தமிழ் பேசும் மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன் –இம்ரான் எம்.பி » Sri Lanka Muslim

தமிழ் பேசும் மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன் –இம்ரான் எம்.பி

3K1A6460

Contributors
author image

ஊடகப்பிரிவு

தமிழ் பேசும் மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை காலை கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக பதவியை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் மிக முக்கியமான அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக என்னை நியமித்த பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிக்றேன்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பதவியூடாக தமிழ் பேசும் மக்களின் கல்வியை அபிவிருத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்ச்சரின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளேன். இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளேன்.

கடந்த சில வருடங்களாக வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை எடுத்து நோக்கினால் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாதாரண’தர உயர்தர பரீட்சைகளில் ஒரு பாடமும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிகையும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்த நிலையை போக்க பாடசாலை செயற்பாடுகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் கணிப்பீட்டுமுறை காணப்படுகிறது. இது பெரும்பாலான பாடசாலைகளில் முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை. இதை சரியாக செய்தாலே சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கலாம்.

கடந்த காலங்களில் நான் மாகாணசபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக திருகோணமலை மாவட்ட கல்வி அபிவிருத்திக்கு பாரிய முயற்சிகளை முன்னெடுத்தேன். எனினும் சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையால் என்னால் இன்னமும் பல பிரட்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாதுள்ளது. கிழக்குமாகாணத்தை பொறுத்தவரையில் முறையற்ற இடமாற்றங்களும் இணைப்புக்களும் மேற்கொள்ளப்படுவதால் பல பாடசாலைகளில் குறிப்பாக திருகோணமலை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. சுய இலாபங்களுக்காக குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு அதிகமான வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஆனால் முறையான வகுப்பறை கட்டிடம் இல்லாத பல பாடசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அத்துடன் பல பதவிகளுக்கு தகுதியற்றவர்களுக்கு அரசியல் சிபாரிசில் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறாக நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் பிரட்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அதிகாரிகளை என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.அவ்வாறு பணியாற்ற முடியாதவர்கள் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கட்டும். தமிழ் பேசும் மக்களின் கல்வி நிலையை விருத்தி செய்ய அமைச்சினால் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களை சுதந்திரமாக முன்னெடுத்துச்செல்ல அதிகாரிகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்படும். ஆனாலும் இதை பயன்படுத்தி வியாபாரம் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது.

ஆகவே அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பை பெற்று இன, மத, பிரதேச, வேறுபாடுகளை தாண்டி அனைவருக்கும் சமனான கல்வி எனும் கோட்பாட்டில் எமது அமைச்சால் ஒதுக்கப்படும் நிதிகள் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு.

Web Design by The Design Lanka