ஹிட்லர் வரும்வரையா காத்திருக்கிறீர்கள்? » Sri Lanka Muslim

ஹிட்லர் வரும்வரையா காத்திருக்கிறீர்கள்?

gotta

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
தமிழ்: முஹம்மத்


தேர்ந்ந்தெடுக்கப்படும் சர்வதிகாரி ஒருவரை ஏற்க இலங்கை தயாரா? இதுதான் இலங்கையின் தற்போதைய அரசியல் உரையாடலில் நுழைவதற்கான முதன்மையான கேள்வி. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கோடாபய ராஜபக்‌ஷவின் முன்னேற்பாடுகள் இன்னும் சில மாதங்களுக்கான பேசுபொருளாக இருக்கப்போகின்றன. கோடாபயவினால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒருவர் எதிர்த்தரப்பினரை தாக்குவதற்குப் பயன்படுத்தும் பிரயோகமொன்றினூடாகவே தனது தரப்பிற்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கையின் மிகப்பாரம்பரிய பிக்கு சங்கமொன்றைச் சார்ந்த பெளத்த பிக்குவின் சில வார்த்தைகள் இவை: “உண்மையான ஒரு ஹிட்லராக வந்து, தனது விமர்சனங்களை கோடாபய ராஜபக்‌ஷ நிறூபித்துக்காட்ட வேண்டும்”.

சில நாட்களுக்கு முன் கோடாபயவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சந்திப்பிலேயே கண்டி அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவர் சங்கைக்குரிய எண்டாருவ உபாலி தேரருடைய வழமைக்கு மாற்றமான மிக சீரியசான வேண்டுகோல் கோடாபயவை நோக்கி முன்வைக்கப்பட்டது. பிக்குவின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தோரில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் லிபரல் ஜனநாயக போக்கு கொண்டவரும் அண்மையில் உருவாக்கப்பட்ட சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரமற்ற தலைவராக வர இருக்கும் ஜீ. எல். பீரிஸ் போன்றோரும் இருந்தனர். இக்கட்சி ராஜபக்‌ஷ குடும்பத்தின் இரு தலைமுறை சார்ந்த உறுப்பினர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதொரு அரசியல் சாதனம் எனலாம்.

வியத் மக ( Viyath Maga )

கோடாபய ராஜபக்‌ஷ தனது ஜனாதிபதி பிரச்சாரத்தை சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வெளியே,வியத் மக எனும் கட்சி சாரா அமைப்பினூடாக முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார். முன்னால் இராணுவ அதிகாரிகள், சில புதிய -தயான் ஜயதிலகவின் வார்த்தையில் கூறுவதாயின்- வியாபார ஜாம்பவான்கள் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும், தனி இலக்குகள் கொண்டியங்கும் தொழிலதிபர்கள், படித்தவர்களை உள்ளடக்கிய ஓர் தளர்வான அமைப்பாகவே அது இருக்கிறது. கோடாபய ராஜபக்‌ஷவும் அவரது வியத் மகயும் தமது அரசியல் வேலைத்திட்டம் பற்றிய சில அடிப்படையான சமிக்ஞைகளை தந்திருக்கின்றனர். அவற்றுள் இரண்டை பின்வருமாறு கூறலாம்:

1) கோடாபய ராஜபக்‌ஷவிடைய அரசியல் வியூகம் ஆரம்ப கட்டமாக தனது பிரச்சாரத்தை ஏற்கனவே ஆழமாக வேரூன்றியிருக்கும் அரசியல் கட்சியை விட்டும் வெளியில் வளர்த்தெடுப்பதாகவே உள்ளது. அத்துடன் தன்னை பாரம்பரிய சிந்தனை முகாம் சாராதவராகவும், அரசியல் மைய நீரோட்டத்திற்கு அப்பாற்பட்ட, கட்சி சாரா தலைவராகவும் தன்னை காட்சிப்படுத்த முனைகிறார். தன்னை ஒரு சக்திமிக்க ஜனாதிபதி வேட்பாளராக நிலைநிறுத்திக் கொண்டதன் பின், தனது சகோதரன் தலைமை தாங்கும் SLPP ஐயோ ஜனாதிபதி சிரிசேன தலைமை தாங்கும் SLFP ஐயோ தனது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்க அழுத்தம் கொடுக்க முடியுமாக இருக்கலாம். இவ்வகையான வியூகத்தில், கோடாபய தனது இரண்டாம் பிரஜாவுரிமை கொண்ட நாட்டின் ஜனாதிபதி ட்ரம்பை பின்பற்றுவதுபோல் உள்ளது.

2) வியத் மக வுடைய மையப்புள்ளியில் இருக்கும் நேரடி மூன்று சமூக குழுக்கள் மற்றும் அவர்களது கருத்தியல் நோக்குகள் என்பன கோடாபய ராஜபக்‌ஷ உருவாக்க விரும்பும் ஆட்சியமைப்பு ஓர் “இல்லிபரல் மெரிடோக்ரசி” ஆக இருக்கலாம் என்ற துப்பை தருகிறது. ஜனநாயகம் மீது தான் பெரும் ஈர்ப்புகொண்டவனல்ல என்பதை பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்வதற்கு கோடாபய பின்வாங்குபவரல்ல. அவரது பிரச்சாரத்தின் சிறப்பம்சம்,ஜனநாயகத்தன்மை குறைந்ததொரு ஆட்சி தேர்வை இலங்கை வாக்காளர்கள் முன் வெளிப்படையாகவே முன்வைக்க அவர் தயாராகவே உள்ளார் என்பதுதான்.

வியத் மக உடைய நோக்கு

கோடாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்க ஒன்றுதிரண்டிருக்கும் முன்னால் இராணுவ அதிகாரிகள், புதிய ஆட்சியாளர் பற்றிய ஓர் பிம்பத்தை வியத் மக வேலைத்திட்டத்திற்கு கொடுத்திருக்கின்றனர். இலகுவாக நிர்வகிக்கப்படும் ஒரு சமூகமாக இலங்கையை மாற்றியமைக்கும் ஓர் ஆட்சியாளராகவும், நாடு- தேசம்- மதம் ஆகியவற்றை பாதுகாக்கும் சிங்கள-பெளத்த ஆட்சியாளராகவும் அவரை காட்சிப்படுத்துகின்றனர். உபாலி தேரர் தனது அரசியல் கனவை விளக்கும் போது கூறிய சர்வாதிகாரியின் தன்மை இதுதான்.

அதேநேரம், இராணுவ அதிகாரிகள் குழுவுடைய அரசியல் உணர்வு LTTE க்கு எதிராக நேரடியாக போராட்டத்தில் பங்குபற்றியதனூடாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தீவிர சிங்கள-பெளத்த தேசியவாதம், இராணுவவாதம் இரண்டினதும் தொகுப்பாக அது இருக்கிறது. கருத்தியல் ரீதியாக அவர்கள் மனித உரிமைகள், சிறுபான்மை உரிமைகள்,சட்டயாப்பை மையமாக கொண்ட ஆட்சி,அதிகாரப்பரவலாக்கம், அரசாங்கத்தின் அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் நிறுவனங்கள் போன்ற நவீன ஜனநாயகத்தின் கூறுகளை அவர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்பவர்களல்லர். அதிகாரம் குவிக்கப்பட்ட அரசு, ஜனநாயக விழுமியங்களாலும் நடைமுறைகளாலும் கட்டுப்படுத்தப்படாத பலமிக்க தலைவர், பொறுப்புக்கூறல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசாங்கம், சிவில் ஆட்சியை கட்டுப்படுத்தும் இராணுவம் போன்றனவே அவர்கள் தற்போதுவரை முன்வைத்திருக்கும் அரசியல் நிலைமாற்றத்துக்கான நோக்கின் கூறுகளாகும்.

இக்குழுவின் எதிர்பார்ப்புகள் சமூகத்துடனும் அரசுடனும் நிலபிரபுத்துவ தொடர்பை இன்னும் பின்பற்றிவரும் நகரை மையமாகக் கொண்ட, நிலசொத்து கொண்ட விகாரைகளின் தேரர்களால் பகிரப்பட்டிருக்கின்றன. இராணுவ பின்புலத்துடன் கூடிய சிங்கள அரசியல் தலைவரொருவரின் வருகைக்கான விருப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தேரர்கள் பட்டியலில் கண்டி அஸ்கிரிய விகாரையைச் சேர்ந்த உபாலி தேரரும் ஒருவர். இதனையே உபாலி தேரர் “இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்” என்ற வார்த்தைகளினூடாக முன்வைக்கிறார்.

வியாபார ஜாம்பவான்கள்

கோடாபய ராஜபக்ச‌வுடைய பிரச்சாரத்தில் வியாபார ஜாம்பவான்களது ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் முக்கியமானதும் ஆர்வத்தை தூண்டுவதுமானதொரு புதிய போக்கு எனலாம். அவர்கள் மிகப் பெரும் தொழிலதிபர்கள். சர்வதேச தொழிலதிபர்களின் போக்கை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அவர்களுள் சிலர் மீடியா, விளம்பரம், தொலைத்தொடர்பு, நிதி சேவைகளுடன் இறுக்கமான பிணைப்பு கொண்டவர்கள். அரசியலில் நேரடி முதலீடு செய்தல்,வணிக வியாபாரத்தில் முக்கிய பாத்திரம் வகித்தல் ஆகியன இவர்களது புதிய போக்குகளாகும். இவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது முதலீடு செய்வதற்கும் இலாபமீட்டுவதற்குமான ஒரு இடம் என்பதுடன் சொத்து உருவாக்கல் மூலம் அரசியல்வாதிகளையும் உத்தியோகத்தர்களையும் அரசாங்க முடிவுகளையும், ஏன் கொள்கைவகுப்பு சட்டகத்தையும் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இவர்களால் முடியுமாக இருக்கிறது. உயர்மட்ட அரசியல் தலைமைகளின் தேர்தல்களில் நேரடி பங்கை தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

இத்தொழிலதிபர்கள் தம்மை நேரடி அரசாங்க பங்குதாரர்களாக ஆக்க முனைகின்றனர். தனி அரசியல்வாதிகளை பிடித்து அவர்களுள் ஜனாதிபதி ஆசைகளை ஏற்படுத்தி விடுவது இவர்களது திறமைகளில் மிக முக்கியமானது. தூர இலக்குகளுடன் இயங்கும் இவ்வியாபார குழுமத்தின் இரு வித்தியாசமான மாதிரிகளை அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கில்லி மகாராஜா ஆகிய இருவரும் வகிக்கின்றனர்.

அரசியல் போக்கில் இப்புதிய தொழிலதிபர் தோற்றப்பாடு அவர்களது பாரம்பரிய போக்கிலிருந்து வித்தியாசப்பட்டே அமைந்திருக்கிறது. இவர்கள் வித்தியாசப்படும் மிக முக்கிய புள்ளி அதன் அங்கத்தவர்கள் முதலாலித்துவ வர்க்கம் என்ற வகையில் -உலகமயமாக்கலுக்கு நன்றி- அரசியல் வர்க்கத்திலிருந்து சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலையில் இருப்பதாகும். இக்குழு தனது இலாப நிகழ்ச்சிநிரலில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதம வேட்பாளர்களை தேர்வுசெய்தல் அவர்களுக்கு அனுசரணை வழங்கள், ஊக்குவித்தல் போன்றவற்றையும் இணைத்திருக்கின்றனர். இதன் விளைவாக, மும்பையில் தலைமை காரியாளயம் அமைந்திருக்கும் இந்தியாவின் பெரும் வியாபார உயர்வர்க்கத்தின் ஒரு சிறு பிரதியாக உருவாகியிருக்கின்றனர்.

வியத் மகயுடன் தொடர்புபட்டிருக்கும் இப்புதிய “அரசியல் தொழிலதிபர்கள்” தமது பெரும்பாலான சொத்தை மகிந்த ராஜபக்ச‌ ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கியிருக்கின்றனர் என்பதை அவ்வப்போது ஒளிபரப்பப்பட்ட மீடியா அறிக்கைகள், கொழும்பை மையமாக வைத்து சுழன்றுகொண்டிருந்த கதைகள்,வதந்திகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக அவர்கள், தெளிவான காரணங்களால், 2015தேர்தலில் ராஜபக்ச‌வுடைய பிரச்சாரத்தில் ஊக்குவிப்பாளர்களாக‌ இருந்ததுடன் அவரை மீண்டும் கொண்டும் வருவதில் மும்முரமாகவும் ஈடுபட்டனர். இவை பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை பெற்றுக் கொள்வதற்கான மூலதன முதலீடுகளாகவே உள்ளன.

ராஜபக்ச‌வுடைய அரசியல் வேலைத்திட்டத்தில் மிகப்பெரியளவில் முதலீடு செய்ததோடு, புதிய‌ சிரிசேன-விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் தமது அரசியல்-தொழில்சார் நடவடிக்கைகளுக்கு தடைகளை உருவாக்கி வருவதையும் அறிந்துகொண்டனர். FCID அவற்றுள் ஒன்றே. கொழும்பின் முதலாளித்துவ வர்க்கத்தின் நம்பிக்கையை தற்போதைய அரசாங்கம்,ரணில் விக்ரமசிங்க அவ்வர்க்கத்தின் மிக முக்கிய குரலாக இருப்பினும், பெறாததன் முக்கிய கராணங்களுள் ஒன்றாக அவ்வர்க்கத்தின் மூலதன குவிப்பின் நிலையும் அதன் நிகழ்ச்சிநிரலும் முழுமையாகவே மாறியிருக்கிறது என்பதை அடையாளப்படுத்தலாம். அவர்கள் புதியதொரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவர்கள் அவரை கோடா என்றழைக்கின்றனர்.

இலக்குகள் கொண்ட துறைசார் நிபுணர்கள்

நகரை மையமாக வைத்து புதிதாக உருவாகியிருக்கும் உயர் வர்க்க துறைசார் நிபுணர்களும் தமக்கான பிரத்யேகமான அரசியல் அபிலாஷைகளை வளர்த்தெடுத்திருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தகவல் தொழிநுற்பம், வணிகம், மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம், மீடியா முகாமை, பாதுகாப்பு போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள். நான்கு தசாப்தகால பொருளாதார தாராளப்போக்கு இப்பிரிவினரை வசதிபடைத்த, சொகுசு வாழ்க்கைக்கு மாற்றியிருக்கிறது.

இப்பிரிவினரது உலகக் கண்ணோட்டத்தின் முக்கிய பண்பொன்றை கோடாபய ராஜபக்‌ஷ அடிக்கடி உச்சரித்துவருகிறார்: இலங்கையின் பிரச்சினை கொள்கை பற்றாக்குறை என்பதல்ல. மாற்றமாக, ஒழுக்கம், தொழில் பண்பாடு, திறன் போன்றவற்றிலுள்ள குறைபாட்டுடன் கற்புலனாகும் முடிவுகளை அடைந்துகொள்ளும் நோக்கில் கொள்கைகளை அமுல்படுத்தும் வலிமையானதொரு தலைமைத்துவம் இல்லாமையுமே பிரச்சினையாகும். இலங்கையின் வளர்ச்சிக்கான முன்மாதிரி நாடாக சீனாவை இவர்கள் கருதுகின்றனர்.

நவீன உயர்வர்க்க துறைசார்நிபுணர்கள் கொண்டிருக்கும் பெருகம்பனி சிந்தனையானது ஜனநாயகம் ஏற்றுக் கொள்ளும் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், எதிர்கூட்டம்கூடல், அடிக்கடி நடாத்தப்படும் தேர்தல், அரசியல் ஸ்தீரமின்மை போன்றவற்றை இலங்கையின் உடனடி அபிவிருத்திக்கான தடைகளாக கருதுகின்றது. துறைசார் நிபுணர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தங்கியிருக்கும் வலுவானதொரு தலைவரால் நடாத்தப்படும் அரசாங்கமே அவர்களது அரசியல் மாதிரி. தகுதிபடைத்தவர்களது ஆட்சி எனும் கருத்துக்கு மிகவும் நெருக்கமானதாக அவர்களது நோக்கு இருக்கிறது.

கோடாபய வேலைத்திட்டம்

கோடாபய ராஜபக்ச‌யின் முதன்மையான அமைப்பான வியத் மக கொண்டிருக்கும் சமூக மற்றும் சிந்தனை ரீதியான‌ கலவையை ஹிட்லரிய வேலைத்திட்டம் எனவோ, இராணுவ சர்வதிகாரமொன்றை தேடும் முயற்சி என்றோ கூறி இலகுவில் கடந்துவிட‌ முடியாது. கோடாபய வேலைத்திட்டத்தை மிக சீரியசாக புரிந்துகொள்ள வேண்டுமாயின் உபாலி தேரர் போன்ற அவரால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களது ஹிட்லரிய கனவுகளிலிருந்து அதனை பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

பாசிசம் அல்ல கோடாபய ராஜபக்ச‌ முன்வைத்திருக்கும் அச்சுறுத்தல். மாறாக இன்றிருக்கும் பலவீனமான ஜனநாயக ஆட்சிக்கான ஓர் பிரதியீடாக மக்கள் ஆதரவுடன் கூடிய வலுவான எதேச்சாதிகார ஆட்சி ஒன்றையே முன்வைத்திருக்கிறார். இதனைத்தான் தடுக்க வேண்டியுள்ளது. இதனையே இலங்கையிலிருக்கும் ஜனநாயக சார்பு அணிகள் உரையாடவும், விவாதிக்கவும், மூலோபாயங்களை அமைக்கவும் வேண்டிய பகுதி என அடையாளப்படுத்தலாம்.

முன்னால் இராணுவ அதிகாரி ஒருவரை அதிகாரத்தில் அமர்த்தும் நோக்கில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபடுவது சில அரசியல் காரணங்களுக்காக கவலை தருவதாகவும் பயமூட்டுவதாகவும் உள்ளது. ஆரம்பமாக, முன்னால் இராணுவ அணி சமூக மற்றும் அரசியல் தளத்தில் மையப்புள்ளி நோக்கி மிக வேகமாக வளர்ந்து வரும் அணியாக உள்ளது. அத்துடன் அடுத்து அமைய இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் நோக்குக்கு பிதியீடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வருவதுடன் இலங்கை அரசின் இயல்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இவர்களது செல்வாக்குக்குள்ளாகும் அரசாங்கம் லிபரல் போக்கை கையாளும் நிறுவனங்கள், ஜனநாயக நடைமுறைகள், வர்த்தக அமைப்புகள், மாணவர் குழுக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுபான்மை இனங்கள், சிவில் சமூகம் போன்றவற்றுடனான தொடர்பை இயன்றளவு தவிர்ந்ததாகவே உருவாக்கப்படும்.
அடுத்தது, அவர்களது செல்வாக்கின் கீழ், தற்போதிருக்கும் சிவில்-இராணுவ சமநிலையானது பெரும் மாற்றங்களுக்குட்பட்டு பாதுகாப்பு ஸ்தீரப்படுத்தல் நோக்கி நகரும் எனலாம். நீதித்துறை உட்பட அனைத்து சிவில் அரச நிறுவனங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எனவும் கூறலாம். பகிஸ்தானது மாதிரிக்கு மிக நெருங்கியதாக இருக்கலாம்.

மூன்றாவது, வியத் மகயினுள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் அணிகள் மகிந்த ராஜபக்ச‌ தோல்வியடைந்த விடயத்தை செய்ய வேண்டிய தேவை உள்ள‌வைக‌ளாகவும் அத‌ற்கான திறன்களை கொண்டவைக‌ளாகவும் உள்ளன. அதுதான் இலங்கை அரசாங்கத்தை வலுவான எதேச்சாதிகார அரசாக நிலைமாற்றல் என்பது. அவ்வரசாங்கம் மூன்று சமூக குழுக்களின் – இராணுவம், புதிய வியாபார வர்க்கம், துறைசார் நிபுணர்கள் கொண்ட உயர்வர்க்கம்- வலுவான‌ கூட்டு ஒத்துழைப்புடன் இயங்கக் கூடியதாக இருக்கும்.

வலுவான ஆட்சியாளர்

உபாலி தேரர் ஹிட்லருடன் ஒப்புவமை செய்து மெதுமெதுவாக உருவாக்கும் “ஓர் சர்வதிகார ஆட்சியாளர்” என்ற‌ கருத்தாக்கம் தற்போதைய இலங்கை சூழலில் எந்தளவு தூரம் ஆதரவைப் பெறும் என்பது முக்கியமான கேள்வி. நம்பகரமான மக்கள் கணிப்பீடு எதுவும் தற்போது இல்லாதிருப்பது த‌ற்போதைய அரசாங்கத்துக்கு பகரமாக அவர்கள் கொண்டுவர விரும்பும் ஆட்சியின் இயல்பை துல்லியமாக அடையாளப்படுத்துவது மிகவும் கஷ்டமானது.
உபாலி தேரருடைய விருப்பம், அரசாங்கம் அரசியலமைப்பின் கட்டுப்பாடு, பாராளுமன்ற ஜனநாயகத்திலுள்ள செயல்படுத்தும் தாமதங்கள் போன்ற கட்டுப்பாடுகளை தாண்டி நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கவல்ல எதேச்சதிகாரம் பெற்ற அரசாங்கமாக நிலைமாற்றுவதாகவே உள்ளது. இது ஹிட்லரிய பாசிச அரசாட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில் உபாலி தேரருடைய ஒப்பீடு பொறுத்தமானதாக இல்லை என்றே கூறவேண்டும். மாற்றமாக, இது இலங்கையில் தற்போது சிங்கள-பெளத்த உயர்வர்க்கம் மற்றும் சாதாரன பிரஜை எனும் இரு சமூக மட்டத்தில் வ‌ளர்ந்துவரும் ஓர் அரசியல் எதிர்பார்ப்பு என்பதே பொறுத்தம்.

இன முரண்பாடு உக்கிரமடைந்ததிலிருந்து சிங்கள-பெளத்த உயர்வர்க்கத்தின் சில குழுக்களிலிருந்து அடிக்கடி வெளிவரும் ஓர் ஆரவாரம்தான் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் சர்வதேச கருத்து ஆகியவற்றுக்கு கட்டுப்படாது சிறுபான்மையினரால் உருவாகும் சவால்களை எதிர்கொண்டு சிங்கள-பெளத்த நலனை பாதுகாக்கக் கூடிய ஓர் உண்மையான சிங்கள-பெளத்த தலைவர் தோற்றம் பெற வேண்டும் என்பது. மகிந்த ராஜபக்ச‌ தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சிங்கள-பெளத்த உயர்வர்க்கத்தின் இவ் இனவாத-அரசியல் கனவை வளர்த்தெடுத்தார் என்பதுடன் 2015 ஜனவரியின் பின்னரும் அதனை தொடர்ந்து வலியுருத்தி வருகிறார். 2015க்கு முன் ஜாதிக ஹெல உருமயவும் இக்கனவுடன்தான் களத்தில் இயங்கின. டியசேன இளவரசருடைய வருகையை எதிர்பார்த்திருக்கும், உயர்வர்க்க பின்புலமும் நகரை மையமாகக் கொண்டவர்களுமான சிங்கள-பெளத்தர்களுடைய பெருமதிப்பையும் ஆதரவையும் கூட அதனால் பெற்றுக் கொள்ளமுடியுமாக இருந்தது.

அரசியல் தேர்வுகள்
எமது தனிப்பட்ட சார்புநிலையோ தர்க்க ரீதியான முற்படுத்தல்களோ இன்றி அரசியல் தேர்வுகளை புரிந்துகொள்ள ஒழுங்குமுறைப்படி மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பீட்டு தகவல்கள் எமக்கு பெரிதும் உதவுகின்றன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இரு கருத்து கணிப்பீடுகள் (2004-2005, 2014-2015) பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு பகரமான எதேச்சதிகார கனவுக்கான மக்கள் ஆதரவின் அளவை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிற‌து. தெற்காசிய மற்றும் சர்வதேச அளவில் ஜனநாயகத்தின் போக்கு பற்றிய ஆய்வின் ஒரு பகுதியே இது. ஜனநாயகத்துக்கு பகரமான ஜனநாயகத்தன்மையற்ற, சிவில் சமூகத்தை மையப்படுத்தாத ஒழுங்குகளை இலங்கையர்கள் மிகக் குறைந்தளவிலேயே ஆதரவளித்துள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது.

2004-2005 இல் நடாத்தப்பட்ட கணிப்பீட்டு தரவுகள் இலங்கையர்களது அரசியல் தேர்வுகள் பின்வருமாறு விகிதாசாரத்தில் அமைந்திருக்கின்றன:

அரசியல்தேர்வுவிகிதாசாரத்தில்:
(1) மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஆட்சிசெய்தல்
98 (உடன்படுகிறேன்),
02 (உடன்பாடில்லை)

(2) எமது நாட்டுக்கு ஜனநாயகத்தின் பொறுத்தப்பாடு
92 ( உடன்படுகிறேன்),
08 (உடன்பாடில்லை)

(3) ஜனநாயகத்திலுள்ள திருப்தி
63 ( உடன்படுகிறேன்),
37 (உடன்பாடில்லை)

(4) இராணுவ ஆட்சி விரும்பத்தக்கது
27 (உடன்படுகிறேன்),
73 (உடன்பாடில்லை)

(5) முடியாட்சி விரும்பத்தக்கது
21 ( உடன்படுகிறேன்),
67 (உடன்பாடில்லை)

(6) வலுவான தலைவர் ஆட்சி செய்வது விரும்பத்தக்கது
62 (உடன்படுகிறேன்),
24 (உடன்பாடில்லை)

(7) துறைசார் நிபுணர்களது ஆட்சி விருபத்தக்கது 61 (உடன்படுகிறேன்),
17 (உடன்பாடில்லை)

(8) மத தலைவர்கள் ஆட்சி செய்வது விரும்பத்தக்கது
20 (உடன்படுகிறேன்),
57 (உடன்பாடில்லை)
(மூலம்: State of Democracy in South Asia, A Report, 2008, New Delhi: Oxford University Press)

2013-14 கணிப்பீடு நடாத்தப்பட்ட போது இலங்கையின் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தது. அப்போது கூட அரசியல் தேர்வு பற்றிய இலங்கையர்களது முடிவுகள் அதிர்ச்சியூட்டும் அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதனை இவ்வாறு கூறலாம்:

அரசாங்க முறைமை மற்றும் அரசியல் தலைமைக்கு ஆதரவு வழங்கல் (விகிதாசார ரீதியாக)

வலுவான தலைவர் ம்கொண்ட அரசாங்கம் 31
இராணுவ ஆட்சி 14
துறைசார் நிபுணர்களது ஆட்சி 43
மதத்தலைவர்களது ஆட்சி 37
மக்கள் பிர‌திநிதிகளது ஆட்சி 97
(மூலம்: State of Democracy in South Asia, Report 2, 2017, Bangalore: Jain University Press)

மிகவும் ஆரவத்தையூட்டும் தகவல் என்னவென்றால், இராணுவ ஆட்சி மற்றும் துறைசார் நிபுணர்களது ஆட்சி ஆகிய இருமுறைமைகளும் 2013 இல் மிகவும் குறைந்த ஆதரவையே பெற்றிருக்கின்றன. மத தலைவர்களது ஆட்சி கணிசமான அளவு ஆதரவை பெற்றிருக்கும் அதேநேரம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளது ஆட்சி 97% எனும் உயர்ந்த ஆதரவை பெற்றிருக்கிறது.
உண்மையில் இத்தகவல்கள் விதிவிலக்கான சிவில் யுத்தம், வன்முறை நிறைந்திருந்த, ஜனாநாயக பொறிமுறை ஓர் நெருக்கடியில் இருந்த‌ காலகட்டத்தில் இலங்கை வாக்காளர்களது அரசியல் தேர்வுகள் பற்றிய ஒட்டுமொத்த பார்வையொன்றை தருகிறது. பால்நிலை, இனம், வர்க்கவேறுபாடு என அனைத்தையும் கடந்து இலங்கையர்கள் பொதுவாக ஜனநாயக ஒழுங்கையே அதன் எல்லை, குறைபாடுகள், பின்னடைவு, ஏமாற்றம் போன்றவற்றை ஏற்ற நிலையில் மேலாகக் கருதியிருக்கின்றனர்.

இன்றைய இலங்கை அரசியல் விவாதத்துடன் தொடர்புபடும் சில தரவுகளை கீழே தருகிறோம்:
2004-05 இல் இராணுவ ஆட்சிக்கு இருந்த 27% ஆதரவு 2013-14 இல் 14% என பெரும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. மத தலைவர்களது ஆட்சிக்கு 2004-05 இல் வெறும் 20% ஆக இருந்த ஆதரவு 2013-14 இல் 37% ஆக அதிகரித்திருக்கிறது. வலுவான தலைவர் ஆட்சி 2004-05 இல் 62% ஆதரவைப் பெற்றிருப்பினும் 2013-14 இல் மிகப்பெரும் வீழ்ச்சியடைந்து 31% க்கு வந்தடைந்திருக்கிறது. ஜனநாயக அரசாங்க முறைமை 2004-05 மற்றும் 2013-14 இல் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுள்ளது. இது, இலங்கையின் ஜனநாயகம் மிகப்பெரும் நெருக்கடியிலும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பதிலான தெளிவான பிரதியீடுகள் எதுவும் இல்லாத கட்டத்திலேயாகும். இத்தகவல்களின் முடிவுகள் 2015 ம் ஆண்டு தேர்தல் முடிவுகளினூடாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டன.

தற்போது என்ன?

மேலுள்ள கணிப்பீட்டு முடிவுகளை இன்றைய அரசியல் விவாதத்துடன் தொடர்புபடுத்தும் போது தோன்று கேள்வி இதுதான்: இலங்கை வாக்காளர்கள் பலவீனமுற்றிருக்கும் ஜனநாயக அரசாங்கத்துக்குப் பதிலாக பகிரங்கமான எதேச்சதிகார அரசாங்கமொன்றை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனரா? இன்னொரு வார்த்தையில் கூறுவதாயின், 2013-14 களில் இலங்கை வாக்காளர்களது அரசியல் முதன்மைப்படுத்தல் ஐந்தாறு வருடங்களில் அதாவது 2019-20 களில் மிகப் பெரும் மாற்றத்தை அடைந்திருக்கலாமா? சரியான கருத்துகணிப்பீட்டு தகவல்கள் இல்லாதபோது, நாம் அவதானங்கள், ஊகங்கள் மீதே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. ஊகங்களை எடுக்கும் போது பின்வரும் மூன்று அடிப்படை பின்னணி காரணிகளையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது:

1- சிரிசேன- விக்ரமசிங்க நிர்வாகம் பலவீனமான ஜனநாயகம் எனும் தரத்திலாலான, திருப்திகரமற்ற ஓர் நிலையை பதிவு செய்திருக்கிறது.

2- தற்போதைய அரசாங்கத்தின் பலவீனமான ஜனநாயக நிலை தாராள மற்றும் ஜனநாயக போக்கு குறைந்த ஓர் ஆட்சியை பிரதியீடாக ஏற்கமுடியுமான, கவர்ச்சிமிகு ஓர் தேர்வாக ஆக்கியிருக்கிறது.

3- அண்மைய வரலாற்றில் முதன்முறையாக இலங்கை வாக்காளர்கள் முன் ஜனநாயக தன்மை குறைந்த ஆட்சிமுறைமை பிரதியீடாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, அம்முறைமை தனது எதேச்சதிகார வேலைத்திட்டத்தை மிக வெளிப்படையாக ஓர் அரசாங்க தேர்வாக முன்வைத்திருக்கிறது.

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க முட்படும் அணிகள் தம்முள் திருப்தியடைந்து கொள்ள முடியாது. UNP-SLFP கூட்டாட்சியின் மிகப்பெரும் தோல்வி, பொதுமக்கள் ஜனநாயக அரசின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை பலவீனமாக்கியது எனலாம். அவ்விரு கட்சியின் தலைவர்கள் இரண்டாம் தடவை அப்பதவிகளுக்கு தகுதிபெறுகிறார்களா என்பதில் அவர்களது கட்சி ஆதரவாளர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பலவீனத்தை வியத் மகயும், SLPP யும் மிகக் கச்சிதமாகவே பயன்படுத்தி வருகின்றன.

இறுதியாக, இதுவரை நிலவிய தேர்தலுக்கு முன்னான மிக மந்தமாக நகரும் விவாதங்களில் ஒரேயொரு வார்த்தையை அறிமுகப்படுத்தியதன் மூலம் அஸ்கிரிய தேரர் மீட்டவோ, சரிப்படுத்தவோ முடியாத பாதிப்பை கோடாபய ராஜபக்‌ஷவுடைய “வலுவான ஆட்சியாளர்” எனும் கருத்தாக்கம் மீது ஏற்படுத்தியிருக்கிறார். அவரது எதிரிகள் கூட இதனை கற்பனை செய்திருக்கவில்லை. தன் மீது பதிக்கப்பட்ட “ஹிட்லர்” எனும் பயமூட்டும் பட்டப்பெயரை களைவது ராஜபக்‌ஷவுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்காது. இதுதான் அரசியல்களின் பேச்சு வழக்கு.

விடிவெள்ளி, Colombo Telegraph

Web Design by The Design Lanka