தமிழரின் காலில் தைத்த முள்ளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது » Sri Lanka Muslim

தமிழரின் காலில் தைத்த முள்ளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது

47324474_296909374499555_3359564367149400064_n

Contributors
author image

S.Ashraff Khan

தமிழ் மக்களின் காலில் குத்தியுள்ள முள்ளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது என்று அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

இவரின் அக்கரைப்பற்று அலுவலகத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களை வெள்ளிக்கிழமை (07) சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் உரையாற்றும் போது,

தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான தீய சக்திகளின் வலைகளில் தொடர்ந்து விருப்பத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி கொள்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான தீய சக்திகளின் கைக்கூலிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களை என்றென்றைக்கும் அறிவிலிகளாக வைத்திருக்கின்றனர். நாம் காலில் குத்தி உள்ள முள்ளை வைத்து கொண்டு வேதனை என்று முணகுவதை விடுத்து அதை பிடுங்கி எறிந்து மகிழ்ச்சியை பெற முயற்சித்தல் வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு காலில் தைத்த முள்ளை போல எமது இனத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.

அரசாங்க தரப்பில் இணைந்து மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து தான்தோன்றித்தனமாக மக்களை வழி நடத்தி சொந்த இருப்பையும், சுய இலாபத்தையும் தக்க வைக்கின்ற அரசியல் நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பையோ, சுய நிர்ணயத்தையோ எந்த அரசாங்கமும் தர போவதில்லை என்பது முடிந்த முடிவாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகள் அரசாங்கத்தில் இணைவதன் மூலம் அமைச்சு பதவிகளையும், அபிவிருத்தி நிதிகளையும் பெற்று தமிழ் மக்களுக்கு மகத்தான சேவைகளை நிச்சயம் வழங்க முடியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 50 கோடி ரூபாய் அபிவிருத்தி நிதி வழங்க அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க கூடிய அமைச்சு பதவிகள், சுமார் 800 கோடி ரூபாய் அபிவிருத்தி நிதி ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதை சாதிக்க விரும்புகின்றனர்? ஆனால் இவற்றை தெரிந்து வைத்து உள்ளபோதும் அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக மல்லு கட்டி கொண்டு இருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனம் தடம் எதுவும் இல்லாமல் அழிகின்ற நிலை தொடர்தல் கூடாது. ஏற்கனவே தமிழ் இளைஞர்களை பிழையாக வழி நடத்தி அழித்து விட்டார்கள். முஸ்லிம் சகோதர இனத்தின் முன்னேற்றங்களை பாருங்கள். கட்சி என்பது மதம் அல்ல என்பதை எமது மக்கள் கட்டாயம் உணர்தல் வேண்டும். இந்த நாட்டின் பொருத்தமான தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆவார். இவராலேயே தமிழ் மக்களின் இன்னல்களை போக்கடிக்க முடியும். எனவே இவரின் கரங்களை பலப்படுத்தி தேவையான வரங்களை பெற்று கொள்ள வேண்டும்.

Web Design by The Design Lanka