புதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் - ரவூப் ஹக்கீம் » Sri Lanka Muslim

புதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் – ரவூப் ஹக்கீம்

Parliament 01

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

புதிய முறைமையை கையாண்டால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  மாகாணசபை தேர்தல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பல முறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு தேர்தல் முறையை தெரிவுசெய்ய முடியாதுள்ளது.

எவ்வாறான தேர்தல் முறைமை அவசியம் என்பது இன்றுவரை பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையை பரீசிலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்து மீண்டுமொரு அறிக்கையை பெற்று புதிய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன.

குறித்த நிலைப்பாட்டில் இருந்தால் உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும். ஆகவே பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன்மூலம் தான் நியாயம் கிடைக்குமென நம்புகின்றோம் என்றார்.

Virakesari (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

Parliament 01

Web Design by The Design Lanka