அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு » Sri Lanka Muslim

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

Screenshot_2

Contributors
author image

ஊடகப்பிரிவு

ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018)  உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலத்திலே உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசியக் கணக்காய்வு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமா? இல்லையா? என்றொரு கேள்விக்குறியுடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதிகாரிகள் சிலரும் இது தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், நல்லாட்சிக்கு மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவது வரவேற்கதக்கது.

உண்மையிலே அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பல தவறுகளை செய்திருக்கின்றார்கள், செய்துகொண்டிருக்கின்றார்கள். சில வேளைகளில் தவறு செய்யாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது சுபீட்சம் மிக்க எதிர்காலம் நாட்டுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே கணக்காய்வாளர் நாயகம், மற்றும் அவருடன் சேர்ந்த அவருடன் பணியாற்றும்  அதிகாரிகள் நேர்மையாக தமது பணிகளை முன்னெடுப்பார்கள்  என்ற நம்பிக்கை எனக்குண்டு. மதத்திற்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் கண்ணியமாக இந்தக் கடமைகளை அவர்கள் செய்யவேண்டும்.

நாங்கள் சில அறிக்கைகளை பார்க்கும் போது, உதாரணமாக வில்பத்து சம்பந்தமாக கணக்காய்வாளர் அறிக்கையென்று கூறி, சில தேரர்கள், அந்த அறிக்கையில் ஒரு சிறிய துண்டைப் பிடித்துக்கொண்டு மிக மோசமாக என்னையும், வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு, வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும், சம்பந்தப்படுத்தி ஒரு பெரிய நாடகத்தை தொடர்ச்சியாக அரங்கேற்றுகின்றார்கள்.

எனினும், வனஜீவிராசிகள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அவர் அங்கு பிரதேச நிலைமைகளையும் ஆராய்ந்துவிட்டு ‘வில்பத்து வன பிரதேசத்திற்குள் எந்தவிதமான சட்டவிரோத அத்துமீறல்கள் மற்றும் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை’ என கூறியிருக்கின்றார். இது மகிழ்ச்சி தருகின்றது. இதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த ஆட்சி மாற்றத்திற்காக, ஆட்சி மாற்றத்தின் பங்காளியாக நான் இருந்தேன் என்ற காரணத்திற்காக என்னைப் பழிவாங்கும் நோக்கில்  அபத்தங்களை சுமத்தி, என் மீதும், எனது சமூதாயத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
சில தேரர்களும், வெளிநாட்டிலுள்ள டயஸ்போராக்களும், அவர்களின் முகவர்களும் என்மீதும் என் இனத்தின் மீதும் பழியைசு; சுமத்திவருகின்றனர். கணக்காய்வாளர் பிழையான அல்லது தெளிவில்லாத அறிக்கையை வெளியிட்டமை தொடர்பில் வேதனையடைகிறேன். அறிக்கைகள் வெளியிடப்படும்போது நேர்மைத் தன்மையோடு திணைக்களங்கள் செயற்படவேண்டும்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலைமை இப்போது காணப்படுகிறது. அரச  தொழிலில் ஆர்வம் காட்டுவதற்கு பலர் முண்டியடிக்கின்றனர். வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது கல்வி ரீதியாக நமது நாடு உச்சத்தில் இருக்கிறது. எனினும் எம்மிடத்தில் நம்பிக்கை இல்லை.

ஆட்சியைத் தக்கவைக்க அதிகமான பணத்தை செலவிட்டு, பட்டதாரி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் தொல்லையினால் சில நல்ல அதிகாரிகள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று சில நல்ல அதிகாரிகள் பணிப்பாளர் சபைகளில் அமர்வதற்கு அச்சப்படுகின்றார்கள். அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால் நிர்ப்;பந்திக்கப்படும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஏறி இறங்கும் துர்ப்பாக்கிய நிலை இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும். அவ்வாறான ஒரு நல்ல நிலையை உருவாக்குவதற்கு  இந்தச் சட்டமூலம் உதவும் என நம்புகின்றேன்.

Web Design by The Design Lanka