சாவகச்சேரி பகுதியில் போலி நாணயத்தாளுடன் இருவர் கைது. » Sri Lanka Muslim

சாவகச்சேரி பகுதியில் போலி நாணயத்தாளுடன் இருவர் கைது.

01 (1)

Contributors
author image

Farook Sihan - Journalist

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(10) அதிகாலை தென்மராட்சி பகுதியில் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

புதன்கிழமை(9) மாலை போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை யாழ்ப்பாண பகுதியில் விநியோகிப்பதற்கு ஒப்பந்தம் பேசப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து குறித்த போலி நாணயத்தாள் விநியோகஸ்தர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் திருகோணமலை பேரூந்தில் யாழ்நோக்கி வந்த போலி நாணயத்தாள் விநியோகஸ்த்தர்கள் இருவரும் கொடிகாமம் பகுதியில் இறங்கி டிப்பர் வாகனம் ஒன்றில் ஏறி கைதடிப்பகுதிக்கு சென்று நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்டபோது சாவகச்சேரி பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் 20 ஐயும் கைப்பற்றியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக ஒரு லட்சம் போலி நாணயத்தாள்களை ரூபா முப்பதாயிரத்துக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 25, 26 வயதுகளையுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சாவகசசேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka