முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தமைக்கு நீங்கள் எப்போது மன்னிப்புக் கோருவது? » Sri Lanka Muslim

முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தமைக்கு நீங்கள் எப்போது மன்னிப்புக் கோருவது?

mujee

Contributors
author image

Ahamed Furhan - Kalmunai

பொதுபல சேனாவை கொண்டுவந்தது யார் என்ற உண்மை புரியாமல் முஸ்லிம்கள் மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்து மஹிந்தவை அன்று வீட்டிற்கு அனுப்பியது எவ்வளவு மாபெரிய தவறு என்பதை முஸ்லிம் சமூகம் தற்போது உணர்ந்து நல்லாட்சியை தூக்கி தூர வீச தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறது, என்பது புரியாமல் “கோத்தபாய ராஜபக்ஷ” அவர்கள் தூக்கத்தில் இருந்து விழித்து புலம்புவதாகவும் முஸ்லிம்கள் மத்தியில் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில், நாட்டை ஆட்சி செய்யும் ரணில்+மைத்திரி கூட்டரசாங்கத்தை 2015 ஜனவரி 8ம் திகதி கொண்டு வந்ததோடு தனது சுய நினைவை இழந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று அல்லது இன்றுதான் அவர் தனது வழமையான நிலைக்கு திரும்பியிருக்க வேண்டும்.

ஏனென்றால், எதற்கு எடுத்தாலும் தம்புள்ளை பள்ளியிலும் அளுத்கமை கலவரத்திலும் அக்கறை கொள்ளும் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு அதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போதைய ஆட்சி பீடத்தில் இருக்கும் பிரதமர் ரணில் அவர்களும் அவரது சகாக்களும்தான் தான் என்பது முஜிபுர் றஹ்மானை தவிர மற்ற எல்லோரும் இப்போது தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாவம் அவருக்கு இப்போதுதான் மயக்கம் தெளிந்திருக்கிறது.

கடந்த மஹிந்த ஆட்சியை போலியாக குற்றம் சாட்டும் முஜிபுர் றஹ்மான் அவர்களே! இந்த நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அட்டூளியங்களையும், அதற்கு அனுசரணை வழங்கி “இனவாதிகளை” இன்று வரையிலும் பாதுகாக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு நீங்கள் முஸ்லிம்களை நல்லாட்சியின் கப்பலில் ஏற்றிவிட்டு முஸ்லிம்கள் இனவாதிகளால் தாக்கப்படும் போது நீங்கள் எந்த மனநல காப்பகத்தில் இருந்தீர்கள்?

கடந்த வருடம் இதே போன்றதொரு ரமழானுடைய மாதத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் திட்டமிட்டு இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டும், பள்ளிவாயல்கள் நாளுக்கு நாள் தாக்கப்பட்டபோதும் ஆளும் அரசை கண்டிக்காமல் நீங்கள் அப்போது எங்கே தூங்கிக் கொண்டு இருந்தீர்கள்?

உங்கள் நல்லாட்சியில்தானே ஐயா ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்போம் என்று ஊலையிட்டீர்கள். என்ன நடந்தது என்று மறந்து விட்டீர்களா? அல்லது மூடிமறைக்க முயற்சி செய்கிறீர்களா?

ஞானசார தேரர் நீதிமன்ற கட்டளையை மட்டக்களப்பில் வைத்து கிழித்து வீசியது யாருடைய ஆட்சியில்?

குர்நாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்யச் சென்ற பொலிசார் முன்னிலையில் உங்கள் கட்சி தலைவர், நாட்டின் பிரதமரை “பொண்ணையன்” என்று பகிரங்கமாக சொன்னது யாருடைய ஆட்சியில்? பொலிசார் கைது செய்யாமல் திரும்பிச் சென்றது யாருடைய ஆட்சியில்?

ஞானசார தேரரையும் அவரது சகாக்களையும் பதுங்கு குழியில் பதுக்கி பாதுகாத்துவிட்டு நாடு முழுவதுமாக ஞானசாரவை தேடுகிறோம் என ஒன்றரை மாதம் நாடகமாடியது யாருடைய ஆட்சியில்?

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான ஞானசார தேரருக்கு அவசர பிணை வழங்கி அவருக்கெதிரான வழக்குகளில் இருந்து ஒருமணி நேரத்திற்குள் வெளியில் சுதந்திரமாக நடமாட செய்ய பொலிசாரின் சாட்சியத்தை பலவீனப்படுத்தியது யாருடைய ஆட்சியில்?

அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க முடியாது என “பிரதமர் ரணில்” அவர்கள் ஒருவாரம் பாரமெடுத்து படமெடுத்ததால் கிந்தோட்டை தொடக்கம் அம்பாறையில் பள்ளிவாயலையும் உடைத்து கருத்தடை மாத்திரையை கொத்துரொட்டிக்குள் வைத்து வியாபாரம் செய்வதாக அடாத்தாக புகுந்து அநியாயம் செய்ய இனவாதிகளை தூண்டியது யாருடைய ஆட்சியில்?

போதாது என்று கண்டி, திகனை போன்ற பகுதிகளை திட்டமிட்டு எரியூட்டியதும் முஸ்லிம் இளைஞர்களை கொன்றதும் சமூக வலைத்தளங்கள் முடக்கி முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயக்காரர்களை ஏவிவிட்டு பந்தாடினார்களே! யாருடைய ஆட்சியில் இது நடந்தது? அப்போது நீங்கள் எங்கே ஐயா இருந்தீர்கள்?

கண்டி, திகனையில் எரிந்த நெருப்பை அணைக்கும் முன்னரே ஞானசார தேரரை அழைத்துக் கொண்டு நீங்கள் கொண்டுவந்த “ஜனாதிபதி மைத்திரி” ஜப்பானில் தேனிலவு கொண்டாடினாரே? அதுயாருடைய ஆட்சியில் நடந்தது?

இவைகளுக்கு எப்போது ஐயா நீங்கள் எங்களுக்கு தீர்வு பெற்றுத்தர போகிறீர்கள்? அல்லது நீங்கள் முஸ்லிம்கள் மத்தியில் எப்போது மன்னிப்புக் கோரப் போகிறீர்கள்?

ஈழம் என்றும் வடகிழக்கு என்றும் பிரிந்து கிடந்த நாட்டை மீட்டு ஒரே நாடு, நாம் ஒரு நாட்டின் மக்கள் என்ற கோட்பாட்டை தனது ஆட்சியின் மந்திரமாக்கிக் கொண்ட ராஜபக்ஷக்களையா நீங்கள் நாட்டைப் பிரிப்பவர்கள் என்கிறீர்கள்?

அன்று அவர்கள் நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுத்தந்த நன்றிக் கடனை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆனால் நாட்டு மக்கள் இன்றுவரை மறக்கவில்லை என்பதை நீங்களும் உங்களுடைய நல்லாட்சியும் கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை கண்டும் உணரவில்லையா?

மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக நீங்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஆடிய நாடகத்தை நாங்கள் அறியாமல் இல்லை.. மீண்டும் மீண்டும் புதுக்கதை பேசிக்கொண்டு இருக்காமல், ஞானசார தேரர் இல்லாத நாய்க்கூண்டையாவது முதலில் இந்த ஆட்சியில் உங்களால் கொண்டுவந்து காட்ட முடியுமா?

(பிச்சைக்காரன் புண்னைப்போன்று)
மஹிந்தவையும், அவருடைய சகோதரர்களையும், ஆட்சியையும் குறைபிடித்து சொறிந்து அரசியல் செய்து கொண்டிருக்காமல் இந்த நால்லாட்சியில் நடந்த அட்டூளியங்களுக்கு முதலில் நீங்கள் பொறுப்பு கூறுங்கள்.
இல்லையேல் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதி சம்பவங்களுக்கு தொடர்ந்தும் துணை போவதற்கு முஸ்லிம்கள் மத்தியில் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.

Web Design by The Design Lanka