சர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார் - Sri Lanka Muslim

சர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்

Contributors
author image

BBC

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான ஒபெக்கின் கூட்டம் அடுத்த சில நாட்களில் வியன்னாவில் நடைபெறவுள்ள நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.

கடந்த 1961ஆம் ஆண்டிலிருந்து ஒபெக்கில் அங்கம் வகித்து வரும் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், தனது இயற்கை எரிவாயு உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில் வரும் ஜனவரி மாதம் அந்த அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது.

திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகளவில் முன்னணியில் இருக்கும் கத்தார், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதாக கூறி அருகிலுள்ள சில அரபு நாடுகள் கத்தாரை ஒதுக்க ஆரம்பித்தன.

இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியை குறைப்பது குறித்த செய்தியை ஒபெக் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரில் இந்த திடீர் நிலைப்பாடு குறித்து பேசிய அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் சாட் அல்-காபி, “கச்சா எண்ணெய்யில் உள்ளதை விட எங்களுக்கு இயற்கை எரிவாயுவில் சாத்தியமான ஆற்றல் வளம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, தங்களது பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கும் இந்த முடிவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் சரிவை விளக்கும் வரைபடம்
Image captionசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் சரிவை விளக்கும் வரைபடம்

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய சௌதி அரேபியா உள்ளிட்ட அருகிலுள்ள வலிமைமிக்க அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தன.

உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கத்தாரின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதால், அந்நாட்டின் இந்த முடிவால் சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரிய பாதிப்பேதும் இருக்காது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கடும் சரிவு காணப்படுவதால், உற்பத்தி குறைப்பு குறித்த அறிவிப்பை இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஒபெக் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team