பிறவியிலேயே கையை இழந்த மாணவி வனிதா தமயந்திக்கு ஜனாதிபதியிடமிருந்து செயற்கை கை அன்பளிப்பு » Sri Lanka Muslim

பிறவியிலேயே கையை இழந்த மாணவி வனிதா தமயந்திக்கு ஜனாதிபதியிடமிருந்து செயற்கை கை அன்பளிப்பு

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் பிறவியிலேயே கையை இழந்த என்.பி.வனிதா தமயந்தி என்ற மாணவி தனக்கு செயற்கை கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அம்மாணவிக்கு ஜனாதிபதி அவர்களால் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து செயற்கை கை ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி சிறிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் ஜனாதிபதி அவர்களை சந்தித்த இம்மாணவி, தனக்கு செயற்கை கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவிக்கு பொருத்தமான செயற்கை கை ஒன்றை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அந்த வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டு இலங்கை இராணுவ புனர்வாழ்வு பணிப்பாளர் சபையின் கீழ் இயங்கும் நிலையமொன்றினால் இந்த செயற்கை கை உற்பத்தி செய்யப்பட்டதுடன், இதற்கான ஆலோசனை மற்றும் மூலப்பொருள் ஜெர்மனி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டது. இந்த செயற்கை கையை உற்பத்தி செய்வதற்கு இரண்டு இலட்ச ரூபா செலவாகியுள்ளதுடன், இதற்கான நிதி ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்பட்டது.

பிறவியிலேயே கையை இழந்திருந்த இந்த மாணவி கல்வியில் சிறந்து விளங்குவதுடன், அவரது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில் விசேட கவனம் செலுத்தி அவருக்கு இந்த உதவியை பெற்றுக்கொடுத்ததற்காக அவரது பெற்றோர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மாணவியின் பெற்றோர் மற்றும் இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.கே.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.03

Web Design by The Design Lanka