பிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது » Sri Lanka Muslim

பிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது

theresa

Contributors
author image

BBC

பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நடந்த பிரதமர் தெரீசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

தெரீசா மே நேற்றைய தினம் வெற்றிபெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.

பழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றார் தெரீசா மே. சுமார் 63% வாக்குகளை அவர் வென்றுள்ளார்.

2016-ல் நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் ஒப்பந்தம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் கோபம் கொண்ட அவரது கட்சியின் 48 எம்.பிக்களின் கடிதம் காரணமாக பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

நேற்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான பிறகு பேசிய பிரதமர் மே, வியாழக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் தமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களை கொண்டு வர தாம் போராடவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

தெரீசா மேபடத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG

”இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் என்னுடன் உழைக்கும் எம்.பிக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கான ஆதரவுக்கு நன்றியுள்ளவராக இருந்தபோதிலும், எனக்கு எதிராக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பிக்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்கள் சொல்வதையும் நான் கேட்டிருக்கிறேன்,” என நேற்று இரவு பேசியிருக்கிறார் பிரதமர் மே.

தெரீசா மேவுக்கு எதிராக நேற்று நடந்த வாக்கெடுப்பில் சுமார் 37% பழமைவாதக் கட்சியின் எம்பிக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

பழமைவாதக் கட்சி எம்பிக்கள் சொல்வதென்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு தலைமையேற்று அழைப்புவிடுத்த ஜேக்கப் ரீஸ்-மோக் ”பிரதமர் மே மூன்றில் ஒரு பங்குக்கும் மீதான எம்பிக்களின் ஆதரவை இழந்துவிட்டார். பிரதமருக்கு இது ஒரு மோசமான முடிவு. அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.

பிரக்ஸிட் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் ஃபிரான்கோஸ் பிபிசியிடம் பேசுகையில் ”பிரதமருக்கு எதிராக 117 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். யாரும் கணித்ததைவிட இந்த அதிகமானது. இது நிச்சயம் பிரதமருக்கு அபாயகரமான நிலை என நான் நினைக்கிறேன். பிரதமர் தாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார்.

இம்முடிவானது கட்சிக்கும் பிரதமருக்கும் பாடம் கற்பித்துள்ளதாக போக்குவரத்துத்துறை செயலர் கிறிஸ் க்ரெலிங் தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் கேபினட் அமைச்சர் டேமியன் க்ரீன், பிரதமருக்கு இது ஓர் உறுதியான வெற்றி என தெரிவித்துள்ளார்.

பழமைவாதக் கட்சி தலைவர் சர் கிரஹாம் ப்ராடி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவித்ததையடுத்து அக்கட்சி எம்பிக்கள் வாக்கெடுப்பு முடிவை வரவேற்றனர்.

தெரீசா மேபடத்தின் காப்புரிமைLEON NEAL

எதிர்க்கட்சியினர் என்ன சொல்கிறார்கள்?

இந்த வாக்கெடுப்பு எந்த மாற்றத்துக்கும் வித்திடவில்லை என தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தெரிவித்துள்ளார்.

”தெரீசா மே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். அவரது ஆட்சி குழப்பத்தில் இருக்கிறது. நாட்டுக்கு தேவையான விதத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் தவறிவிட்டார்,” என்றார் கார்பின்.

நம்பிக்கை வாக்கெடுப்பானது பழமைவாத எம்பிக்கள் மட்டுமின்றி, அனைத்து எம்பிக்கள் மத்தியிலும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறமுடியும் மேலும் பொதுத்தேர்தல் கொண்டுவருவதற்கும் வித்திடும் என்கிறது தொழிலாளர் கட்சி.

ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் ஸ்டீபன் கெதின்ஸ் ” தொழிலாளர் கட்சி தெரீஸா மே ஆட்சியின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர வேண்டும். மக்களின் வாழ்க்கையுடன் அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது,” என்றார்.

டெமோகிரெடிக் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் நிகெல் டாட்ஸ் தமது கட்சி தெரீசா மே ஆட்சியமைக்க உதவியது. ஆனால் பிரெக்சிட் ஒப்பந்தத்தில் அயர்லாந்து வடக்கு அயர்லாந்து இடையேயான சிக்கல்களுக்கான திட்டங்கள் குறித்து பெரும்பாலான எம்.பிக்கள் அதிருப்தியுடன் எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னமும் இவ்விவகாரத்தில் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தற்போதய நிலையில் தமது கட்சி ஆதரவு தெரிவிக்காது என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெரீசா மேபடத்தின் காப்புரிமைJUSTIN TALLIS

அடுத்த தேர்தலில் போட்டி இல்லை – தெரீசா மே உறுதி

தமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போராடுவேன். வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே வருவதற்கு அதுதான் ஒரே வழி என முன்னதாக தெரீசா மே தெரிவித்திருந்தார்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கடைசி நேரத்தில் எம்பிக்களிடம் பேசிய பிரதமர் வரும் 2022 தேர்தல் நடப்பதற்கு முன்னதாக தலைவர் பதவியில் இருந்து விலக உறுதியளித்துள்ளார்.

அடுத்த தேர்தலிலும் தலைவராக போட்டியிடவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் தமது கட்சியினர் விரும்பமாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளார். எனினும் எந்த தேதியில் பதவி விலகுகிறார் என்பது குறித்து பேசவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோற்றிருந்தால் பழமைவாத கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலக நேரிட்டிருக்கும் அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்திருக்கும்.

தற்போது வியாழகிழமையன்று பிரஸ்ஸல்சில் நடக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய அவர் முயற்சிப்பார். ஆனால் ஒப்பந்தத்தில் மீண்டும் பேரம் பேசி மாற்றம் செய்ய முடியாது என முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறியிருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகளை ஆஸ்திரேலிய சான்சலர் செபாஸ்டியன் குர்ஸ் வரவேற்றுள்ளார். ”ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்தவித ஒப்பந்தமுமின்றி விலகுவதை தவிர்ப்பதே இரு தரப்பின் இலக்கு” என தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka