அமைச்சர்கள் இல்லாத நிலையில் அமைச்சுக்கள் ஜனாதிபதியின்கீழ் வருமா? » Sri Lanka Muslim

அமைச்சர்கள் இல்லாத நிலையில் அமைச்சுக்கள் ஜனாதிபதியின்கீழ் வருமா?

yls

Contributors
author image

Farook Sihan - Journalist

அமைச்சர்கள் இல்லாத நிலையில் அமைச்சுக்கள் ஜனாதிபதியின்கீழ் வருமா? என்று சட்டமுதுமானி வை. எல். எஸ். ஹமீட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலமை தொடர்பில் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வை.எல்.எஸ்.ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது விடயமாக மேலும் அவர் குறிப்பிடும்போது,

19வது திருத்தத்திற்குமுன் அப்போதைய சரத்து 44(2) இன் பிரகாரம் தனக்குக்கீழ் எத்தனை அமைச்சுக்களையும் ஜனாதிபதி வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் எந்தவொரு அமைச்சருக்கும் வழங்கப்படாத விடயதானங்கள் ஜனாதிபதியின் கீழ் வரும்.

19வது திருத்தத்தில் அந்த சரத்து நீக்கப்பட்டுவிட்டது. 19வது திருத்தம் கொண்டுவரப்பட்ட திகதியில் இருந்து அடுத்த பொதுத்தேர்தல் (17/08/2015) முடியும் வரை பிரதமரின் சம்மதத்துடன் எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ளும் அதிகாரம் இடைக்கால ஏற்பாடுகளினூடாக வழங்கப்பட்டிருந்தது. [section 50(a)]

தேர்தல் நடந்து முடிந்துவிட்டதால் அதுவும் முடியாது. தற்போதைய ஜனாதிபதிக்கு மாத்திரம் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களை வைத்திருக்க 19 திருத்தத்தில் இடைக்கால ஏற்பாடு உள்ளது. எதிர்கால ஜனாதிபதிகளுக்கு அதுவும் முடியாது. (section 51)

சுருங்கக்கூறின் மேற்கூறிய மூன்று அமைச்சுக்களையும் தவிர வேறு எந்தவொரு அமைச்சும் அவரின்கீழ் வரமுடியாது. ஆனால் ‘ சட்டம், ஒழுங்கு அமைச்சை’ சட்டவிரோதமாக வர்த்தமானியின்மூலம் தனக்குக்கீழ் ஏற்கனவே கொண்டுவந்திருக்கிறார்.

மறுபுறம் அமைச்சர்கள் யாருமில்லாத நிலையில் அனைத்து அமைச்சுக்களும் விடயதானங்களும் யாருக்கும் ஒதுக்கப்படாதவை; என்று கொள்ளப்பட வேண்டும்.

19இற்கு முன் என்றால் அவை ஜனாதிபதியின் கீழ் இருப்பதாக கொள்ளப்படும். இப்பொழுது அதுவும் முடியாது. ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இருந்தாலும் அரசியலமைப்பு விதிகளுக்கமைவாகத்தான் அவற்றை செயற்படுத்த முடியும்.

எனவே, அமைச்சர்களும் இல்லை. அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வரவும் முடியாது. செயலாளர்களும் இல்லை. நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

Web Design by The Design Lanka