மருதமுனை பிரதேசத்திற்கு பேரிழப்பாகும் » Sri Lanka Muslim

மருதமுனை பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்

AM RAKEEB LL.B

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இசட்.ஏ.எச்.ரஹ்மானின் திடீர் மறைவு, எமது மருதமுனை பிரதேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலம்சென்ற பொலிஸ் பரிசோதகரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.ரஹ்மானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முதல்வர் றகீப் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“மருதமுனையின் ஆளுமைகளில் ஒருவரான இசட்.ஏ.எச்.ரஹ்மான், இப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக மிகவும் கரிசனையுடன் உழைத்து வந்துள்ளார். எந்தவொரு விடயத்திலும் விடா முயற்சியுடன் தீவிரமாக செயற்பட்டு, எடுத்த காரியத்தில் வெற்றியீட்டக்கூடிய ஒருவராகவும் திகழ்ந்தார். அந்த வகையில்தான் 1995ஆம் ஆண்டு அரசியல் பழிவாங்கல் காரணமாக இழந்த பொலிஸ் பரிசோதகர் பதவியை 23 வருடங்களின் பின்னர் அண்மையில் பெற்றுக் கொண்டார்.

அப்பதவியை ஏற்றுக் கொள்வதற்காகாகவே, எமது மாநகர சபையில் அங்கம் வகித்த அவர் தனது உறுப்பினர் பதவியை கடந்த ஒக்டோபர் மாதம் இராஜினாமா செய்திருந்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நானும் அவரும் ஒரே வட்டாரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டோம். அத்தேர்தலில் நான் வெற்றியீட்ட, அவர் தோல்வியடைந்திருந்தார். எனினும் சுதந்திரக் கட்சி சார்பில் பட்டியல் உறுப்பினராக அவர் நியமனம் பெற்று, எமது சபையின் ஓர் உறுப்பினராக அங்கம் வகித்தார். அரசியல் ரீதியாக எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தபோதிலும் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக அவர் வாக்களித்து, என்னுடன் கைகோர்த்துக் கொண்டார்.

அதன் பின்னணியில் நாம் இருவரும் மருதமுனையின் அபிவிருத்திக்காக ஒன்றிணைத்து உழைப்பதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, திடசங்கற்பம் பூண்டிருந்தோம். எனினும் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் பொலிஸ் துறையில் இணைவதற்காக மாநகர சபை உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டது. இந்நிலையில் எமது மாநகர சபையின் கடந்த மாத சபைக்கூட்டத்தில் அவர் இல்லாத நிலையிலும் அவரது திறமைகளையும் சேவைகளையும் பாராட்டி, சபை சார்பில் பிரியாவிடை வழங்கியிருந்தேன்.

உண்மையில் இசட்.ஏ.எச்.ரஹ்மானின் திடீர் மறைவானது, மருதமுனையை பொறுத்தமட்டில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இவரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அவரைப்பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Web Design by The Design Lanka