யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பெருமளவு பணம் கறந்து சத்திரசிகிச்சை » Sri Lanka Muslim

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பெருமளவு பணம் கறந்து சத்திரசிகிச்சை

1391538_10201833886341568_2036743069_n

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் வைத்தியசாலை நிர்வாகத்துக்குள் பூதாகரமாகியுள்ளது.

அதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தென்னிலங்கையின் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாற்றலாகி வந்துள்ளார். சிறுநீரக நோயாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு அவரால் பணம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் நோயாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும் சிலர் தமது பொருளாதார நிலைகளைக் கூறி ஒரு லட்சத்துக்கு அண்மித்த தொகையை வழங்கியுள்ளனர்.

நோயாளர்கள் சார்பில் அவர்களது உறவினர்களை திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து இந்தப் பணம் தொடர்பான டீல் பேசப்பட்டுள்ளது. மருத்துவரால் நிர்ணயிக்கப்பட்ட பணம் அவரது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்ட பின்னரே சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பணம் செலுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டோரில் பெண் நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.

மருத்துவரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மருத்துவரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் பணிப்பாளரிடம் கோரினர்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரால் அண்மைக்காலங்களில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகின்றார்.

அத்துடன், மருத்துவருக்கு வழங்கப்பட்ட பணத்தை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீளப் பெற்றுத் தருவதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி பாதிக்கப்பட்டோரிடம் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka