கல்முனை சந்தைக் கடைகள் தொடர்பில் மேயர் ரக்கீப்பின் இருமுகக் கருத்துகள் » Sri Lanka Muslim

கல்முனை சந்தைக் கடைகள் தொடர்பில் மேயர் ரக்கீப்பின் இருமுகக் கருத்துகள்

123

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கீப் அவர்கள் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

‘சிலர் கல்முனைச் சந்தைக் கடைகளை தமது பிள்ளைகளுக்குச் சீதனமாக கொடுத்திருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது’ என்று அவர் கூறியிருந்தார். இது ஒரு பாரதூரமான விடயம். இது தொடர்பில் அவர் நிச்சயம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மேயர் என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சந்தைக் கடைகளை தமது பிள்ளைகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்களைக் கண்டுபிடித்து மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். இது அவருக்குரிய பாரிய பொறுப்பு.

கல்முனை சந்தைக் கடைகள் என்பது தனிப்பட்ட நபர்களின் முழுமையான சொத்து அல்ல. மக்கள் சொத்து. இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெற்றிருந்தால் அதனை அனுமதிக்கவே முடியாது.

இது இவ்வாறிருக்க, கல்முனை மேயர் ரக்கீப் அவர்கள் இவ்வாறு தெரிவித்த கருத்துக்கு கல்முனை வர்த்தகர் சங்கம் தமது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் வெளியிட்டிருந்தது.

கல்முனை சந்தை சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன், செயலாளர் ஏ.எல்.கபீர் ஆகியோர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

‘சந்தைக் கடைகளை சில வர்த்தகர்கள் தமது பிள்ளைகளுக்குச் சீதனமாக கொடுத்திருப்பதாகவும் ஒரு கடையை, ஐம்பது இலட்சம் ரூபா முற்பணத்துடன் ஐம்பதாயிரம் ரூபா மாத வாடகைக்கு கொடுப்பதற்காக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் தன்னிடம் கூறியதாக முதல்வர் ரக்கீப் தெரிவித்த கருத்துகள் தங்களுக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், நாம் முதல்வருடன் தொடர்பு கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினோம். தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என எமது மறுப்பையும் ஆட்சேபனையையும் அவரிடம் தெரிவித்தோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டே, தான் இக்கருத்துக்களை தெரிவித்ததாகவும் இவை தவறானவை என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறி முதல்வர் எம்மிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் என்றும் கல்முனை சந்தை சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன், செயலாளர் ஏ.எல்.கபீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை மேயர் ரக்கீப் அவர்கள், கல்முனைச் சந்தைக் கடைகளை சீதனமாக கொடுக்கும் விடயத்தை கௌரவ ஆளுநரே தெரிவித்ததாக முன்னர் பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையில், வர்த்தக சங்க முக்கியஸ்தர்களிடம் தனக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டே தான் இக்கருத்துக்களை தெரிவித்ததாகப் பின்னர் கூறியுள்ளார்.

இது ஒரு பாரதூரமான விடயம். கௌரவ ஆளுநரின் பெயரை முதலில் இந்த விடயத்துக்குப் பகிரங்கமாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டுதான் இக்கருத்துகளை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு தகவலை ஆளுநர்தான் தன்னிடம் கூறியதாக தெரிவித்து விட்டு பின்னர் அந்த தகவல் தவறானவை என்பதை தற்போது தான் புரிந்து கொண்டேன் எனக் கூறுவது அனைத்தையும் விட மிகத் தவறான விடயம் அல்லவா?

ஆளுருக்கு இவ்வாறானதொரு தகவல் கிடைத்து அதனை மேயர் ரக்கீபிடம் அவர் கூறியிருந்தால் அல்லது ஆளுநர்தான் இவ்வாறான பொய்யான தகவலைக் கூறினார் என்று வைத்துக் கொண்டாலும் அது எவ்வாறு தனக்குக் கிடைத்த தகவலாக (அனோமதயமாக) பின்னர் மாற்றம் பெற முடியும்?

இந்த விடயத்தில் ஒரு குழப்ப நிலை காணப்படுகிறது. சீதன விவகாரத்தை ஆளுநர்தான் கூறினாரா? அல்லது ஆளுநரின் பெயரைப்படுத்தி கல்முனை மேயர் ரக்கீப் கூறினாரா?

இதேவேளை, ஆளுநருக்கு யாராவது ஒரு நபரால் அல்லது நபர்களால் இவ்வாறான தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனையே அவர் என்னிடம் கூறினார். அது பிழை என்பதனை இப்போது தான் தெரிந்து கொண்டேன் என மேயர் ரக்கீப் அவர்கள் இப்போது கூறுவானாரால் இந்த விளக்கத்தை அவர் கட்டாயமாக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரோஹித்த போகல்லாகமவிடமும் தெரிவிக்க வேண்டும்.

தவறின் கல்முனை சந்தையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர் தொடர்பில் பிழையான , மிக மோசமான கருத்து ஆளுநர் மனதில் பதிந்து விடும் அல்லவா? கல்முனை வர்த்தகர்களை இழிவாக கருதும் நிலைமையை ஆளுநரிடம் இல்லாமல் செய்யும் பொறுப்பு கல்முனை முதல்வரிடமே இப்போது உள்ளது அல்லவா?

எனவே, இந்த விடயத்தை கல்முனை மேயர் சட்டத்தரணி ரக்கீப் அவர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று உண்மை நிலைமைகளை விளக்க வேண்டும். இன்றேல், கல்முனை சந்தை வர்த்தகர்கள் மட்டுமல்ல… கடந்த காலத்தில் பதவி வகித்த கல்முனை முதல்வர்களும் ஆளுநரின் பார்வையில் மோசமானவர்களாகவே காட்சியளித்துக் கொண்டிருப்பர்.

இந்த விடயத்தில் கல்முனை மேயர் ரக்கீப் விரைவாகச் செயற்பட்டு ஆளுநரிடம் எமது வர்த்தகர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள களங்கத்தையும், அவர் கொண்டுள்ள நம்பிக்கையீனங்களையும் களைய வேண்டும்.

அவ்வாறு அளுநர் கூறவில்லை. தன்னிடமே சிலர் தவறாக கூறியதாக மேயர் அவர்கள் மறுபக்கமாகக் கூறுவாரானால், ஒரு விடயத்தை ஆராய்ந்து பார்க்காது, கிடைக்கும் தகவல்களை உடன் நம்பி பொறுப்பற்ற முறையில் முதல்வர் ரக்கீப் அவர்கள் கருத்துகளை வெளியிடுபவராகவே கருதப்படுவார். அது அவரது பொறுப்பான பதவிக்குரிய பொறுப்பான தன்மை அல்ல என்பதனையே சுட்டிக் காட்டும்.

Web Design by The Design Lanka