நிறைவேற்று ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு; ஜே வி பி யின் 20 திருத்தப் பிரேரணை » Sri Lanka Muslim

நிறைவேற்று ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு; ஜே வி பி யின் 20 திருத்தப் பிரேரணை

yls

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பாகம்-4

வை எல் எஸ் ஹமீட்

ஜே வி பி யின் 20 திருத்தப் பிரேரணை
—————————————————
ஜே வி பி யின் அரசியலமைப்புக்கான 20 திருத்த பிரேரணையின் பிரதான அம்சங்கள்

நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு

ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்பட மாட்டார். மாறாக பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்படுவார்.
[1972 யாப்பின்கீழ் ஜனாதிபதி பிரதமரால் தெரிவுசெய்யப்பட்டார். ( சரத்து 25)]

ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அறுதிப்பெரும்பான்மையால் (113 அல்லது அதற்குமேல்) தெரிவுசெய்யப்பட வேண்டும். இங்கு ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் இழுபறி ஏற்படும்போது சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விசேட பெறுமதி கிடைக்கின்றது.

பிரதமர் தெரிவுசெய்யப்படல்
————————————-
பொதுத்தேர்தல் வேட்பாளர் நியமனத்தின்போது ஒரு கட்சி பிரதமர் வேட்பாளரை நியமித்து அக்கட்சி 50% மேல் ஆசனங்களைப் பெற்றால் ஜனாதிபதி அவரை பிரதமராக நியமிப்பார். அவ்வாறு எந்தக் கட்சியும் 50% ஆசனங்களைப் பெறாதபோது தனது அபிப்பிராயத்தில் யார் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை பிரதமராக நியமிப்பார்.

அதன்பின் பாராளுமன்றம் முதலாவது கூடுகின்றபோது அவ்வாறு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால் ஒரு கட்சி 50% இதற்குமேல் ஆசனங்ளைப்பெற்று அக்கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்படும்போது அவ்வாறான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.

தற்போதைய சட்டத்தில் அவ்வாறு பிரதமர்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியமில்லை. எதிர்க்கட்சி விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் 47 ஆசனங்களுடன் இருந்த ஐ தே கட்சியின் தலைவரை பிரதமராக்கினார். அன்றைய சூழ்நிலையில் மஹிந்த தரப்பினரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை. அவ்வாறு கொண்டுவரவேண்டிய சட்டத்தின் தேவை இருந்திருந்தால் ரணிலின் பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்திருக்கலாம்.

சிறுபான்மைகளின் பலம்
——————————-
ஒரு கட்சி 50% மேல் ஆசனங்கள் பெற்றாலேயொழிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதிலிருந்து அவரது பதவிக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டும்.

ஜனாதிபதி ( நிறைவேற்று) ஆட்சிமுறை இருக்கும்போது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பதவிக்காலம் முடியும்வரை ஜனாதிபதியை அகற்றமுடியாது; என்பதால் பிரதமருக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிரணியில் இருந்து கட்சிதாவல் இலகுவாக இடம்பெறும். அனுபவரீதியாக இதனைக் கண்டிருக்கின்றோம். பிரதமர் ஆட்சியில் சிறுபான்மையின் தயவில் தங்கியிருக்கின்ற பிரதமரை அதே சிறுபான்மைக் கட்சிகளின் தயவுடன் எந்நேரமும் வீழ்த்தலாம்; என்கின்ற நம்பிக்கையில் கட்சித்தாவல்கள் குறைவாக இருக்கும்; என்பது மட்டுமல்ல, சிறுபான்மைக் கட்சிகளுக்கு ஆளும் எதிர்க்கட்சி இருதரப்பிலும்
சிறப்பான பெறுமதி இருக்கும்.

சுருங்கக்கூறின் பிரதமர் ஆட்சியில் அதிகரித்த பேரம்பேசும் சக்தி சிறுபான்மைக் கட்சிகளுக்கு கிடைக்கும். அவர்கள் என்ன பேரம் பேசுவார்கள்? சமூகத்திற்காக பேரம் பேசுவார்களா அல்லது தமக்காக பேசுவார்களா? என்பது வேறுவிடயம். அது பிரதமர் ஆட்சிமுறையில் தங்கியிருக்கின்ற ஒரு விடயமல்ல. அது நாம் தெரிவுசெய்கின்ற தலைமைத்துவங்களில்/ பிரதிநிதித்துவங்களில் தங்கியிருக்கின்றது. பிழையானவர்களைத் தெரிவுசெய்தால் நாமே குற்றவாளி.

இங்கு நாம் சிந்திக்கவேண்டியது, ஜனாதிபதி ஆட்சிமுறையில் சமூகத்திற்கு ஐந்து வருடங்களுக்கொருமுறை பேரம்பேசும் சக்தி கிடைக்கின்றது அல்லது கிடைக்கலாம். ( அந்தப்பேரத்தையும் கட்சித்தலைவர்ளே பேசுகிறார்கள்; என்பது வேறுவிடயம்) ஆனால் தேர்தல் முடிந்ததும் அந்தப்பேரம் பேசும் சக்தி முடிந்துவிடும். தெரிவு செய்யப்பட்டவர் அடுத்த தேர்தலை மனதில் வைத்து சிறுபான்மையை அரவணைப்பாரா? இல்லையா? என்பதற்கு உத்தரவாதமில்லை.

பாராளுமன்றத்தில் கிடைக்கும் பேரம் பேசும் சக்தி நிறைவேற்று ஜனாதிபதி என்கின்ற பதவியின் வீரியத்தினால் பலம் குறைக்கப்படுகிறது. ஆனாலும் முழுமையாக இழக்கப்படுவதில்லை. ஆனால் ஜனாதிபதி முறைமை ( நிறைவேற்று) ஒழிக்கப்படும்போது சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் கிடைக்கும் பேரம்பேசும் சக்தி பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வாட்சி முழுவதும் தொடர்கிறது.

சிறுபான்மைக் கட்சிகளின் பேரம்பேசும் சக்தியின் அடிப்படை என்ன?
—————————————————————
சிறுபான்மைக் கட்சிகளின் பேரம்பேசும் சக்தியின் அடிப்படை என்பது, பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தேசியக்கட்சியினால் 50% விகிதத்திற்கதிகமான ஆசனங்களை சுயமாக பெறமுடியுமா? என்பதில் தங்கியிருக்கின்றது. அவ்வாறு முடியும் என்றால் பாராளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தி இல்லை; என்பது பொருளாகும். முடியாது என்றால் அங்குதான் சிறுபான்மைக் கட்சிகளின் பேரம்பேசும் சக்தி ஆரம்பிக்கின்றது.

ஒரு தேசியக்கட்சி 50% விகித்திற்குமேல் ஆசனம்பெற முடியுமா? என்பதை தீர்மானிப்பது எது?
————————————————————
ஒரு கட்சி 50% இற்குமேல் ஆசனங்களைப்பெற முடியுமா? என்பதைத் தீர்மானிப்பது தேர்தல் முறையாகும். 1977ம் ஆண்டுவரை இலங்கையில் தொகுதிவாரித் தேர்தல்முனை இருந்தது. அதன்பின் விகிதாசாரத் தேர்தல்முறை இன்றுவரை இருக்கின்றது.

முதலாவது பாராளுமன்றத் தேர்தல்-1947
———————————————
மொத்த ஆசனங்கள்-95
ஐ தே க- ஆசனங்கள் -42 (44.21%)
பெற்ற வாக்குகள்- 751,432 (39.81)

லங்கா சமசமாஜக் கட்சி- ஆசனங்கள் -10
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-7
இலங்கை இந்திய காங்கிரஸ்-6
மார்க்ஸிஷ்ட் கட்சி-5
கம்யூனிஷ்ட் கட்சி-3
இலங்கைத் தொழிலாளர் கட்சி-1
சுயேட்சை-21

கவனிக்குக- சுமார் 40% வாக்குகளுக்கு 44% ஆசனங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது தேர்தல்-மே 1952
————————————
மொத்த ஆசனங்கள் -95
ஐ தே க- ஆசனங்கள்-54 (56.84%)
வாக்குகள்-1,026,005 (44.08%)

ஶ்ரீ சு க- 9 ஆசனங்கள் ( 9.47%)
வாக்குகள்-361,250 (15.52%)
ல ச ச க- 9 ஆசனங்கள் (9.47%)
வாக்குகள்-305,133(11.11)

அ இ த கா- 4
அதில் இருந்து பிரிந்து உருவான இலங்கை தமிழரசுக் கட்சி -2 ஆசனங்கள்.

மலையக மக்களின் பிரஜாஉரிமை பறிக்கப்பட்டதனால் இலங்கை இந்திய காங்கிரஸ் தேர்தல் அரங்கில் இருந்து மறைந்தது.
செல்லுபடியான மொத்த வாக்குகள்-2,327,626
( முக்கியமான கட்சிகளின் ஆசன விபரங்கள் மாத்திரமே தரப்படுகின்றன )

கவனிக்குக:44.08% வாக்குகளுக்கு 56.8% ஆசனங்கள் பெறப்படுகின்றன.

மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல்- ஏப்ரல் 1956
—————————————————————
மொத்த ஆசனங்கள் -95
M E P (பண்டாரநாயக இத்தேர்தலில் இக்கட்சியில்தான் போட்டியிட்டார்.) 51 ஆசனங்கள் (53.68%)
வாக்குகள் -1,046,277 – (39.52%)
U N P- 8 ஆசனங்கள் (8.42%)
வாக்குகள்-738,810 (27.91%)
செல்லுபடியான மொத்த வாக்குகள் -2,647,247,,

கவனிக்குக: ஆளுங்கட்சி 39.52% வாக்குகளுக்கு 53.68% ஆசனங்கள்
எதிர்க்கட்சியின் 27.91% வாக்குகளுக்கு 8.42% ஆசனங்கள்

4 வது பாராளுமன்றத் தேர்தல் -19 மார்ச் 1960
————————————————————
மொத்த ஆசனங்கள் -151
ஐ தே க- 50 ஆசனங்கள் (33.11%)
வாக்குகள் -909,043 (29.81%)

ஶ்ரீ ல சு க- 46 ஆசனங்கள் (30.46%)
வாக்குகள் -647,175 (21.28%)
செல்லுபடியான மொத்த வாக்குகள் 3,041,420

இலங்கைத் தமிழரசுக் கட்சி-15 ஆசனங்கள்
அ இ த காங்கிரஸ்-1 ஆசனம்

எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் சிம்மாசன உரையில் பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியது. ஶ்ரீ சு கட்சியிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் அப்பொழது ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக தமிழரசுக் கட்சியும் சிம்மாசன உரைக்கு எதிராகவே வாக்களித்தது. சிம்மாசன உரையின் தோல்வியைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

5 வது பாராளுமன்றத் தேர்தல்- 20, ஜூலை 1960
—————————————————————-
மொத்த ஆசனம்-151
ஶ்ரீ ல சு க- 75 ஆசனங்கள் (49.66%)
வாக்குகள்-1,022,171 (33.22%)
ஐ தே க- 30 ஆசனங்கள் (19.86%)
வாக்குகள் – 1,144,166 (37.19)
தமிழரசுக் கட்சி-16

இங்கு கவனிக்க வேண்டியது 33.22% வாக்குகளைப் பெற்ற ஶ்ரீ சு கட்சி 75 ஆசனங்கள், அதாவது கிட்டத்தட்ட 50% ஆசனங்கள்பெற, அதனைவிட அதிகமாக 37.19% வாக்குகளைப்பெற்ற ஐ தே க 30 ஆசனங்களையே பெற்றது. இதுதான் தொகுதிமுறைத் தேர்தலாகும்.

குறிப்பு: கிட்டத்தட்ட அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றதும் ஶ்ரீமாவோ தலைமையிலான ஶ்ரீ சு கட்சி, தமிழரசுக் கட்சியைக் கைவிட்டு தனிவழியே இனவாதத்தை நோக்கி நகர்ந்தது.

( தொடரும்)

Web Design by The Design Lanka