படுகொலைகளும் சிறுவர் கொலைகளும் புலிகளால் நிகழ்த்தப்பட்டன!! » Sri Lanka Muslim

படுகொலைகளும் சிறுவர் கொலைகளும் புலிகளால் நிகழ்த்தப்பட்டன!!

_f8cb6794-b61e-11e6-93e2-9c0a12f13811

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroffali


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பெண்கள் நிம்மதியாக வாழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் இளையோர் நிம்மதியாக கல்வி கற்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் புலிகளின் காலத்தில் சுதந்திரம் மற்றம் பாதுகாப்பான சூழல் காணப்பட்டதாக விஜயகலா தெரிவிக்கின்றார்.

ஆனால் அமைச்சருக்கு வரலாறு தெரியவில்லை போலும்…அல்லது மறந்துவிட்டதாக நடிக்கின்றாரோ தெரியவில்லை

விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் உமிழ்ந்த குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் பல்லாயிரம் என்பது யுத்த கால வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு தௌிவாக தெரிந்திருக்கும்.

தமிழ் சமூகப் பெண்கள் ஆயுத முனையில் கற்பழிக்கப்பட்டதும், கல்விச் சமூகம் அழித்தொழிக்கப்பட்டதும் புலிகளின் காலத்தில் தான் என்பதை விஜயகலா மறந்துவிட்டார்.

தமிழர்களின் மிகப் பெரும் சொத்துக்களில் ஒன்றான கல்விச் சமூகம் அழிக்கப்பட்டதன் காரணமாகத்தான் அருணாச்சலம் தங்கத்துரை, அல்பிரட் துரையப்பா, நீலன் திருச்செல்வம், லக்ஷ்மண் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற ஆளுமைகள் செல்வாக்குச் செலுத்திய தமிழ் அரசியல் வரலாற்றில் மண்ணெண்ணெய் கலப்படத்தைத் தவிர வேறொன்றும் அறியாத விஜயலாக்கள் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

புலிகளின் காலத்தில் நடைபெற்ற சிற்சில சம்பவங்களை மட்டும் விஜயகலா அக்காவுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

1987ம் ஆண்டு யாழ். மாவட்ட மருத்துவமனையை கேடயமாக்கிக் கொண்டு விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை நோக்கி எறிகணைத்தாக்குதல் மேற்கொண்டார்கள். அந்தத் தாக்குதலின் போது உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை 68-70 என்று அன்றைய இந்திய அமைதிப்படைத் தளபதி தீபிந்தர் சிங் உறுதிப்படுத்தியிருந்தார்.

1990ம் ஆண்டு கிழக்கின் காத்தான்குடி மற்றும் ஏறாவூரில் புலிகள் இனப்படுகொலை ஒன்றையே கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.  ஏறாவூரில் ஆகஸ்ட் 11ம் தேதி 1990-ல் 116பேர்கள் மற்றும், ஆகஸ்ட் 4-ம் தேதி 1990-ல் காத்தான்குடியில் 147 முஸ்லிம்களைகொன்று குவித்தனர்..விடுதலைப்புலிகள்.கொலைவெறியாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்தனர்.

அதே ஆண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் கிழக்கின் எல்லையோரக் கிராமமான அழிஞ்சிப் பொத்தானையில் (பள்ளியகொடல்லை) கர்ப்பத்தில் இருந்த குழந்தைகள் வரை புலிகளின் கொலைவெறித் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சக இனத்தவருக்கு எதிராகத் தான் புலிகள் இவ்வாறான அராஜகங்களை நிகழ்த்தியுள்ளார்கள் என்று கூறித் தப்பிக்கவும் முடியாது. தமிழ் மக்களில் பலரும் இதே வழிமுறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கல்விச் சமூக படுகொலைகள் என்று எடுத்துக் கொண்டால்

26.06.1985-ல் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சென்.ஜான்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்

யாழ். நூலக எரிப்பு எந்தளவுக்கு தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக இருக்கின்றதோ அதே அளவு ஆறாத ரணம் ஒன்று கிழக்கின் ஏறாவூர் முஸ்லிம்களின் மனங்களில் உண்டு. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசிய முதுசம்களைப் போன்ற ஏராளம் நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஏறாவூர் நூலகம் 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 02ம் திகதி புலிகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டது.

03.07.1990ம் ஆண்டு ஏறாவூரின் முதல் பட்டதாரியும் அதிபருமான தாவூத் சேர் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதன் போது அவரது பதினைந்து வயதான ஒரு புதல்வன் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.

10.10.2005-ல் யாழ் மத்திய கல்லூரி அதிபர் திரு. கணபதி ராஜதுரை விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

11.10.2005-ல் கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி அதிபர் திரு. நடராசா சிவகடாட்சம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

2006ம் ஆண்டு கந்தளாய் சோமபுர எனும் பிரதேச சிங்களப் பாடசாலை மீது புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மூன்று மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். பலரும் சிற்சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

பெண்களுக்கு எதிரான படுகொலை நிகழ்வுகள் என்று எடுத்துக் கொண்டால்,

தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாகஇருந்தவேளையில் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக சர்வதேச பென் (பேனா) இலக்கிய விருது  அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மறுமலர்ச்சியின் முன்னோடியும் மிகப் பெரும் மனித உரிமைப் போராளியுமான ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து பிரிந்து கருணா தலைமையில் இயங்கத் தொடங்கிய குற்றத்துக்காக 2004ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு தினத்தை அண்மித்த நாட்களில் ஏராளம் பெண் போராளிகள் வாகரை மண்ணில் கொடூரமாக கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் எல்லாம் குதறப்பட்டு காகங்களும் நாய்களும் கொத்தித் தின்ன வீசியெறியப்பட்டது.

12.08.2005-ல் இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் அறிவிப்பாளர் திருமதி.ரேலங்கி செல்வராசா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மூதூர் முற்றுகையின் போது விடுதலைப் புலிகளினால் ஐந்துக்கும் மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். எட்டுப் பெண்கள் வரை கடும் காயங்களுக்கு உட்பட்டிருந்தனர்.

2009 யுத்தத்தின் கடைசி நாட்களில் 50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர் விடுதலைபுலிகள்.

2009 –ல் பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை  விடுதலை புலிகள் பலவந்தமாக இழுத்துச் சென்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க 2008ம் ஆண்டின் ஜனவரி மாதம் 01ம் திகதி கொட்டாஞ்சேனை பொன்னம்பலவானேஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் இருந்த தியாகராசா மகேஷ்வரன் புலிகளினால் படுகொலை செய்யப்படுகின்றார். புலிகளின் உறுப்பினரான வசந்தன் என்பவரே கொலையாளியாக அடையாளம் காணப்படுகின்றார். அன்று மகேஷ்வரன் படுகொலைக்கு உள்ளானதன் காரணமாகவே இன்று விஜயகலா அரசியல் என்ற போர்வையில் வீம்பாக பேசிக் கொண்டிருக்க முடிகின்றது.

சிலவேளை மகேஷ்வரனின் படுகொலை காரணமாக தனக்கு விடுதலையும் சுதந்திரமும் கிடைத்ததைப் போன்று ஏனைய பெண்களுக்கும் சுதந்திரமும் விடுதலையும் வாங்கிக் கொடுக்கும் நோக்கம் விஜயகலா அக்காவுக்கு இருக்கின்றதோ தெரியவில்லை..

அதற்காக வரலாற்றைத் திரிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

Web Design by The Design Lanka