ஏக்கிய ராஜ்யவும்' வடக்கு-கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் » Sri Lanka Muslim

ஏக்கிய ராஜ்யவும்’ வடக்கு-கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்

politic

Contributors
author image

A.L.நிப்றாஸ்

வேட்டைக்குப் போவதாகக் கூறிக் கொண்டு, தமது துப்பாக்கிக்கு எண்ணெய் போட்டு மினுக்கியவாறு, பெரும் இறுமாப்புடன் காட்டுக்குக்குச் செல்கின்ற வேட்டைக்காரர்கள், கடைசியில் எதையும் வேட்டையாட முடியாத கையறுநிலையில், வெறுங்கையுடன் வீட்டுக்கு வரும் வெட்கத்தில், வரும் வழியில் யாராவது வியாபாரியிடம் சிறியரக மீன் வாங்கி வந்து வீட்டாரை சமாளிப்பது போல் ஆகியிருக்கின்றது…. முஸ்லிம் அரசியலின் இன்றைய நிலை.

நாட்டில் ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தை ஜாலங்கள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கருத்தாடல்களும் புத்துணர்வு பெற்றிருப்பதாகத் தெரிகின்றது. சிங்கள பெருந்தேசியமும் தமிழ் தேசியமும் தத்தமது குறிகளில் மிகக் கவனமாக இருக்கின்ற சூழலில், முஸ்லிம் தேசியம் மட்டும் இலக்குத் தப்பி குறிவைத்து விட்டு, அல்லது துப்பாக்கியையும் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பப் போகின்றதா என்ற கேள்வி நம்முன்னே எழுந்து நிற்கின்றது.

புதிய அரசியலமைப்பு
2015ஆம் ஆண்டு கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென உப குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கைக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பின்னர், அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகள் மெத்தனமடைந்தன.

பெருந்தேசியத்தில் பெரும்பாலானோர், ‘தற்போதிருக்கின்ற அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வந்தாலே போதும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் அவசியம் இல்லை’ என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றர். முக்கிய பௌத்த தேரர்களும் இவ்விதமான அறிக்கைகளையே விட்டிருந்தனர். ஆனால் அரசாங்கத்திற்கு அன்றும் இன்றும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் மற்றும் தமது அரசியல் அறிவு பற்றி பெருமைப்பட்டுக் கொள்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இடைக்கால அறிக்கையின் ஆளஅகலங்கள், பாரதூரமான தன்மை பற்றியெல்லாம் பெரிதாக கவனத்தில் எடுத்தமாதிரி தெரியவில்லை.

குறிப்பாக இடைக்கால அறிக்கையின் மொழிபெயர்ப்புக்களை பொறுத்தமட்டில் ‘ஒருமித்த நாடு’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’ மற்றும் ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்குழப்பங்கள் காணப்படுகின்றன. அத்;துடன், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள கீழ்வரும் பரிந்துரைகளும் முஸ்லிம்களை மனக்கிலேசத்திற்கு உள்ளாக்குவதாக அமைந்திருந்தன.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று வரையும் நீங்கள் நினைப்பது போல் பாதகமாக எதுவும் நடக்காது என்ற ஒரே வரியிலேயே பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, அது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட முடியாது. அதாவது,

இரண்டு அல்லது அதிகமான மாகாணங்களை தனிஅலகாக உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் உரிய மாகாண சபைகளில் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்யலாகாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஆட்சிக் கட்டமைப்பில் தளம்பல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால கூறியிருந்தார். ஆனால் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்கிப் போகின்ற அரசியல்வாதியாக கருதப்படுகின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தமை நினைவூட்டத்தக்கது.

இதற்கெதிரான பரப்புரைகள், ‘தமிழர்களுக்கு ரணில் அரசாங்கம் தனிநாடு கொடுக்கப் போகின்றது’ என்ற எல்லை வரை விரிவடைந்திருந்தது. இப்பின்னணியில்,இலங்கையின் தாரக மந்திரமான ‘ஒற்றையாட்சிக்கு’ அரசாங்கம் குந்தகம் விளைவித்து விடுமோ என்ற ஐயப்பாடு சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அதுபற்றி ஏதாவது கேட்கப்பட்டதோ தெரியாது, ஆயினும் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போது ‘நாடு ஒற்றையாட்சி என்ற தன்மையில் இருந்து மாறுபடாது’ என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்றும், சிங்களத்தில் ‘ஏகித்த ராஜிய’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பொருத்தமான ஆங்கிலச் சொல்லொன்று குறிப்பிடப்படாமல் அதிலும் சிங்கள சொல்லே ஆங்கில எழுத்துருவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இவ்விடத்தில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.

அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்களுக்கு இடையில் ஆங்காங்கே வேறுபாடுகள் உள்ளன என்பதை, அவற்றை ஒப்பிட்டு நோக்குவோர் அறிவார்கள். இடைக்கால அறிக்கையில் மேற்குறித்த சொற்கள் அவ்விதம் மொழிபெயர்ப்புக் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது தமிழர்களை திருப்திப்படுத்த ஒரு சொல்லும் சிங்கள மக்களை கலவரமடையாமல் செய்வதற்கும் ஆங்கில உலகை (வெளிநாடுகளை) சமாளிப்பதற்காகவும் இன்னுமொரு சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி அப்போதிலிருந்தே கேட்கப்பட்டு வருகின்றது.

மயக்கமான வார்த்தைகள்
இதுவிடயத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெளிவின்மைகள் இருப்பதாக தோன்றுகின்றது. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’ என்பதற்கு ‘ஏக்கிய ராஜிய’ என்ற சொல்லையே ஒத்தகருத்துடைய சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டும் வௌ;வேறு உள்ளர்த்தங்களைக் கொண்டவை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக, சுமந்திரன் எம்.பி.போன்றோர் இவை இரண்டும் ஒன்றல்ல என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிகின்றது. .

அப்படியானால், உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒருமித்த நாடு, ஏகித்த ராஜிய என்ற சொல்லாடல்கள் உள்ளர்த்தத்துடன் சூசகமாக குறிப்பிடப்பட்டிருந்தால் ஒன்றில் தமிழர்களோ அல்லது ஏனைய இரு இனங்களோ ஏமாறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த இடத்தில்தான் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

ரணில் விக்கிரசிங்க அல்ல யார் வந்தாலும் சிங்கள மக்களையோ மகாநாயக்கர்களையோ ஒருபோதும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற அடிப்படையில் நோக்கினால், இந்த சொல்லாடலில் ஒற்றையாட்சி என்பதே சரி என எடுக்கப்படுமாயின் தமிழர்களின் தாகம் தீராது. அத்துடன், நாடு இப்போதிருப்பது போல இருக்கும் என்று கூறலாம். ஆனால், ஒருமித்த நாடு (யுனைட்டரி ஸ்டேட்) என்பதே சரியானதாக எடுத்தாளப்படுமாயின், வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றது.

அதாவது, ‘இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணத்தினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜிய ஃ ஒருமித்த நாடாக நாடாகும்’ என்று இடைக்கால அறிக்கையில் கூறப்படுவதன் ஊடாக மத்திய மற்றும் மாகாண அரசுகளை சமாந்திர நிலைக்கு கொண்டு வருவதன் ஊடாக சமஷ்டியின் இலட்சணங்களைக் கொண்டு வருவதாக தோன்றுகின்றது என்று முஸ்லிம் அரசியல் ஆய்வாளரான வை.எல்.எஸ்.ஹமீட் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருவேளை மிகச் சூசகமான முறையில் சமஷ்டி போன்றதொரு தீர்வு வழங்கப்படுமாயின் அதில் சுயநிர்ணயம் நீண்டகாலத்தில் எவ்விதமான கருவியாக பாவிக்கப்படலாம் என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் படித்தறிய வேண்டும். எது எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றைய இனமான முஸ்லிம்களிற்குரிய பங்கு அல்லது உப தீர்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது முதலாவது விடயமாகும்.

மாகாண இணைப்பு
இதேவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணமாக இருக்கும் என்ற வாக்கியத்தின் அடிப்படையிலோ அல்லது ஒருமித்த நாடு அல்லது சமஷ்டி மாதிரியிலான தீர்வொன்று முன்வைக்கப்படுவதன் ஊடாகவோ வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமிழ் தேசியம் பகீரத பிரயத்தனங்களை எடுக்கின்றது, இன்னும் எடுக்கும் என்பது பட்டவர்த்தமானது. இது முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த முக்கிய விடயமாகும்.

கிழக்கிலேயே பிறந்து அங்கேகே அரசியல் செய்து வருகின்ற தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கவே வேண்டும் என்றே சொல்லி வருகின்றார். வடபுல மக்களின் எம்.பி.யாக இருந்துகொண்டு வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் செய்யும் மக்கள் காங்கிரஸ் தலைவர் தலைவர் றிசாட் பதியுதீன் இவ்விரு மாகாணங்களும்; இணைக்கப்படக் கூடாது என்று முன்னமே கூறியிருந்தார்.

ஆனால், கண்டி மாவட்ட மக்களின் எம்.பி.யாக இருந்து கொண்டு மேற்குறிப்பிட்ட இவ்விரு மாகாணங்களிலும் அரசியல் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்று இதுவரைக் கூறவில்லை. தொடர்ந்து மழுப்பலான கருத்துக்களையே அவர் கூறி வருகின்றார். அண்மையில் கூட இவ்விதம் கருத்து வெளியிட்டிருந்தமை மிகுந்த அவதானத்தைப் பெற்றிருக்கின்றது.

தமிழ் மக்கள் ஐம்பது வருடங்களாக தமது உரிமைக்காக போராடி வருகின்றனர். ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பிறகு தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமற்றுப் போனது என்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும், இணைந்த வடகிழக்கிலேயே தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றும் பல வருடங்களாக கோரி வருகின்றது.

எனவே, தமிழர்கள் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென வேண்டுவதோ, இணைந்த வடகிழக்கில் தீர்வுத்திட்டம் கோருவதோ பிழையென்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதே இங்குள்ள முஸ்லிம்களின் நிலைமாறாத நிலைப்பாடாகும்.

பழைய அனுபவம்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்காலிகமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. நிரந்தரமாக இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படாமலேயே ஒரு தற்காலிகமான இணைப்பு சுமார் 19 வருடங்களாக கிட்டத்தட்ட நிரந்தரமான இணைப்பு போலவே அமுலில் இருந்தது.
இந்தக் காலத்தில் முஸ்லிம்கள் பட்ட அனுபவங்கள் சொல்லி மாளாதவை. அரசியல் ரீதியாகவும் ஆயுதப்பலம் கொண்டும் வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டதும் பெரும் அழிவுகளைச் சந்தித்ததும் வடகிழக்கு இணைந்திருந்த காலத்திலேயே ஆகும். இந்த நிலையிலேயே சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பின் பிரகாரம், 2007ஆம் ஆண்டு இவ்விரு மாகாணங்களும் பழையபடி தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

இப்போதிருக்கின்ற கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும் கூட, இணைந்த வடகிழக்கை விட தனித்தனியான மாகாணங்களே வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற எல்லா இனங்களுக்கும் பொதுவில் அனுகூலமானது. குறிப்பாக இணைந்த வடகிழக்கை விட தனித்த கிழக்கில் முஸ்லிம்கள் சற்று நிம்மதியாக வாழ்கின்றனர் எனலாம். எனவே இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதற்கான எந்தத் தேவையும் முஸ்லிம்களுக்கு கிடையாது.

முஸ்லிம்களின் நியாயம்
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் தமிழர்களுடன் நெருக்கமாவதை தவிர முஸ்லிம்களுக்கு தமிழர்களின் அளவுக்கு பெரிய அனுகூலங்கள் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டால் நிச்சயமாக தமிழர் அரசியல் அதிகாரம் முஸ்லிம் அரசியலை மேவும், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் குறையும், பொலிஸ் அதிகாரம் போன்றவை வழங்கப்பட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்பது உள்ளிட்ட பல பாதகங்கள் இருக்கின்றன. எனவே முஸ்லிம்கள் அதற்கு சம்மதிக்கப் போவதில்லை.

தென் மாகாண மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக மேல் மாகாண மக்களின் விருப்புக்கு மாறாக அதனை எவ்வாறு தெற்குடன் இணைக்க முடியாதோ அதுபோலவே, கிழக்கு முஸ்லிம்கள் (மற்றும் தமிழர்களின்) சம்மதம் இன்றி வடக்குடன் கிழக்கை இணைக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் தேவைக்காக அல்லது றவூப் ஹக்கீம் போன்றோரின் நிலைப்பாடுகளுக்காக, கிழக்கில் வாழ்கின்ற பெருந் தொகையான முஸ்லிம்களின் அபிலாஷைக்கு புறம்பாக செயற்பட முடியாது.

எல்லாவற்றுக்கும் முன்னதாக, நாட்டை ஆளுவது சிங்கள கடும்போக்காளர்களின் பின்புலத்தைக் கொண்ட ஆட்சியாளர்களாக இருந்தாலும், மென்போக்கு இனவாதிகளின் ஆதரவை பெற்ற ஆட்சியாளர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ சாதகமாக எந்த அரசாங்கமும் செயற்படாது என்பதை முதலில் இரு சிறுபான்மையினங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். நேரடியாக தரமாட்டோம் என்று சிலர் சொல்வர், சிலர் சுற்றிவளைத்து காலத்தை இழுத்தடிப்பர். எனவே தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பது என்பது இன்னும் நிச்சயற்றதாகவே தெரிகின்றது.

ஆனபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான தீர்வைப் பெறுவதில் முழுமூச்சுடன் செயற்படுவோடு அதற்கு சர்வதேச ஆதரவும் இருக்கின்றது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு உள்ளடங்கலாக அனைத்து முக்கிய விடயங்களிலும் கனகச்சிதமாக காய்களை நகர்த்துவதுடன், இம்முறை பிரதமருக்கு ஆதரவு வழங்கிய வேளையிலும் முஸ்லிம் கட்சிகளைப் போல் சும்மா ஆதரவளிக்காமல், த.தே.கூ. ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவளித்திருக்கும்.

அந்த வகையில், உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது வேறு ஏற்பாடுகளின் மூலமாகவோ சமஷ்டி போன்ற ஒரு தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்படுமாயின் முஸ்லிம்களுக்குரிய உப தீர்வு கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று ஏதாவது அடிப்படையில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் முஸ்லிம்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதாவது, அவ்வாறான எந்த இணைப்புக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பி.களும் துணைநிற்க கூடாது என்பதே முஸ்லிம்களின் வேண்டுதலாகும்.

உத்தேச அரசியலமைப்பில் இதுவரைக் காட்டாத அக்கறையை இனியாவது காட்ட வேண்டும். ஏக்கிய ராஜிய மற்றும் ஒற்றையாட்சி என்ற சொற்கள் உண்மையில் எதனைக் குறிக்கின்றன என்பதையும், உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் அதிகாரப் பகிர்வுக் கோட்பாடுகள் என்ற பிரிவின் 2ஆம் உப பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாகாணங்களை இணைத்தல் பற்றிய 3 பரிந்துரைகளின் ஆழ அகலங்களையும், முஸ்லிம்களின் கோணத்தில் நின்று நோக்க வேண்டும்.

தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கும் இழப்புக்களுக்கும் ஈடாக நியாயமான தீர்வொன்று கிடைப்பதற்கு முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் தம்மாலான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். அதேபோன்று முஸ்லிம்களின் அபிலாஷைகளை தமிழர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறுத்;தில், முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எக்காரணங் கொண்டும் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடக் கூடாது. அப்படிச் செய்பவர்கள் முஸ்லிம்களின் அரசியல்வாதிகளாக அதன்பிறகு இருக்கவும் முடியாது.

‘பிச்சைக்காரனின் புண்ணைப்போல’ முஸ்லிம்களின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை கையாள்வது வரலாற்று துரோகத்திலேயே சேரும்.
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 06.01.2019)

Web Design by The Design Lanka