ரகசிய கேமராவை மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி? » Sri Lanka Muslim

ரகசிய கேமராவை மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி?

camera cctv

Contributors
author image

BBC

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமராக்களை மறைத்துவைத்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

“சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், பல் மருத்துவர் உட்பட 7 பெண்கள் மாத வாடகை அடிப்படையில், அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் சொருக முயன்றுள்ளார். எதிர் பாராமல் பிளக் உடைந்து விடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ரகசிய கேமராக்களைக் கண்டறியும், ‘Hidden Camera Detector’ என்ற செயலியை செல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து அறைகளிலும் சோதனை செய்துள்ளனர்.

'Hidden Camera Detector' கருவிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

Image caption‘Hidden Camera Detector’ கருவி

அப்போது, படுக்கை அறை, குளியல் அறைகளில் இருந்த சுவிட்ச் போர்டு, எல்இடி விளக்குகள், அழைப்பு மணி, துணி மாட்டும் ஹேங்கர் என 10 இடங்களில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். காவல் துணை ஆணையர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி ஆணையர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். பல இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ரகசிய கேமராக்களையும் அகற்றினர்.

அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நேரடியாக சஞ்சயின் கணினிக்கு வந்து விடும் விதமாக, கேமராக்கள் அனைத்தும் வயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, சஞ்சயின் லேப்-டாப், அவரிடம் இருந்த 16 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சஞ்சய்யை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கைதான சஞ்சய், கேரளாவை சேர்ந்தவர். அவரிடம் இருந்து போலியான ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

ஏற்கெனவே வேறு விடுதிகளில் இதுபோல ரகசிய கேமராக்களை மறைத்துவைத்தாரா? பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை என்ன செய்தார்? என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலையே அறைகளை காலி செய்தனர். அவர்கள் கொடுத்திருந்த முன்பணத்தையும் சஞ்சயிடம் இருந்து போலீஸார் வசூலித்து கொடுத்துள்ளனர்.

செல்போனில் ‘Hidden Camera Detector’ என்னும் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த செயலியை ஆன் செய்தால், செல்போனில் உள்ள கேமரா வீடியோ தானாக செயல்பட ஆரம்பிக்கும். பின்னர், அறை முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும். ரகசிய கேமரா உள்ள இடத்தை வீடியோ எடுக்கும்போது செல்போனில் உள்ள சென்சார் மூலம் ‘பீப்’ ஒலி கேட்கும். அதன்மூலம், அங்கு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கலாம். ‘ஸ்பை ஃபைண்டர்’ என்ற சிறிய சென்சார் கருவி மூலமாகவும் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்கலாம்” 

Web Design by The Design Lanka