புதிய ஜனாதிபதி செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம் » Sri Lanka Muslim

புதிய ஜனாதிபதி செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

president office

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

புதிய ஜனாதிபதி செயலாளராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய உதய ஆர். செனவிரத்ன, சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். 37 வருடங்களுக்கும் மேல் அரச சேவையில் பணியாற்றி, பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ள அதிகாரியான அவர், இதற்கு முன்னர் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், முதலீட்டு அபிவிருத்தி, உற்பத்தி திறன் அபிவிருத்தி, சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களின் செயலாளராகவும் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நிதி, திட்டமிடல் அமைச்சின் பிரதி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

பொல்கொல்ல கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட இவர், தனது சேவைக்காலத்தில் பல்வேறு பாரிய திட்டங்களுக்கு தலைமை வகித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியான இவர், அப் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறையில் முதுமானிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி தொடர்பாடல் துறையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவும் உள்ளுராட்சி ஆய்வு தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ துறையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவராவார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-07-06

Web Design by The Design Lanka