்ள கல்முனை, சம்மாந்துறை, காத்தான்குடி பகுதிகளில் முஸ்லிம் பெரும்பான்மை குறையாதவாறு நகர சபைகள் உருவாக்கப்படல் வேண்டும்.

6. பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகளோடு மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் நெருங்கிய தொடர்புடையதாக தனியான முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

36501635_10214458452109641_1555116394121527296_n

Web Design by The Design Lanka