தென்கிழக்குப்பல்கலைக்கழகம் – பொய்கள் புயல்போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்! » Sri Lanka Muslim

தென்கிழக்குப்பல்கலைக்கழகம் – பொய்கள் புயல்போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்!

oluvil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இறுதியாக நியமிக்கப்பட்டு 18.06.2018 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்ட களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் காலத்தில் பல முறைகேடுகளும், நிருவாகச் சீரளிவுகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றது யாவரும் அறிந்த விடயமே. இவற்றில் சிலவற்றைப்பற்றிக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரும் அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஒருவரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவிலும், கையூட்டம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் செய்தி இணையத்தினூடாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சீர்கேடுகளைச் சீரமைக்கத் தகுதிவாய்ந்த அதிகாரியாக இலங்கையிலேயே அனுபவம் மிக்க பேராசிரியர்களில் ஒருவரான பேராசிரியை உமா குமாரசாமி அவர்களை உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் நியமித்த வேளையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட உபவேந்தருக்குச் சார்பான சிறு குழுவினர்களும் அவரது நட்புப் பட்டியலில் உள்ளவர்களும் இனத்துவேசம் பேசித்திரிந்தனர். ஆனால் தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகமே பேராசிரியையின் அனுபவமிக்க புத்திசாலித்தனமான பழிவாங்கும் எண்ணமோ பாரபட்சம் பார்க்கும் தன்மையோ இல்லாத நடுநிலையான செயற்பாடுகளால் மகிழ்வுற்றிருக்கின்றது.

எடுத்துக்காட்டாக, நாஜிம் அவர்கள் உபவேந்தராக இருந்த காலங்களில் மாணவர்கள் கடுமையாக சாடப்பட்டதும், மாதக்கணக்கில் மாணர்கள் போராட்டங்கள் இடம்பெற்றமையும், இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உள்ளாடைகள் இல்லாமல் வருவதாக இவர் BBC இணையச் செய்திக்கு உண்மைக்குப் புறம்பான அருவருப்பான ஒரு செய்தியை ஒரு வருடத்திற்கு முன்னர் வழங்கியிருந்தமையை எவரும் இன்னும் மறக்கவில்லை.

இதன் ஒரு கட்டம்தான் நேற்றுவரை (05.07.2018) 210 நாட்களுக்கும் அதிகமான நாட்கள்வரை நீடித்திருந்த தொழில்நுட்ப பீட மாணவர்களின் போராட்டமாகும்.

நாஜிம் அவர்களின் காலத்தில் மாணவர்களைக் கையாண்ட விதம், குற்றஞ்சுமத்தப்பட்ட விதம், பிழையான குற்றச் சாட்டுதல்கள், அனுபவமற்றவர்களையும் தீவிரப் போக்குடையவர்களையும் பல்கலைக்கழகதத்தின் நல்லிருப்பைப் பற்றிக் கவலைப்படாதவர்களையும் மாணவர்களைக் கையாழுகின்ற பதவிகளில் நியமித்தமையும் இதற்கான காரணமாகக் கூறலாம்.

நேற்றைய தினம், இப்பல்கலைக்கழகத்திற்குத் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட பேராசிரியை உமா குமாரசாமி அவர்கள் இத்தொழில்நுட்ப பீட மாணவர்களைச் சந்தித்துப் பேசிய விதம் இம்மாணவர்களை நெகிழச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் பின்னர் இம்மாணவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாகவும் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் தொடர விரும்புவதாகவும், முன்னர் உயர்பதவியில் இருந்தவர் இவ்வாறு தங்களுடன் பேசவில்லையெனவும் அன்பாக நடக்கவில்லையெனவும் கூறி அங்கிருந்து செல்லும் வேளையில் தாங்கள் பேராசிரியை உமா குமாரசாமி அவர்களிடத்தில் கடவுளைப் பார்ப்பதாகவும் கூறிக் கண்கலங்கிச் சென்றமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இப்பாரிய நல்ல விடயத்தையடுத்து விஷேட மூதவைக் கூட்டமொன்று கூட்டப்பட்டு நடந்த விடயங்களை எடுத்துக் கூறிய பேராசிரியை உமா குமாரசாமி அவர்கள் விரிவுரையாளர்களிலிருந்து உபவேந்தர் வரை அனைவரும் மாணவர்களுடன் அன்பாகப் பேசி அவர்களது பிரச்சினைகளை உரிய முறையில் செவிமடுத்துத் தீர்க்க வேண்டும் எனக்கூறினார். இக்கருத்தை வரவேற்றுப் பேசிய இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிப்பிற்குரிய ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் முன்னாள் உபவேந்தரின் காலத்தில் இதே மூதவைக் கூட்டத்தில் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க தான் அனைத்து மூதவை உறுப்பினர்களையும் அழைத்த வேளையில் முன்னாள் உபவேந்தர் அவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை என்பதையும் நினைவுகூர்ந்தார்.

இந்த நல்ல நிகழ்வைக் குலைப்பதற்காக இப்பீடத்தைச் சேர்ந்த பதவிநீக்கம் செய்யப்பட்ட உபவேந்தரினால் முறைகேடாக நியமிக்கப்பட்ட ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் மீண்டும் மாணவர்கள் மீது பழிசுமத்தி அவர்களது பரீட்சைக்குத் தோற்றும் தகுதியை இல்லாமல் செய்வதன்மூலம் தொடர்ந்தும் பிரச்சினையை வைத்துக் காலத்தைப் போக்கலாம் என்று எடுத்த முனைப்பு இன்று பேராசிரியை அவர்களால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களைக் குழப்பிவிட்டுத் தன்னை நிருவாகஞ் செய்யவிடாமல் ஒரு குழு தன்னைத்தடுப்பதாகப் பொய்கூறித்திரிந்த பதவி நீக்கஞ் செய்யப்பட்ட முன்னாள் உபவேந்தரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்

Uma-Coomaraswamy

Web Design by The Design Lanka