கிரான் சம்பவம் ; பிரச்சினை இதுதான்... » Sri Lanka Muslim

கிரான் சம்பவம் ; பிரச்சினை இதுதான்…

IMG_4006

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Thilipkumaar Ganeshan

சம்பவம் நடந்தது கிரானில் அல்ல.
கொம்மாதுறை கிராமத்தின் எல்லை முடிவில் அமைந்துள்ள பகுதியில்.

ஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து வருகிறார்.

இது போன்று பண்ணை நிலம் மாதிரி
பெரு விஸ்தீரணம் கொண்ட தனியார் நிலங்கள் பல இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன.

அவை ஒவ்வொன்றும் 10ஏக்கர் 15 ஏக்கர் என்று பிரிக்கப்பட்டு தனித்தனி நபர்களுக்குச் சொந்தமானவையாகும்.

அதிலே ஒரு துண்டு நிலம் தான் முஸ்லீம் இளைஞருக்குச் சொந்தமானது.

அதுவும் அவர் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியது.

பிரச்சினை இதுதான்…

ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞருடைய காணிக்குப் பக்கத்தில் உள்ள Land Officer ஆன கிரான் தமிழருடைய காணிக்கும் பொது வேலியை அமைத்து எல்லை நிர்ணயம் செய்வதில் பல முறை சிக்கல்கள் எழுந்துள்ளன.
இது என்னுடைய எல்லை,
அது உன்னுடைய எல்லை என்பதாக இந்த முரண்பாடு நீண்டுகொண்டே வந்திருக்கிறது. ஒரு வருடம் முன்பாக இது ஒரு தகராறாகி போலீசுக்கு சென்றபோது இருவரின் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு நீதிமன்ற உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இருந்தும் இரு தரப்பும் நீதிமன்றம் போகவில்லை என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ச்சியான முரண்பாடு நீடித்து வந்த நிலையில் கடந்த வாரம் முஸ்லீம் இளைஞரை மோசமாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்று இதற்கு காரணமான பக்கத்து காணி உரிமையாளரான “Land officer ” கைது செய்யப்பட்ட நிலையில்
14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணையில் தாக்கிய, படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஏனையவர்களும் கைது செய்யப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

இரண்டு நபர்களிடையே நடந்த காணித் தகராறிற்கு அவர்கள் சார்ந்த சமூகங்களை வசைபாடுவதும், தூற்றுவதும், குற்றம் சொல்வதும் நியாயமில்லை.

தனி மனித ஆசைகள், சொத்துக்கள் குறித்த சிக்கல்களை ஒட்டு மொத்த சமூகங்களின் மீதும் சுமத்தி எல்லா ஜனங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட முடியாது.

மற்றும்படி காடைத்தனம், அராஜகம், வன்முறை இவைகளை யார் புரிந்திருந்தாலும் சமரசமின்றி அவர்கள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

முடிந்தளவு ஏறாவூர், கொம்மாதுறை உள்ளிட்ட பகுதியியை சேர்ந்த நண்பர்களிடம் விசாரித்து இந்த பதிவினை போட்டிருக்கிறேன்.

சோனி, தமிழனென்று ஆளாளுக்கு வசைபாடுவதை விடுத்து தீர விசாரியுங்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் கவனமாக, பொறுப்பாக விடயங்களை கையாளுங்கள்.

Web Design by The Design Lanka